Thursday, 4 July 2013

நடுவில 4 நாள காணோம்!

"Yesterday is but today's memory, and tomorrow is today's dream". என்பார் லெபனானிய கவிஞர் கலீல் ஜிப்ரான். ஆனால் ஒருவருக்கு நேற்றைய நினைவுகளே இன்றைய கனவுகளாகி துன்புறுத்தினால்... அதுவும் நேற்றைய நினைவு தான் அப்படி துன்புறுத்துகிறது என்ற பிரக்ஞ்சையே இல்லாது இருப்பாரேயானால்...

* * *

பொதுவாக சுயசரிதை என்பது ஒருவரின் வாழக்கை வரலாற்றின் குறிப்பேடாக கருதப்படுகிறது. இது குறிப்பிட்ட அந்த மனிதர் நேரடியாகவோ அல்லது அவரின் பதிவுகளை கொண்டு இன்னொருவராலோ எழுதப்பட்டிருக்கும். நல்ல சுயசரிதை என்பது ஒருவரின் வளர்ச்சி, சாதனைகளை மட்டுமன்றி வாழ்க்கையின் தாழ்வு நிலைகளையும் தவறான முடிவுகளையும் திரிபின்றி நேர்மையாக கூறுவதாக இருக்க வேண்டும். மேற்கூறியவாறு எழுதப்பட்ட சுயசரிதைகளே மக்களால் பெரிதும் போற்றப்படுகின்றன. கண்ணதாசனின் 'வனவாசம்' பலரால் வியந்து கொண்டாடப்படுவதற்கான மூல காரணம் இதுதான். அதே வேளை கலைஞரின் 'நெஞ்சுக்கு நீதி' பல விமர்சனங்களுக்கு உள்ளாவதும் இதனால் தான்.வர்த்தகரீதியாக ஒரு சுயசரிதை பிரசுரிக்கப்படுவதற்கு முக்கியமான தகுதியாக பார்க்கப்படுவது ஒருவரின் பிரபல்யம் அல்லது சாதனை. இதற்கு உதாரணமாக அப்துல் கலாமின் 'அக்கினி சிறகுகளை' கூறலாம். அதேபோல் எதிர்மறையான பிரபல்யம் கூட ஒருவரின் சுயசரிதை வெளிவர உதவலாம். சார்ல்ஸ் சோப்ராஜின் 'The Life and Crime of Charles Sobhraj ' என்ற புத்தகம் இதற்கு உதாரணம். இதன் அடுத்தபடியாக ஓரளவு தான் பிரபலமாக இருந்தாலும் அவரின் வாழ்வில் நடந்த குறிப்பிடும் படியான அசாதாரண நிகழ்வை மையமாக கொண்டு ஒருவர் சுயசரிதை எழுதலாம். இதற்கு உதாரணமாக, அணியில் இளைஞர்களுக்கு இடம் அளிக்கவேண்டும் என கூறி இவரை நீக்கிவிட்டு, பின் இவரை விட வயதானவர்களை வைத்து இலங்கை அணி அறிவிக்கப்பட்ட போது, மனமுடைந்து, இந்த நிகழ்வையே மையமாக கொண்டு ரோஷன் மகாநாம எழுதிய 'Retired Hurt' எனும் சுயசரிதையை கூறலாம்.

இவைகளை எல்லாம் தாண்டி ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்வில் நடந்த அசாதாரண நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டும் சுயசரிதை எழுதலாம். ஆனால் தமிழில் இந்த வகையான சுயசரிதங்களை நான் படித்ததாக நினைவில்லை. நீங்கள் படித்திருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.

