Monday 24 June 2013

ஆபிரகாம் லிங்கனும் நானும்! - 5

இதற்கு முந்தைய பாகத்தை படிக்க கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்...

ஆபிரகாம் லிங்கனும் நானும்! - 4

 ஆம்... அந்த நாளும் வந்தது!

USS ஆபிரகாம் லிங்கனில் தங்கப் போவது ஓர் இரவு தான் என்பதால் சக்கரம் வைத்த சிறிய பயண பொதி ஒன்றில் சில மாற்று உடைகளையும், காலை கடன்களுக்கு தேவையான பொருட்களையும் முதல் நாள் இரவே தயார் செய்து வைத்து விட்டேன். மேலும் கப்பலில் ஏதேனும் வாங்குவதற்கு அவசியம் ஏற்படின் அங்கு அமெரிக்க டாலர்களை  மட்டுமே ஏற்று கொள்வார்கள் என்று SATCO ஏற்கனவே கூறியிருந்ததால், சில அமெரிக்க டாலர் நோட்டுக்களையும் முதல் நாளே வாங்கி வைத்து கொண்டேன். காலை 9 மணியளவில் விமான நிலையத்தின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் படைவீரர்களுக்கான சிறப்பு நுழைவாயிலில் கூடவேண்டும் என்பதே எமக்கு இடப்பட்டிருந்த கட்டளை. 



காலை ஆறு மணிக்கு எல்லாம் எழுந்து விட்டேன். எழுந்த சில நிமிடங்களிலேயே பரபரப்பு தொற்றிக் கொண்டது. இருந்தும் ஆழ்ந்த மூச்சுகள் விட்டு மனதை சாந்தமாக்கிக் கொள்ள முயன்றேன். எனது இருப்பிடத்தில் இருந்து விமான நிலையத்துக்கு காரில் வேக கட்டுபாடுகளை மதித்து செல்வதானால் 30 நிமிடங்களில் சென்று விடலாம். எனினும் எதிர்பாராது ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை கருத்தில் கொண்டு ஒரு மணி நேரம் முன்னதாகவே கிளம்பி விடுவதாக திட்டமிட்டுக் கொண்டேன்.  என் அலுவலகத்தில் இருந்து மேலும் 5 பேர் வருவதாக இருந்தும், அவர்களில் ஒருவரேனும் நான் வசிக்கும் பக்கம் வசிப்பதில்லை என்பதனால் நான் தனியாக காரில் விமான நிலையம் சென்று அங்கேயே வண்டியை விட்டு விட்டு மறுநாள் வரும் போது எடுத்துகொண்டு வீடு வரலாம் என்று முடிவு செய்தேன்.



8 மணியளவில் சற்று படபடப்பாய் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் குடும்பத்தாரிடம் விடை பெற்று வண்டியை கிளப்பினேன். இயல்பாக வண்டியை ஓட்டுவது சற்று கடினமாகவே இருந்தது. எனவே சற்று கூடுதல் கவனத்தோடு வழமையை விட மெதுவாகவே வண்டியை செலுத்தினேன். மேற்கொண்டு எந்த அசம்பாவிதமும் நிகழாமல் 9:40 மணியளவில் விமான நிலையத்தின் சிறப்பு நுழைவாயிலை அடைந்தேன். அந்த நுழைவாயிலை காப்பவர்கள் அனைவரும் துப்பாக்கி ஏந்திய அமெரிக்க படையினர். வாயிலை அணுகி நான் வந்த நோக்கத்தை சொன்ன போது, அவர்களிடம் இருந்த ஒரு புத்தகத்தில் என்னுடைய பெயரை ஒப்பிட்டு சரி பார்த்த பின்னர் உள்ளே அழைத்து சென்று ஒரு பயணிகள் தங்கும் அறையில் உட்கார வைத்தனர். அங்கு என்னுடன் பயணம் செய்ய இருக்கும், ஏற்கனவே வந்து விட்ட ஒரு சிலரும் அமர்ந்திருந்தனர். அங்கிருந்தபடி கண்ணாடி சுவர்களின் ஊடாக தெரிந்த விமான ஓடுகளத்தை நோக்கினேன். அப்பொழுது தான் 'அது' கண்ணில் பட்டது...



என்னதான் விமான தாங்கி கப்பல்கள் தன்னிறைவு உடையதாக கட்டப்பட்டாலும் அவைகளில் இருந்து தினமும் கப்பலுக்கும் தரைக்குமான விமான போக்குவரத்து நடந்து கொண்டே இருக்கும். அதற்காக இயக்கப்படும் விமானகளை ஆங்கிலத்தில் 'Logistics Aircrafts' என்பார்கள். அவ்வகை விமானங்கள் தினமும் எடுத்து செல்லும் சரக்கை 'COD' என்பார்கள். அதன் விரிவு 'Carrier Onboard Delivery'. இந்த 'COD' இல் இடம் பெறுபவை அத்தியாவசிய சரக்குகள், தபால் மற்றும் மனிதர்கள். இந்த பணியை செய்யும் சரக்கு விமானங்களின் பிரதானமானது தான் C - 2 கிரெஹவுண்ட் (Greyhound). 'அது' தான் அங்கு இறக்கைகளை மடக்கி ஒரு தாய் பறவை போல் ஓடுகளத்தில் நின்றிருந்தது.



