Friday, 19 April 2013

த குரூட்ஸ் (The Croods) - 3D

நிமேஷன் படம் என்றாலே குழந்தைகள் ரசிப்பதற்காக நாம் செய்யும் தியாகம் போன்ற மனநிலையுடம் தான் அவர்களை தியேட்டருக்கு அழைத்து செல்கிறோம். சோகம், நகைச்சுவை  போன்ற கட்டங்களில் அவர்களின் எதிர்விளைவு என்ன என்று கடை கண்ணால் பார்த்து கொள்கிறோம்.  படம் முடிந்து வெளியில் வரும் போது அவர்கள் ரசித்து பார்த்தார்களா என்று ஒரு முறைக்கு மூன்று முறை கேட்டு கொள்கிறோம். அவர்கள் 'ஆம்' என்றால் நமக்கு பரம திருப்தி. ஆனால் சில வேளைகளில் குழந்தைகளையும்  மீறி நாமும் படத்திற்குள் ஈர்க்கப்பட்டு, அவர்களை போலவே சிரித்து மகிழ்ந்து நிறைவாக வெளியேறும் அற்புத தருணங்களும் உண்டு. அது போன்ற ஒரு உணர்வை தந்த படம் தான் 'த குரூட்ஸ்' - 3D


படத்தின் கதை சுருக்கத்தை 'the world's first family road trip ' என்று பட போஸ்டரிலேயே போட்டு விளம்பர படுத்தி விடுகிறார்கள். 'ஒ அவ்வளவு தானே' என்று போய் உட்கார்ந்தால் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாவீர்கள். காரணம் கற்பனைக்கு எட்டாத நிறங்களில், முற்று முழுதாக கற்பனையில் உருவான உயிரினகள், தாவரங்கள், பூகோள அமைப்புகளுடன், அழிகிய ஆனால் அதிரவைகாத 3D யில் தருகிறார்கள். மேற்கூறிய அனைத்தும் ஏற்கனவே பார்த்த 'Avtaar', 'Ice Age: Continental Drift ' போன்ற திரைப்படங்களை ஞாபக படுத்தினாலும் பல வழிகளில் தனித்து ரசிக்க கூடியவையாகவே இருக்கின்றன.

கதை, கற்காலத்தில் வாழும் ஒரு குகை மனிதனின்  குடும்பத்தை பற்றியது. அந்த குடும்பத்தில் கண்டிப்பான குடும்ப தலைவன் (Grug - Nicholas Cage), கணவனின் கட்டுபாடுகளை சகித்து வாழும் தலைவி (Ugga - Catherine Keener), தந்தையின் கொள்கைகளுக்கு போராளியாக 'டீன்' வயது மகள் (Eep - Emma Store), அவளைவிட சில வருடங்கள் குறைவான அப்பாவி மகன் (Thunk - Clark Duke), ஆக்ரோஷமாக வழியில் வருவதை எல்லாம் கடித்து குதற முற்படும் தவழும் பருவத்து பெண் குழந்தை (Sandy - Randy Thom) மற்றும் "இன்றாவது சாகமாட்டாளா?!" என தலைவன் ஏங்கும் வயதான மாமியார் (grandma - Cloris Leachman)என கூட்டாக ஒரு குகையில் முண்டியடித்து வாழ்கிறார்கள். 


க்ரக், தனது குருட்ஸ் குடும்பத்தை கண் போல் காப்பவன். சுற்றியள்ள ஆபத்தான விலங்குகள், மேலிருந்து விழும் பாறைகள், கும்மிருட்டு  போன்றவற்றில் இருந்து பாதுகாக்க கண்டிப்பான விதிமுறைகளை விதித்து அவற்றை வேதமாக பின்பற்றுபவன், இரை தேட அதுவும் சூரியனிருக்கும் நேரத்தில் அதுவும் குறிப்பிட்ட எல்லைக்குள் அதுவும் குடும்பமாக மட்டுமே குகையை விட்டு வெளியே வர வேண்டும் என்பது தான் அவன் பின்பற்றும் விதி. இரை தேடுவதும், பின் குகைக்குள் அடைந்து கிடப்பதும் மட்டுமே வாழ்க்கை அல்ல. சுதந்திரமாக, எல்லைகளுக்கப்பால் சென்று புதியவைகளை அறிந்து கொள்ள முற்படும் மகள் ஈப், தந்தையின் கட்டுபாடுகளை மீறி ஒரு இரவில் குகையை விட்டு வெளியேறுகிறாள். அன்று உலக ஞானம்  ஓரளவு உடைய, பெற்றோர்களை இழந்த ஒரு நாடோடி இளைஞனை (Guy - Ryan Reynolds) சந்திக்கிறாள். அவன் மூலமாக அவள் குடும்பம் வசிக்கும் இடம் எரிமலைகளால் அழிந்து போக போகிறது என்று அறிகிறாள். அதை எடுத்து சொல்லும் போது நம்ப மறுக்கும் தந்தை, நில அதிர்வுகளால் தன் கண் முன்னே தன் குடும்பம் வாழும் குகை அழிந்து போவதை பார்த்து வேறு வழியின்றி அந்த இளைஞன் கூறும் உயரமான இடத்தை நோக்கி தன் குடும்பத்துடன் பயண படுகிறான்.