* * *
    
இங்கிலாந்து நாட்டின் மையப்பகுதியில் உள்ள விவசாயம் சார்ந்த கிராமங்கள் உள்ளடக்கிய கோட்டம் தான் டார்பிஷேர். இந்த டார்பிஷேர் கோட்டத்தில், மான்செஸ்டரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் தான் நியூ மில்ஸ். ஒரு காலத்தில் நிலக்கரி சுரங்க தொழிலை வாழ்வாதாரமாக கொண்டிருந்த கிராமம் பின்னாளில் பின்னலாடை, விவசாயம் என வாழ்வாதாரத்தை காலதிற்கேட்ப மாற்றிக் கொண்டது. இந்த கிராமத்தில் ஏறக்குறைய 65 வருடங்களுக்கு முன் பிறந்தவள் தான் ஜானெட் ஹோல்ட்.

ஜானெடின் சிறுவயது சாதரணமாக, கிராமத்தில் உள்ள மற்றைய அவளை ஒத்த வயதினரின் வாழ்வை போலவே நகர்கிறது. ஆனால் மற்றவர்கள் போலல்லாது அவளுக்கு மிருகங்கள் என்றால் கொள்ளை பிரியம். மிருகங்களை பராமரிப்பது என்பது அவளின் பிடித்த பொழுதுபோக்கு. ஒரு விவசாயி ஆகி சொந்தமாக பண்ணை வைத்திருக்க வேண்டும் என்பது அவள் கனவு. ஜானெட்டின் மிருகங்கள்பால் இருக்கும் ஈர்ப்பை கவனித்த பெற்றோர் அவள் பன்னிரண்டு வயதாகும் போது, அவள் வற்புறுத்தலினால், அவளை லக்கி என்னும் குதிரை குட்டிக்கு உரிமையாளர் ஆக்குகிறார்கள். அந்நாளில் ஜானெடின் வீட்டருகே பண்ணை வைத்திருப்பவர் பிரெட் ஹன்போர்ட். மணமாகி தனிக்கட்டையான நடுத்தர வயதுடையவர்; அப்போதும் குதிரைகளை வைத்தே நிலத்தை உழும் விவசாயி. தன்னுடைய குதிரை குட்டியின் நடை பயிற்சிக்காக பண்ணையின் பரந்த நிலபரப்பை பயன்படுத்த அனுமதி கேட்க பிரெட்டை அணுகுகிறாள்  ஜானெட். அனுமதியும் கிடைக்கிறது. அந்த முதல் சந்திப்பு அவர்கள் இடையே ஒரு வித நட்பு துளிர்விட அத்திவாரம் இடுகிறது.சில வருடங்கள் உருண்டோடுகின்றன. பருவ மங்கையாகி வரும் ஜானெட், பிரெட்டின் பண்ணையிலேயே பகுதி நேர பணியாளாகிறார். ஏற்கனவே மிருகங்கள் மீதிருக்கும் அபரித அன்பால் பணிகளை விரும்பி ஆர்வத்துடன் செய்கிறார். பிரேட்டும் தன் பங்குக்கு பண்ணை மற்றும் மிருகங்களை கையாள்வதில் உள்ள நுணுக்கங்களை கற்றுத்தருகிறார். வெகு விரைவிலேயே ஜானெட், மிருகங்களை இனப்பெருக்குதல், பால் கறத்தல், பன்றிகளுக்கு உணவளித்தல் போன்ற சகல பண்ணை வேலைகளில் கைதேர்ந்தவளாகிறார். ஜானெடுக்கு இந்த வெளிப்புற பணி வாழ்க்கை பிடித்திருந்தாலும், பெற்றோர்களின் நெருக்குதலின் பேரில் கிராமத்தில் ஒரு சட்டவல்லுனரின் அலுவலகத்தில் முழுநேர பணியாளராகவும் சேர்ந்து கொள்கிறார். ஜானெட்டின் ஆர்வம், நம்பகத்தன்மை மற்றும் மிருகங்கள் மீதிருக்கும் காதல் போன்றவற்றால் ஏற்பட்ட உந்துதல் அவரை முழ நேர அலுவலக பணியாளராகவும், மற்றைய நேர பண்ணை பணியாளராகவும் வாழக்கையை நகர்த்த உதவுகிறது. அலுவலக பணியால் வரும் வருமானம் மற்றும் பண்ணை வேலைகளில் ஜானெட் காட்டும் ஆர்வம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு ஒரு குறிப்பிட்ட பண பரிவர்த்தனை மூலம் ஜானெட்டை தனது பண்ணையின் வியாபார பங்குதாரராக்கி கொள்கிறார் பிரெட். இப்பொழுது முன்னை விட ஆர்வமாக நாள் தோறும் கடினமாக உழைக்கிறார் ஜானெட்.
வருடம்: 1976, மாதம்: மார்ச், திகதி: 19.