C - 2 கிரெஹவுண்ட்ஒரு விநோதமானா விமானம். அதை வடிவமைத்தவர்கள் குரூமேன் (Grumman) நிறுவனத்தினர். ஒரு விமானத்தின் விலை 39 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இது இரண்டு டர்போ ப்ராப் என்ஜின்களை கொண்டது. 26 ஆயிரம் கிலோ எடையை சுமந்து செல்ல வல்லது. 30 ஆயிரம் அடி உயரம் வரை பறக்க கூடியது. 343 நொட்ஸ் அதன் அதிக பட்ச வேகம். நீளம் 57 அடி 10 அங்குலம் ஆனால் அகலத்தில் தான் இதன் சிறப்பு இருக்கிறது. அதாவது நிறுத்தி வைக்கும் போது அகலம் 29 அடி 4 அங்குலம் ஆனால் பறக்க நினைக்கும் போது 80 அடி 7 அங்குலம். எப்படி சாத்தியம் என்கிறீர்களா? இந்த விமானத்தின் வடிவமைப்பு பறவைகளை பார்த்து அவைகளின் இறக்கை வடிவமைப்பின் உள்ளுயிர்ப்பை (inspiration) கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த விமானத்தால் இறக்கைகளை மடக்கி பின்னோக்கி திருப்பி வைத்து கொள்ள முடியும். விமான தாங்கி கப்பலில் விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும் இடத்தை சேமிப்பதற்கு ஏதுவாக  உருவாக்கப்பட்டது தான் இந்த வடிவம்.   
 

இந்த விமானத்தின் பின்புறத்தில் மிகப்பெரிய கீழ் நோக்கி இறங்கும் கதவு இருக்கிறது. இதன் மூலமாக தான் தபால், அத்தியாவசிய சரக்குகளான ஜெட் இயந்திரம் போன்றவற்றை ஏற்றுவார்கள். பயணிகளும் இதே கதவின் ஊடாக தான் சென்று அமரவேண்டும். மேலும் பயணிகள் இருக்கைகள் தேவைக்கு ஏற்ப இலகுவில் பொருத்தவோ களற்றவோ கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் இருக்கைகளை கழற்றி அவற்றுக்கு பதில் காயப்பட்டவர்களை கொண்டு செல்ல கூடிய படுக்கைகளை சில நிமிடங்களிலேயே பொருத்தி விட முடியுமாம். அவசியம் ஏற்படும் பொது 'Air drop ' என்று அழைக்கப்படும் வானத்தில் இருந்து பொருட்களை போடுவதற்கும்,  பாரசூட்டில் வீர்கள் குதிப்பதற்குமான வசதிகளும் இந்த விமானத்தில் இருக்கின்றன.


ஏற்கனவே நான் சேகரித்த தகவல்களின் படி நம்மை சுமந்து செல்ல இருக்கும் விமானம் அதுவாக தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். விமானத்தை சுற்றி சீருடையில் அமெர்க்க படை வீரர்கள் மும்முரமாக பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். இப்போது மேலும் சிலர் நாம் உட்கார்ந்திருந்த அறைக்கு வந்து விடவே பேச்சு சத்தம் அதிகரிக்க தொடங்கியது. என்னை தவிர என் அலுவலகத்தில் இருந்து வந்தவர்கள் 5 பேர். அவர்களில் இருவர் கனடா நாட்டவர். ஒருவர் அமெரிக்கர், ஒருவர் பிரித்தானியர், ஐந்தாமவர் நியூசிலாந்து நாட்டவர். எங்களுடன் இணைந்து கொண்ட இன்னொருவர் அமெரிக்க தூரகத்தை சேர்ந்த ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி. அவர் வந்தவுடன் தன்னை அறிமுகபடுத்திக் கொண்டார். இயல்பான நகைச்சுவை உணர்வு மிக்க மனிதர். அப்போது முதல் அவர் தான் எம் குழுவுக்கு தலைவர் போல் செயல்பட்டார். முதல் வேலையாக  எம் கடவுசீட்டுகளை (Passport) வாங்கி கொண்டு எம் சார்பில் குடியகழ்வு (Immigration) நடைமுறைகளை முடித்து கொண்டு வருவதாக சொல்லி சென்றார். நாம் நாட்டை விட்டு வேறொரு நாட்டின் கடல் எல்லையில் இருக்கும் கப்பலுக்கு செல்ல இருப்பதால் இந்த நடைமுறை. சென்றவர் 10 நிமிடங்களில் திரும்பி வந்து கடவுசீட்டுகளை கையளித்தார். இனி கூப்பிடும் போது போய் விமானத்தில் ஏறவேண்டியது தான் பாக்கி என்றார். என் வாழ்வில் முதன் முறையாக ஒரு விமான நிலையத்தில் VVIP போல் நடத்தபடுவதாக உணர்ந்தேன். நான் என் இருக்கையை விட்டு நகராமலேயே கடவுசீட்டில் ஸ்டாம்ப் அடித்து கொண்டுவந்து விட்டார்கள். 'இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே!" எனும் கண்ணதாசனின் பாடல் வரி இந்த சந்தர்பத்துக்கு பொருந்துமா என்று யோசித்து கொண்டிருக்கையில், படையணிகளில் உயர் பதவியில் இருக்கும் ஒருவருக்கான சீருடையில் கம்பீரமாக ஆறரை அடி உயர்ந்த மனிதர் ஒருவர் எம்மை நோக்கி வந்தார். வந்தவர் இன்னும் சில நிமிடங்களில் புறப்பட தயாராகுமாறு சொல்லிவிட்டு முதலில் இயற்கை உபாதைகளை கழிப்பதானால் அதை செய்து விடுங்கள்; விமானத்தில் அமர்ந்தால் எழுதிருக்க முடியாது என்றும் மேலும் நீங்கள் அணியவேண்டிய சில பிரத்தியேக உபகரணங்களை சில நிமிடங்களில் கொண்டுவருவார்கள்; அணிந்து கொள்ளுங்கள் என்றும் கூறி விட்டு சென்றார். எனக்கோ மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது!  