பலசாலியான ஆனால் உலக அறிவற்ற தந்தை, புத்திசாலியான நோஞ்சான் இளைஞன். தந்தையை விட்டு மெல்ல மெல்ல விலகி இளைஞனின் வார்த்தைகளுக்கு கட்டுப்படும் மகள். அதனால் ஏற்படும் விரிசல்கள். அனைவரும் எதிர் கொள்ளும் வித்தியாசமான் உயிரனங்கள், ஆபத்துக்கள். இவைகளை மீறி குரூட்ஸ் குடும்பம் எரிமலையில் இருந்து மொத்தமாக தப்பித்ததா என்பதை சுவாரசியமாகவும், கண்ணுக்கு விருந்தாகவும் மட்டுமல்லாது பாடமாகவும் சொல்லியிருக்கிறார்கள்.


மேலோட்டமாக பார்க்கும் போது அது சிறந்த தொழில் நுட்பத்துடன் கூடிய சகல வயதினரும் விரும்பும் படம் என்றாலும் அதையும் தாண்டி குறியீடுகள் மூலமாக காட்சியமைப்பும், கதையமைப்பும் சேர்ந்து வேறொரு அறிவு சார்ந்த தளத்தில் படம் பயணிப்பதை பார்த்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. இங்கு தான் படத்தை எழுதி இயக்கியிருக்கும் டி மிக்கோ மற்றும் (How to Train Your Dragon புகழ்) கிரிஸ் சாண்டர்ஸ் ஆகிய இருவரின் ஆளுமை  தனித்து நிற்கிறது. உதாரணமாக Croods என்பதே crude (செப்பமற்ற) என்ற பொருளை அடிப்படையாக வைத்தே உருவானதாக தோன்றுகிறது. குகை வாழ் மனிதர்களாக உருவகப்படுத்தப் பட்டிருப்பது இன்றும் எண்ணக் குகைகளில் வாழ்பவர்களியே குறிப்பிடுவது போல் உள்ளது. வாழ்க்கை என்பது என்றுமே ஒருவரின் சந்தோஷ எல்லைக்குள் (comfort  zone ) வாழ்ந்து முடிவதில்லை எனும் பாடத்தை மட்டுமல்லாது ஒரு தந்தையின் பொறுப்புகளையும், குடும்பத்தை காக்க படும் அவஸ்தைகளையும். வளர்ந்த பெண் பிள்ளைகள் தங்களை விட்டு விலகி போகும் நிதர்சனங்களையும்,  குடும்பமே குடும்ப தலைவனை நம்பி இருந்தாலும் குடும்ப தலைவன் என்பவன் ஒரு தனி போராளி என்று பொருள் படும் கடைசி காட்சிகளையும்   அமைத்திருக்கிறார்கள். கூடவே முதல் நெருப்பு, முதல் பாதணி, மாமியாரை பொறுக்க மாட்டாத குடும்ப தலைவன் என கேலி கிண்டல்களை அள்ளி தெளித்திருக்கிறார்கள். அநிமேஷன் தோற்றங்களை பொறுத்த வரையில் குறிப்பாக கதாநாயகியாக வரும் மகளின் உருவத்தை தங்க பதுமை போல் காட்டாது பல்கேரியா நாட்டு பழு தூக்கும் பெண்ணை போல வடிவமைத்திருப்பது மிக பெரிய ஆறுதல் என்பதை விட இயக்குனர்களின் தனித்தன்மை என்றே கூற வேண்டும்.

கண்டிப்பாக குடும்பத்துடன் படத்தை பாருங்கள். படம் முடிந்து வரும் போது குழந்தைகளுடன் படத்தை பற்றி உரையாடுங்கள். படத்துடன் வரும் காட்சி அமைப்புக்களுடன் மனித வாழக்கையை தொடர்பு படுத்தி காட்டுங்கள். நிச்சயம் அது அவர்கள் மனதில் பசு மரத்து ஆணி போல் பதியும்.



4 comments:

  1. குடும்பத்தோடு பார்க்கலாம் போல... நல்ல விமர்சனம்... பாராட்டுக்கள்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக குடும்பத்தோடு பார்க்கலாம். எங்கள் முதல் பதிவின் முதல் 'காமெண்ட்' எழுதி மறக்க முடியாதவராகி விட்டீர்கள். உங்கள் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

      Delete
  2. மிகச்சிறப்பான விமர்சனம் ..பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. பொதுவாக பல படங்களை பார்க்க நேர்ந்தாலும், மனதை கவரும் ஒரு சிலவற்றிற்கு மாத்திரமே விமர்சனம் எழுதலாம் என்று இருக்கிறேன். உங்கள் ஊக்கமளிக்கும் பாராட்டு என் எண்ணத்தை வழி மொழிவதாகவே இருக்கிறது.

      Delete

உங்கள் கருத்து...