அப்போது ஜானெட்டுக்கு வயது 26. காலையில் விழித்தெழுகிறார். சற்று அசாதாரணமாக உணருகிறார். உடம்பு அசதியாய் இருக்கிறது. அவரின் அழுக்கு வெலிங்டன் பூட்ஸ் கட்டிலருகில் சேறும் சகதியுமாய் இருக்கிறது. இதுவரை ஒருநாளும் அழுக்கு பூட்சை கட்டில் வரை கொண்டுவந்ததில்லையே என்று துணுக்குறுகிறார். குழப்பமாக பண்ணைக்கு போய் பிரட்டை தேடுகிறார். ஆனால் வழமையைவிட எல்லாமே அமைதியாக இருப்பது போல் ஜானெட்டுக்கு தோன்றுகிறது. பிரெட் ஒருவேளை தன் பணிகளை முடித்துக்கொண்டு, காலை உணவுக்கு, அவர் இருப்பிடத்துக்கு சென்று விட்டாரோ என எண்ணியவாரே குதிரை சேணம் வைத்திருக்கும் அறையை திறக்கிறார். அங்கு அவரது நாய் உள்ளிருந்து குதித்து வெளியே ஓடுகிறது. அங்கு ஆணியில் பிரெட்டின் தொப்பி தொங்குகிறது. பிரெட் தொப்பியும் நாயும் இல்லாமல் எங்குமே சென்றது கிடையாது.  மேலும் இப்படி ஒருநாளும் பிரட் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேயும் போனதில்லை. பரபரப்பாகி அம்மாவை அழைத்துக்கொண்டு பிரெட் பேரை அழைத்தவாறே பண்ணையை சுற்றி தேடுகிறார். பிரெட் இல்லை. பிரெட் எப்போதாவது வெளியே செல்வது அவர் சகோதரி ஒருவரை பார்க்க மட்டுமே என்பது ஜானெட் நினைவுக்கு வருகிறது. உடனடியாக சகோதரியை தொலைபேசியில் அழைத்து விசாரிக்கிறார் அங்கும் பிரெட் வரவில்லை என்ற செய்தியே கிடைக்கிறது. பிரெட் ஒருவேளை வரலாம் என்று மேலும் சில மணிநேரம் பொறுத்திருந்து பார்கிறார்கள். பிரெட் வருவதாக தெரியவில்லை. மிகவும் வருத்தத்துடன் போலீசை கூப்பிடுகிறார்கள்.