 தொடருவேன்...
 

Thursday 13 June 2013

ரிலீசுக்கு முன்பே 901 கோடி சம்பாதித்த படம்!

படம் தாயாரிக்க ஆன செலவு 225 மில்லியன் அமெரிக்க டாலர். (1120 கோடி இந்தியன் ரூபாய்). ஆனால் இன்றும் நாளையும் உலகெங்கும் ரிலீசாக இருக்கும் இந்த திரைப்படம் முதல் டிக்கட்டை விற்பதற்கு முன்பே 170 மில்லியன் அமரிக்க டாலரை (901 கோடி ரூபாய்), அதாவது படத்தின் முக்கால் பங்கு தயாரிப்பு செலவை சம்பாதித்து விட்டது என்றால் நம்புவீர்களா?! அதுவும் வெறும் 'Product Placement' என்று அழைக்கப்படும் பொருட்களை திரைப்படத்தில் பயன் படுத்துவதற்கான விளம்பர வருமானத்தின் மூலமாக மட்டும் இந்த ஈட்டப்பட்டுள்ளது. இப்போ  படம் என்னவென்றுஉங்களுக்கு சொல்லாமலே புரிந்திருக்கும்.

இல்லையெனில் அது தான் Man of Steel எனும் Superman திரைப்படம்.  .



ஹாலிவூட்டில் தற்போது ஆச்சரியாமாக பார்க்கப்படும் விஷயம் இது தான். அதாவது Man of Steel தான் இதுவரை வெளியான திரைப்படங்களிலேயே அதி கூடிய விளம்பர பொருட்களை பயன் படுத்திய படம். படுத்தப்பட்ட  பொருட்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 100 வரும். Nokia, Chrysler, Warby Parker glasses மற்றும் Wallmart என்பன அவற்றில் சில.



பொதுவாக ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இது போன்ற விளம்பரத்துக்காக, கம்பனிகள் தமது பொருளை படத்தில் வர வைப்பதற்கு பணத்தை செலவிடும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது. Aston Martin Car, Martini குடிவகை மற்றும் Omega கை கடிகாரங்கள் இதற்கு உதாரணம். ஆனால் சுப்பர்மானோ இம்முறை ஒருபடி மேலே போய் சந்தையில் இருக்கும் அநேக  புதுவித பொருட்கள் மற்றும் கருவிகளை பயன் படுத்துகிறார். சுப்பர்மான் படங்களை பார்போருக்கு தெரிந்திருக்கும், அவர்  சாதாரன மனிதனாக இருக்கும் போது அவர் பெயர் கிளார்க் கென்ட். சாதாரன கண்ணாடி அணிந்திருப்பார். ஆனால் இம்முறை படத்திலோ அவர் அணியும் கண்ணாடியோ வார்பி பார்கர்.


உண்மையில் எல்லா படங்களுக்கும் இவ்வாறான ஸ்பான்சர்கள் கிடைப்பதில்லை. காரணம் பொருட்களின் தயாரிப்பளர்களும் தமது பொருளின் இமேஜை மேம்படுத்த கூடிய படங்கள் மற்றும் பாத்திர படைப்பு உள்ள படங்களுக்கு மட்டுமே வாரி வழங்குவார்கள். அவ்வகையில் பார்த்தால் உலகறிந்த காமிக் புத்தக ஹீரோவான சுப்பர்மானுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கம்பனிகள் வரிசையில் நிற்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.