போலீஸ் வந்து பண்ணையை சலடையாக சலித்து பார்க்கிறது. பிரெட் கிடைக்கவில்லை, ஜானெட்டை அழைத்து சென்று விசாரிக்கிறார்கள். அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. ஜானெட்டுக்கு கடைசி நான்கு நாட்களில் நடந்த எதுவுமே ஞாபகம் இல்லை. எவ்வளவும் முயன்றும் கடந்த நான்கு நாட்களை ஜானெட்டால் நினைவுக்கு கொண்டு வரமுடியவில்லை . அதே வேளை போலீசும் பிரெடை கண்டுபிடிக்க மிக பெரிய தேடுதல் வேட்டை ஒன்றை மேற்கொள்கிறார்கள். அந்த வேட்டை தோல்வியில் முடிகிறது. மேற்கொண்டு பிரெட்டுக்கு நெருக்கமானவர்களோடான விசாரணையில் பிரெட்டுக்கு பண நெருக்கடி இருந்தது தெரிய வருக்கிறது. அதைவிட பிரெடுக்கு வேறு பிரச்சனைகள், எதிரிகள் இருந்ததாக தெரியவில்லை. ஆதலால் பிரெட் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று  போலீஸ் முடிவெடுக்கிறது.  இறுதியில் பிரெடை பற்றி எந்த துப்பும் கிடைக்காததால் பிரெட் அதிகாரபூர்வமான 'காணாமல் போனவர்கள்' பட்டியலில் சேர்க்கப் பட்டு ஜானெட் விடுதலை செய்யப்படுகிறார்.பிரெட் ஏன் திடீரென சொல்லாமல் கொள்ளாமல் மறைந்தார் என்பதற்கான விடை எவ்வளவு யோசித்தும் ஜானெட்டுக்கு கிடைக்கவில்லை. தன்னுடைய உயர்வில் ஒரு காரணியாகிய, வியாபார பங்காளி மறைந்தது ஜானெட்டுக்கு மிகுந்த துயரத்தை கொடுத்தது. எப்படியும் பிரெட் ஒரு நாள் திரும்பி வருவார் அது வரையாவது பண்ணையை தொடர்ந்து நடத்துவது என்று முடிவெடுக்கிறார்.  எனவே  தொடர்ந்து தனியாகவே பண்ணையையும் கவனித்து, சட்ட வல்லுனரின் அலுவலக வேலையையும் செய்து வருகிறார். நாளடைவில் அவருக்கு வித்தியாசமான கனவுகள் வரத்தொடங்கின. அவை ஒன்றும் சாதாரண கனவுகள்  இல்லை. அலறி துடித்து எழுந்திருக்க வைக்கும் அதி பயங்கர கனவுகள். அதாவது ஜானெட் ஒரு கதவை திறந்து வெளியே தப்பிப்பதற்கு கடுமையான பிரயத்தனத்துடன் வாழ்வா சாவா என்பது போல் ஓடுவது போன்றும் அது யாரிடம் இருந்து தப்புவது என்று பார்த்தால் தன்னிடம் இருந்து தானே தப்புவது போன்றும் கனவுகள் வர தொடங்கின. வாரத்துக்கு மூன்று நான்கு முறை வரும் இந்த கனவுகள், உடலின் முழு சக்தியையும் உறிஞ்சி காலையில் ஜானெட், இரவு முழுதும் உறங்காது இருந்தால் எப்படி அசதியாய் இருக்குமோ அந்த நிலையில் அவரை கொண்டு வந்து வைத்துவிடும்.  இக்கனவுகள் சிறிது சிறிதாக ஜானெட் வாழ்க்கையில்  பெரிய தாக்கத்தை உருவாக்கி நிம்மதி இழக்க செய்கின்றன..

இவை இவ்வாறு இருக்கையில் ஜானெட்டுக்கும் அவர் பணிபுரியும் அலுவலகத்து சட்ட வல்லுனருக்கும் காதல் மலர்கிறது. ஒரு புரிந்துணர்வோடு அது 20 ஆண்டுகளை கடந்து விடுகின்றது.  ஜானெடுக்கு வயது நாற்பதின் மத்தியை தாண்டுகிறது. அப்போது அவருக்கு தான் காதலின் பேரில் இதுவரை  ஏமாற்றப்பட்டதை போல் உணர்வு ஏற்படுகிறது. தனது காதலர் தனக்கு எந்த விதமான அங்கீகாரமும் அளிக்க விரும்பவில்லை என்ற உண்மை அவரை இடி போல் தாக்குகிறது. அப்படியானால் இதுவரை காலமும் தான் ஒரு வைப்பாட்டியாக வாழ்க்கையை வீணடித்தது அவரை மிகவும் பாதிக்கிறது. சட்ட வல்லுனரை பழி வாங்கவேண்டும் என எண்ணுகிறார். ஒரு ஆணுக்கு எங்கு அடித்தால் அதிகம் வலிக்கும் என்று எண்ணுகிறார். எண்ணியவர் ஒரு முடிவுக்கு வந்து சட்ட வல்லுனரின் அலுவலகத்தில்  கையாடல் செய்கிறார். விளைவு சில காலம் வாழக்கையை சிறையில் கழிக்க நேர்கிறது. இப்படி இக்கட்டான மன அழுத்தங்களுக்கு மத்தியில் கனவுகளின் தொல்லையும்  நினைவில் இல்லாத அந்த நான்கு நாட்கள் பற்றி மனதில் எழும் கேள்விகளும் விஸ்வரூபமெடுக்கின்றன. சிறையில் இருந்து வெளியே வந்ததும் இதற்கு ஒரு முடிவு காணவேண்டும் என்று எண்ணுகிறார்.

சிறையில் இருந்து வெளிவந்தவுடன் நெருங்கிய நண்பர் ஒருவருடன் தனது அதி பயங்கர கனவுகளுக்கு முடிவு காணும் முயற்சியில் இறங்குகிறார். குறிப்பாக தனது வாழ்வில் காணாமல் போன நான்கு நாட்களில் தான் அதற்கு விடை இருப்பதாக எண்ணுகிறார். பல விசாரிப்பு, ஆராய்சிகளுக்கு பின் EMDR எனும் சிகிச்சை முறை பற்றி கேள்விப்படுகிறார். EMDR என்பது குறிப்பாக விபத்து, பயங்கர நிகழ்வை பார்த்தல், போர், வன்புணர்வு போன்றவற்றால் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் புதுவகை உளவியல் வைத்திய முறை. EMDR என்பதன் விரிவு Eye Movement Desensitization and Reprocessing. இது அமெரிக்க உளவியலாளரான பிரான்சின் ஷாபிரோ என்பவரால் 1989 இல் வடிவமைக்கப்பட்ட சிகிச்சை முறை. நோயாளியின் கண்களை வைத்தியரின் கை அசைவுகேட்ப வலமிருந்து இடமாகவும் பின் இடமிருந்து வலமாகவும் வேகமாக அசைப்பதன் மூலம் நடந்து முடிந்த நிகழ்வுகளை மீள் கொண்டுவந்து அதன் மூலம் நோயாளியின் அதிர்ச்சி புண்களை ஆற்றும் ஹிப்னோசிஸ் வகை சிகிச்சை முறை தான் இது.ஜானெட் இந்த வைத்திய முறை தெரிந்த  உளவியல் மருத்துவர் பெலிண்டா பிரவுன்-தாமஸ் மூலம் தனது வாழ்வில் காணாமல் போன நான்கு நாட்களை தேட முற்படுகிறார்.  சிறிது சிறிதாக அவருக்கு ஒவ்வொரு நாளாக ஞாபகம் வருகிறது. வருவதோடு நின்றுவிடாமல் ஒரு படம் போல் காட்சிகள் விரிகின்றன. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைகிறார் ஜானெட். அங்கு கனவில் வரும் தப்பி ஓடும் போராட்டத்திற்கும் விடை கிடைகிறது.