இதில் கவனிக்க கூடிய இன்னொரு அம்சம் என்னவெனில் இது போன்ற நூற்றுக்கும் மேலான ஸ்பான்சர்கள் சுப்பர் ஹீரோ திரைப்படங்களை தெரிவு செய்ய காரணம் அமெரிக்காவின் பாக்ஸ் ஆபிசில் வெற்றி பெற்ற படங்களில் அநேகமானவை சுப்பர் ஹீரோ அல்லது புனைவு (fictional) பாத்திர கதை அமைப்பு கொண்ட படங்களே. உதாரணங்களாக ஓஹோ என்று இல்லாமல் சுமாரான கதை அமைப்பை கொண்டிருந்தாலும் வசூலில் வெற்றி பெற்ற முந்தைய 'Superman, Superman Returns' படங்கள், 'Iron Man' படங்கள், மற்றும் 'Spiderman', 'Batman' படங்களை சொல்லலாம். ஏன் இன்று வரை உலகின் முன்னணி வசூல் திலகமாக இருக்கும் 'Avatar' ம் ஒரு புனைவு திரைப்படமே.



இது இப்படி இருந்தாலும், இதுவரை 'Man of Steel' படத்தை பற்றி வந்த விமர்சனங்கள், படம் தொழில்நுட்ப ரீதியிலும் காட்சிஅமைப்பு, நடிப்பிலும் நன்றாக இருப்பினும் கதை திரைகதையில் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தியாக இல்லை என்றே சொல்கின்றன. ஆனால் மேற்கூறிய விளம்பர வருமானத்தை கணக்கில் கொண்டால் படம் தயாரிப்பாளர் Warner Brothers க்கு இந்த படத்தை பொறுத்த வரையில் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. 


Sunday 9 June 2013

IPL எனும் WWF

90 களில் தான் முதன் முதலாக பஞ்சம் பிழைக்க கடல் தாண்ட வேண்டி வந்தது. புதிய வானம் புதிய பூமி! அதுவரை கேள்வி அறிவில் மட்டுமே இருந்த காலாச்சார அதிர்ச்சி என்பதை தாண்டி விஞ்ஞான முன்னேற்றம், உணவுப் பழக்கவழக்கங்கள், சொகுசு வாகனங்கள், பொழுது போக்கு அம்சங்கள் என அனைத்திலும் நிஜமாகவே ஒரு புது உலகம் சுற்றி சுழல்வதை கண்கூடாக பார்க்க கூடியதாக இருந்தது. கியர் மாற்ற தேவையில்லாத கார், நகரும் படிக்கட்டுகள், 1.44 MB டிஸ்க், டச் ஸ்க்ரீன் என ஆச்சரியங்கள் கலந்து கட்டி அடித்தன.



மாலை நேரங்களில் பொழுதுபோக்காக பார்க்கும் தொலைகாட்சியில் கூட ஆச்சரியங்களுக்கு குறைவில்லை. எடுத்துக்காட்டாக, 'Talk show ' என்று கூறப்படும் கலந்துரையாடல் நிகழ்சிகளில், குடும்பம், செண்டிமெண்ட், சாதனை என மனித வாழ்க்கையின் பல பரிமாணங்களை உள்ளடக்கிய, தற்போதைய கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் மாதாவாக்கிய "The Oprah Winfrey Show" என்பது ஒரு வகை.

இதுவும் 'டாக் ஷோ' தான், ஆனால் கூறு கேட்ட குடும்பங்களையும், மனித மனங்களின் வக்கிரங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தவர்களையும் கொண்டு வந்து உட்கார வைத்து, கலந்துரையாடல் என்ற போர்வையில் சட்டை, உள்ளாடை போன்றவற்றை கிழித்து சண்டை போட வைத்து விட்டு பின் கடைசியில் ஒருவரியில் நீதி சொல்லிவிட்டு போகும் "The Jerry Springer Show " என்பது இன்னொரு வகை. ஆனால் இவற்றிற்கும் மேலாக அந்நாளில் என்னை கவர்ந்த ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சி இருந்ததென்றால் அது தான் WWF.