* * *

இது வரை நீங்கள் படித்தது தற்போது 64 வயதுடைய ஜானெட் ஹோல்ட் எழுதிய 'The Stranger in my Life' (எனது வாழ்வின் அந்நியன்) எனும் அவருடைய சுயசரிதையின் ஒரு பகுதி. சிறிய அளவிலான 50 அத்தியாயங்களை கொண்ட இந்த புத்தகம் தொடக்கம் முதல் இறுதி வரை ஒரு விறுவிறுப்பான க்ரைம் நாவலுக்கு ஒப்பான வேகத்துடன் எளிய ஆங்கிலத்தில் நகர்கிறது. இந்த சுயசரிதை முழுவதும் வரும் வர்ணிப்புகள், நுணக்கமான உணர்வு வெளிப்பாடுகள் புத்தகத்தின் நம்பகத் தன்மையை உறுதி படுத்துகின்றன.  ஒரு கல்யாணமானவருடன் காதல், சிறை வாழக்கை என வாழ்வின் எதிர்மறை நிகழ்வுகளையும் வெளிப்படையாக விபரித்திருப்பது சுயசரிதையை முற்று முழுதாக்குகின்றது. மேற்கொண்டு புத்தக விபரங்களை கீழ்காணும் சுட்டியில் அறியலாம். : The Stranger in My Life - Janet Holt
                    
"நான் ஒரு புத்தக பிரியர் இப்புத்தகத்தை எப்படியும் படித்து விடுவேன்" என்று நினைபீர்களேயானால் இத்துடன் இந்த பதிவை படிப்பதை நிறுத்திக்கொண்டு விடை பெறுவது நலம். இல்லை எனக்கு அதுவரை காத்திருக்க முடியாது; EMDR மூலம் ஜானெட் வாழ்வில் காணாமல் போன நான்கு நாட்களில் நடந்தது என்ன?  அதன் பின் விளைவு எவ்வாறு அமைந்தது? என்பதை அறிய ஆர்வம் உந்தி தள்ளினால் தொடர்ந்து கிழே படியுங்கள்.  

* * *
அந்த 4 நாட்கள்

அன்றும் வழமை போல் பணிகளுக்காக பண்ணைக்கு செல்கிறார் ஜானெட். சென்று குதிரைக்கு வைக்கோல் அள்ளிக் கொண்டு இருக்கையில் அவர் பின்னால் ஒரு பொதி விழும் சத்தம் கேட்கிறது. திடுக்குற்று திரும்பிப் பார்த்தால் வைக்கோல் போர் மேலிருந்து பிரெட் குதித்து கிழே விழுந்து எழுந்து கொண்டிருந்தார். அந்நிலையில் அவரை பார்த்ததும் ஜானெடுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்துக்கொண்டே 'ஒன்றும் ஆகவில்லையே?' என்று கேட்கிறார்.கேட்டு வாய் மூடும் போது ஏதோ ஆபத்து என்று உள்ளுணர்வு எச்சரிக்கிறது. சிரிப்பு சட்டென அடங்குகிறது. பிரெட்டை உற்று நோக்குகிறார். பிரேட்டோ நிலைகுத்திய பார்வையுடன் ஜானெட்டை நெருங்கி வந்து கொண்டிருக்கிறார். அவரிடம் இருந்து விஸ்கி வாடை குப் என்று ஜானெட்டை தாக்குகிறது. பிரெட் என்ன செய்கிறீர்கள்..? என்று தடுமாறியவாறு கேட்கிறார். பிரேட்டோ "எனக்கு முன்பே தெரியும், நீ எனக்கானவள்" என்று சொல்லிக்கொண்டே ஜானெட்டை தழுவ முயற்சிக்கிறார். ஜானெட்டொ இயன்றளவு விடுபட போராடுகிறார். பிரெட் இப்போது மூர்க்கத்தனமாக ஜானெட் கழுத்தில் கையை வைத்து அழுத்தியவாறே முத்தமிட முயற்சிக்கிறார். கழுத்தின் மேல் உள்ள அழுத்தத்தினால் ஜானெட் சக்தியற்று சோர்ந்து அரை மயக்க நிலைக்கு போய் பிரெட்டிடம் பெண்மையை இழக்கிறார். பின் ஓரளவு நினைவு திரும்பியபோது பிரெட் அவரை  பண்ணையில் உள்ள தனது வீட்டுக்கு இழுத்துச் சென்று செயலற்று இருக்கும் ஜானெட்டை மீண்டும் சூறையாடுகிறார்.  .மறுபடியும் ஜானெட்டுக்கு சுய நினைவு வந்த போது பிரட்டின் வீட்டின் முன் அறையில் தரையில் கிடப்பதை உணருகிறார். சுற்றும் முற்றும் பார்க்கையில் பிரெட் தூரத்தில் உட்கார்ந்திருப்பது தெரிகிறது. தன் பலத்தை எல்லாம் சேர்த்து பிரெட்டை வாய்க்கு வந்த படி ஏசுகிறார். பிரெட் சலனமற்று உட்கார்ந்து ஜானெட்டை பார்த்துக் கொண்டே இருக்கிறார். பின் எழுந்தவர் 'நீ இப்போ போவதானால் போகலாம்" என்று கூறி கொண்டே தனது அறைக்குள் சென்று விடுகிறார். ஜானெட்டுக்கு ஒன்றும் புரியவில்லை. மனதுள் ஆயிரம் கேள்விகள். நான் இறந்து கொண்டிருக்கிறேனா? பிரெட் என்னை கொலை செய்யப் போகிறானா? இல்லை நான் தப்பி ஓட முயற்சி செய்வேனா என்று சோதிக்கிறானா? என்று சிந்தித்தவாறே வெளிக்கதவை பார்க்கிறார். அது அவள் கிடக்கும் இடத்தில் இருந்து சில அடிகள் தூரத்திலேயே இருக்கிறது. உள்பக்கமாக தாளிடப்பட்டிருக்கிறது. சிறிது நேரம் பொறுத்திருந்து பார்கிறார் பிரெட் அறையில் இருந்து வெளிவருவதாக தெரியவில்லை. வருவது வரட்டும் என்று எண்ணியவாறு மெதுவாக எழுந்திருக்கிறார். உடைகளை சரி செய்து கொண்டு ஓசை படாமல் வெளிக்கதவை நெருங்குகிறார். தாழ்பாளை இயன்றவரை மெதுவாக நீக்க முற்படுகிறார். ஆனால் தாழ்பாள் ஓசை எழுப்புகிறது. இனி தாமதிக்க ஒரு கணமும் இல்லை என முடிந்தவரை வேகமாக சத்தத்தோடு தாழ்பாளை நீக்கி, கதவை திறந்து, வீடு நோக்கி ஓடுகிறார். பயத்தினால் திரும்பி பார்க்க கூட பார்க்காமல் வேகமாக ஓடி வீட்டை அடைகிறார்.