நம்ம ஊர் பக்கங்களில் 'குஸ்தி' என்று தோரயமாக அழைக்கப்படும் மல்லுக் கட்டும் போட்டி நிகழ்ச்சி  தான் இந்த WWF எனும் World Wrestling Federation. இதில் 'Federation' என்ற வார்த்தை இருந்ததால், இதை அமெரிக்காவில் நடைபெறும் ஒரு அங்கீகரிக்கப் பட்ட போட்டி விளையாட்டு என்று நம்ப தோன்றியது. உண்மையில் இது போன்ற குஸ்தி போட்டியை நான் காண்பது இது முதல் தடவை அல்ல. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதன் முதலில் பயணிகள் பொழுதுபோக்கிற்காக CCTV பொருத்தப் பட்ட காலத்தில் இது போன்ற நிகழச்சியை தான் தொடர்ந்து ஒளிபரப்புவார்கள். அதில் உயரமான ஒரு மல்லன் நரைத்த முடி, நரைத்த தொங்கு மீசையுடன் பல்வேறு பட்ட எதிரிகளுடன் மோதுவார். ஆரம்பத்தில் எதிரி இந்த தொங்கு மீசையை புரட்டி எடுத்து, ஏறி குதித்து, ஒரு பதினைந்து நிமிடத்துக்கு நையபுடைத்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் எதிரி அடிக்க அடிக்க ஒரு மாதிரி விறைச்சு போய் PVC குழாய் கணக்கா எழுந்து நிற்பார் தொங்கு மீசை. அங்கே அரங்கில் கூடி இருந்து குஸ்தி பார்க்கும் மக்கள் எல்லாம் ஆர்பரிப்பார்கள். தொங்குமீசை கையை மடக்கி காதில் வைத்து சனங்கள் கத்துவதை காது குடுத்து கேட்பார். பின் தலை அசைப்பார். பின் அந்த போட்டி வளையத்தின் மறு கோடிக்கு சென்று மீண்டும் காது குடுத்து கேட்பார். இப்போது ரசிகர்கள் வாய் கிழிய கத்துவார்கள். தொங்கு மீசை மீண்டும் தலை அசைத்து ஆமோதிப்பது போல் பாவனை பண்ணுவார். இவை அனைத்தும் நடக்கும் போது எதிரி ஓய்வின்றி தொங்கு மீசையின் முதுகில் குத்திய வண்ணமே இருப்பார். இப்போது திடீர் என தொங்கு மீசை திரும்பி எதிரியை ஒரு பார்வை பார்ப்பார். எதிரி வெலவெலத்து போவான். அவன் சுதாகரிப்பதற்குள் அவன் தோளை பிடித்து தலை கிழாக தூக்கி ஒரு அடி அடிப்பார். எதிரி அசைவற்று கிடக்கும் போது, பரபரவென வளைத்தின் கயிற்றில் ஏறி எதிரி மேல் குதிப்பார் தொங்கு மீசை. அவ்வளவுதான்! அசைவற்று  கிடைக்கும் எதிரியை, இதற்கென இருப்போர் உருட்டி அள்ளி கொண்டு ஓடுவார்கள். தொங்கு மீசையோ கையை ஒருவாறு முன் நோக்கி மடித்து ஒரு மெல்லிய நடை நடந்து வெற்றியை கொண்டாடுவார். இந்த காட்சிகளை சென்ட்ரல் ரயில் நிலைய தொலைகாட்சியில் பார்த்திருந்தும், இந்த WWF ஐ பார்த்த போது தான் தெரிந்தது அவர் தான் பிரபல ஹல்க் ஹோகன் (Hulk Hogan).



நான் WWF ஐ ஒரு மதமாக பின்பற்ற ஆரம்பித்த பொது ஹல்க் ஹோகன் சற்று வயதாகி குஸ்தி போட்டிகளில் இருந்து விலகி கொண்டிருந்தார். அப்போது சூப்பர் ஸ்டார்களாக நாம் கொண்டாடியவர்கள் அண்டர்டேகர் (The Undertaker), பிரிட்டிஷ் புல் டாக் (British Bull Dog), அல்டிமேட் வாரியர் (Ultimate Warrior), டீசல் (Diesel) த ராக் (The Rock), ஷான் மைக்கல்ஸ் (Shawn Michaels), பிரெட் ஹார்ட் (Bret Hart), ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டின் (Stone Cold Steve Austin) போன்றோர். அதே நேரம் தீயவர்களாக நாம் வெறுத்தது அண்டர்டேகரின் தம்பி கேன் (Kane), இரும்பிலான நடு விரலை எதிரி வாயில் வைத்து அழுத்தும்  மான்கைண்ட் (Mankind), மலை பாம்புடன் வரும் ஜேக் ஸ்நேக் ராபர்ட்ஸ்.(Jake Snake Roberts), ஓவன் ஹார்ட் (Owen Hart), சைகோ சிட் (Psycho Sid), ஒரு 'மார்க்கமாக' உடை அணிந்து வரும் கோர்ல்ட் டஸ்ட் (Gold Dust) போன்றோரை.  இந்த போட்டிகளை வாரத்தின் வெவ்வேறு நாட்களில் ரெஸ்ல் மேனியா (Wrestle Mania), ராயல் ரம்பில் (Royal Rumble), லைவ் வயர் (Live Wire), சுப்பர் ஸ்லாம் (Super Slam) எனற பெயர்களில் ஒளிபரப்புவார்கள். ஒரு வேளை அந்த நாட்களை தவறவிட்டால் வீடியோ கடையில் VHS காசெட் வாங்கி பார்த்து விடுவதுண்டு. இந்த போட்டிகளில் குறிப்பாக முன்னணி வீரர்கள் பங்கு பற்றும் போட்டிகளில் ஒரு பின்னணி கதை இருக்கும். 



 கதைப்படி, ஒரு நல்லவர் ஒரு கெட்டவர் இருப்பார், இதில் நல்லவர் முறைப்படி விளையாடுவார். கேட்டவரோ என்னென்ன திருகுதாளம் பண்ண முடியுமோ அவ்வளவும் பண்ணி வெற்றி பெற முயற்சி செய்வார்; சில நேரங்களில் வெற்றியும் பெறுவார். உதாரணமாக கெட்டவர் ஒரு கவர்ச்சி பெண்ணுடன் வருவார். அந்த பெண்மணி கீழிருந்து ஏதோ எல்லாம் சொல்லி நடுவர் கவனத்தை திசை திருப்ப, நடுவர் பார்க்காத நேரம் இந்த கெட்டவர் விதி முறைகளுக்கு முரணாக நல்லவரை போட்டு அடித்து வெற்றி  பெறுவார். அரங்கில் பார்ப்போர் கடுப்பாகி கை கட்டை விரலை கீழ் நோக்கி அசைத்து 'ஊ' என்று ஊழியிடுவார்கள். தொலைகாட்சியில் பார்த்து கொண்டிருக்கும் நாமும் 'ச்சே' என்று அங்கலாய்ப்போம்.  'உன்னை அடுத்த போட்டியில் பார்த்து கொள்கிறேன் என்று சவால் விடுவார் நல்லவர். வேறு சில வேளைகளில் இந்த கெட்டவர் மைக்கை பிடித்து ஒரு உள்ளூர் வட்ட செயலாளர், ஒபாமாவை எச்சரிப்பது போல் நல்லவரை சகட்டுமேனிக்கு திட்டி எச்சரிப்பார். திடீரென இசை முழங்க, மின் விளக்குகள் மின்ன எங்கிருந்தோ நல்லவர் தோன்றுவார். உடனே அலறி அடித்து கெட்டவர் மக்களிடையே பாய்ந்து ஓடுவார். நல்லவர் ஒரு மடித்த இரும்பு நாற்காலியை தூக்கி கொண்டு மக்களிடையே புகுந்து அவரை தாக்குவார். தலையில் இருந்து இரத்தம் கூட கொட்டும் அளவுக்கு அடிபடுவார்கள். சில நேரங்களில் பெரிய சுத்தியலை தூக்கி கொண்டு கார்களில் கூட ஒருவரை ஒருவர் துரத்துவார்கள்; கண்ணாடிகளை உடைப்பார்கள். இதற்கும் மேலே ஒரு படி போய் ஒருவரின் விலை உயர்ந்த காரை இன்னொருவர் உடைப்பது, ஒருவர் காதலியை இன்னொருவர் அறைவது என பகைமை வாரா வாரம் வளர்ந்து, கடைசியில்  'என் கிட்ட மாட்டினே,,. உனக்கு கருமாதிதான்டா' என்று ஒருவரை பார்த்து ஒருவர் தொலைக்காட்சி கமிரா முன் அறைகூவல் விடுக்கும் அளவுக்கு போகும். நாமும் அவற்றை பார்த்து உச்சு கொட்டி, உணர்ச்சி வசப்பட்டு 'ஆமாண்டா அவனுக்கு ஒரு பாடம் கற்பிச்சா தாண்டா சரி' எனும் அளவுக்கு வந்து விடுவோம். வேறு சில நண்பர்கள் 'டேய் இது எல்லாம் செட்டப்புடா' என்றாலும் நாம் கேட்கமாட்டோம். "அது எப்படிடா இரண்டு வாரத்துக்கு முன்னால பவர் ஸ்லாம் ல அவன் நார்காலியால அடிச்சு மண்டையில இருந்து ரத்தம் எல்லாம் கொட்டிச்சு! அது எப்படிடா செட்டப் ஆகும்" என்று வாதம் செய்வோம்.

 

இப்படியாக நாளொரு குஸ்தியும், பொழுதொரு மல்லனுக்கு விசிறியாகவும் போய் கொண்டு இருக்கையில் ஒரு விளம்பரத்தின் மூலாமாக ஒரு திருப்பு முனை வந்தது. அதாகப்பட்டது, இந்த WWF நட்சத்திரங்கள் போடும் குஸ்தி நாமிருக்கும் நகருக்கும் வருகிறது என்பது தான் அந்த முனை.

அப்ப திருப்பு?

அதுக்கு  முதல் இன்னொரு விஷயமும் சொல்லியாகனும்.

இந்த WWF இல் பல ஹீரோக்கள் இருந்தாலும் நம்முடைய தலைவர் அண்டர்டேகர் தான். மனிதர் நீள சுருள் முடியால் முகத்தை மூடி நடந்து  வரும் அழகே அழகு தான். அவர் கூட பால் பேரர் (Paul Bearer) என்பவரும் வருவார். இந்த பால் பேரர் ஒரு முன்னாள் மல்யுத்த வீரர், அப்போது அண்டர்டேகரின் மனேஜர். கையில் எப்போதும் ஒரு குடுவை வைத்திருப்பார். கூடவே ஒரு அம்மானுஷ்ய தன்மை நிறைந்தவர் போல நடந்து கொள்வார். அந்த குடுவையில் பிணத்தின் சாம்பல் இருப்பதாகவும் அதில் இருந்து தான் அண்டர்டேகர் அபரிதமான சக்திகளை பெறுவதாகவும் போட்டி வர்ணனையாளர்கள் கூறுவர்.


ஆரம்ப ஐந்து வருடத்தில் தகப்பன் பிள்ளை போல் இருந்த அண்டர்டேகர் - பால் பேரர் உறவு திடீரென முறிந்து அண்டர்டேகரை விழுத்துவதே குறியாக பால் பேரர், அண்டர்டேகரின் பரம வைரியான மான்கைண்டுடன் கை கோர்த்து ஒரு எதிர்பார்ப்பை உருவாகுகிறார். இப்படி சில மாதங்கள் உருண்டோடியபின் திடீரென பால் பேரர் தன்னிடம் அண்டர்டேகர் பற்றிய ஒரு ரகசியம் இருப்பதாகவும் அதை வெளியிட்டால் அண்டர்டேகர் தாங்கமாட்டார் என்றும் அறிவிக்கிறார். இந்த அறிவிப்பினால் வெலவெலத்து போகும் அண்டர்டேகர் மீண்டும் பால் பேரர்ருடன் இணைகிறார். இப்போது பால் பேரர் அண்டர்டேகரை ஒரு அடிமை போல் நடத்துகிறார். இப்படி சில மாதங்களுக்கு பால் பேரரின் வசவுகளையும், சித்திரவதைகளையும் தாங்கி கொல்லும் அண்டர்டேகர் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து பால் பேரரின் தலையில் இரண்டு தட்டு தட்டுகிறார். அடிவாங்கிய பால் பேரர் வெகுண்டு எழுந்து அண்டர்டேகர் பற்றிய இரகசியத்தை வெளியிடுகிறார்.
  
"அண்டர்டேகர் குடும்பம் ஒரு பிணங்களை பாதுகாத்து, பதனிட்டு பொது மக்கள் பார்வைக்கு வைத்து பின் அடக்கம் செய்யும் (funeral parlour) வியாபாரம் நடத்தி வந்ததாகவும், அப்போது அண்டர்டேகர் அம்மாவுக்கும் பால்பேரருக்கும் தொடர்பு ஏற்பட்டு அதனால் அண்டர்டேகருக்கு ஒரு தம்பி பிறந்ததாகவும், அண்டர்டேகர் பதின்ம வயதில் இருக்கும் போது தங்கள் குடும்ப வியாபரத்துக்கு தீ மூட்டி, தனது குடும்பத்தினரை கொன்று அதை விபத்தாக மாற்றிவிட்டதாகவும், ஆனால் அந்த விபத்தில் சகலரும் இறக்கவில்லை என்றும், அண்டர்டேகரின் அரைதம்பி (half-brother) இன்னும் உயிரோடு தனது பாதுகாப்பில்    தான் இருக்கிறார்" என்பதே பால் பேரர் வெளியிட்ட இரகசியம்.

பால் பேரர் அத்துடன் நின்றுவிடவில்லை. நிலைகுலைந்து போயிருக்கும் அண்டர்டேகரிடம் "தீ விபத்து காரணமாக முகத்தில் காயங்களுடன் வாழும் உன் தம்பி கேன் உன்னை பழிவாங்க துடித்து கொண்டிருக்கிறான். அவன் உன்னுடன் மோதி உன்னை ஒரு வழி பண்ணுவான்" என்று கூறி அடுத்த ஒரு போட்டியில் முகம் மறைக்கப்பட்ட கேன் எனும் ஒரு மல்லனை கொண்டு வந்து நிறுத்துகிறார். சகோதர்கள் மோதுகிறார்கள்.

அதன் பின் கேன், அண்டர்டேகர், பால் பேரர் என கதை எப்படி எப்படியோ, எங்கெல்லாமோ போகிறது ஆனால் நம் இந்த பதிவுக்கு அது அவ்வளவாக அவசியமில்லை.   


இப்போ மீண்டும் நமது கதைக்கு...

அறிவிப்பு பார்த்தவுடன் ஒரு சில நண்பர்களுடன் போட்டியில் ஒருளவு அருகில் இருந்து பார்க்க கூடிய பகுதிக்கான டிக்கெட்டை வாங்கி விட்டோம். எதிர்பார்ப்போ நாள் நெருங்க நெருங்க எகிறிக்கொண்டே போக தொடங்கியது. இந்நிலையில் நமது நண்பரொருவர் இந்த மல்யுத்த வீரர்கள் வரும் விமான நேர விபரத்தை மோப்பம் பிடித்து அறிவித்ததினால் நாம் சிலர் விமான நிலையத்தில் அவர்களை நெருங்கி பார்க்கலாம் என்ற நோக்கில் கூடி விட்டோம். அதுவரை ஒருவரை ஒருவர் அடித்து தும்சம் செய்யும் வீரர்கள் நேரில் பார்க்க இருக்கும் ஆவலுடன் நின்றோம். அப்போது தான் அந்த அதிர்ச்சி நிகழ்ந்தது.

அண்டர்டேகர் மற்றும் அவர் எதிரிகளான கேன், மான்கைண்ட் எல்லாரும் ஒருவர் பின் ஒருவராக ஒரு சில உதவியாளர்கள் சூழ, சில மீட்டர் இடைவெளி விட்டு வந்தார்கள். அடப்பாவிகளா... ஒருவனை ஒருவன் பார்த்தால் கொலை கூட செய்யும் அளவுக்கு பகை கொண்ட நீங்களா இப்படி ஒரு பத்து இருபது மீட்டர் தூரத்தில் நடந்து வருகிறீர்கள்! அப்போ உங்கள் பகை வெறும் நடிப்பா? நாம் எல்லாம் பார்த்து இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டது விழலுக்கு இறைத்த நீரா?

இது கூட பரவாயில்லை. அங்கு வெளியே நிறுத்த பட்டிருந்த கருப்பு கண்ணாடியால் ஆன ஓர் பெரிய சொகுசு பஸ் ஒன்றில் அனைவருமே ஏறி ஒன்றாக ஒரே ஹோட்டலுக்கு தான் தங்க சென்றார்கள். மனம் வெறுத்து விட்டது. குடும்பம், கொலை, தம்பி, கள்ள தொடர்பு என்று நம்மை இந்த பாவிகள் எப்படி எல்லாம் நம்ப வைத்து விட்டார்கள். உருப்படுவார்களா இவர்கள்! நாம் எல்லாம் இவ்வளவு லூசா?!

அடுத்த நாள் டிக்கெட் வாங்கி விட்டோமே என்பதுக்காக போட்டியை பார்க்க போனேனே தவிர மனம் ஒன்றும் போட்டியில் லயிக்கவில்லை. அங்கு மீண்டும் அண்டர்டேகரும், கேனும் பால்பேரரால் உசுப்பி விடப்பட்டு மோதிக் கொண்டார்கள். 'அட போங்கப்பா' என்று அன்றுடன் இந்த போட்டிகள் பார்பதையே நிறுத்தும் முடிவுக்கு வந்தேன்  

அப்படி நிறுத்துவதற்கு முன், அவர்கள் நிகழ்ச்சியை ஒரு முறை மிகவும் கவனமாக முதல் எழுத்து போட்டதில் இருந்து முடிவு எழுத்தோட்டம் வரும் வரை தொலைக்காட்சி திரையில் தோன்றியது, பேசப்பட்டது எல்லாவற்றையும் ஒன்று விடாமல் படித்தேன்; கேட்டேன். அவர்கள் நிகழ்ச்சியில் எங்குமே இந்த போட்டியை 'Sport' என்று அழைப்பதில்லை. மாறாக 'sport entertainment' என்று அழைக்கிறார்கள். ஆக மொத்தத்தில் இது விளையாட்டை அடிப்படையாக கொண்டு வரும் பொழுது போக்கு நிகழ்ச்சி என்பதை சொல்லி விடுகிறார்கள். ஆனால் நாம் தான் புரிந்து கொள்வதில்லை என்பது தெளிவாகியது.எவனோ உட்கார்ந்து எழுதும் கதை, திரைகதை, வசனத்திற்கு இந்த மல்லன்கள் தங்கள் மல்யுத்த திறமையை வைத்து நடித்து கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது. ஒரு புறம் கோபமாகவும், மறுபுறம் அவமானமாகவும் இருந்தது.

மேற்கூறிய ஏமாற்றத்தை ஒருவாறு 90 களில் கடந்து வந்து விட்டாலும் மீண்டும் ஒரு முறை அதே கோபத்திற்கும் ஏமாற்றதிற்கும் தள்ளியது அண்மையில் முடிந்த IPL. இரண்டுக்கும் என்னவொரு ஒற்றுமை. யாரோ ஒருவரின் கதை, திரைக்கதைகேற்ப மைதானத்தில் நடிக்கும் நடிகர்கள் ஆகிவிட்டார்கள் நம் 'விளையாட்டு' வீரர்கள். ஆனால் அவர்கள் அதை 'பொழுபோக்கு' என்று உண்மையை சொல்லி விடுகிறார்கள். ஆனால் இவர்களோ இன்னும் 'விளையாட்டு' என்று சொல்லி நம்மை நம்ப வைத்து கேவல படுத்துகிறார்கள்.

90 களில் கடந்து போனதை போல் இதுவும் என்னை கடந்து போகும் ஆனால் இவர்கள் கேவலப்படுத்தும் ரசிகர் கூடத்தில் இனி  நான் இருக்க மாட்டேன்.  

குறிப்பு: 2000 ஆண்டளவில் ஐரோப்பாவில் 'WWF' எனும் பெயரை குஸ்தி போட்டிகளுக்கு பயன் படுத்துவதற்கு எதிராக மற்றொரு 'WWF' ஆன 'World Wide Fund for nature' வழக்கு தொடுத்தது. அதை தொடர்ந்து 'WWF', 'WWE' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு தற்போதும் வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.