வீட்டில் அப்பா மரண படுக்கையில் இருக்கிறார். அம்மாவோ அப்பாவின் நினைவில் மன அழுத்தத்தில் இருக்கிறார். வீட்டில் நுழைந்தவுடன் ஜானெட்டின் அலங்கோல நிலையை பார்த்து தாயார் என்ன நிகழ்ந்தது என வினவுகிறார். நடந்ததை சொல்லி கட்டி கொண்டு கதறி அழவேண்டும் என்று தோன்றினாலும் வீட்டின் அப்போதைய நிலையை உண்டர்ந்து குதிரையில் இருந்து தவறி  விழுந்து விட்டேன் என்று சொல்லியவாறே அவர் அறைக்கு சென்று தாழிட்டு அழுகிறார். பின் பல மணிநேரம் அதிகம் எடுத்து குளித்து விட்டு நோய்வாய்பட்டு கட்டிலில் படுத்திருக்கும் தகப்பனார் அருகில் அமர்கிறார். நினைவுகள் பின் நோக்கி ஓடுகின்றன. தன் சிறு வயதில் அடிபட்டு வரும் போதெல்லாம் இறுக்கி அனைத்து ஆறுதல் சொல்லும் அப்பா நினைவுக்கு வருகிறார். 'எல்லாம் சரியாகி விடும் அப்படி ஆகவில்லை என்றால் நான் பார்த்து கொள்கிறேன். நீ எதுக்கும் கவலை படாதே" என்று அவர் கூறுவது காதில் எதிரொலிக்கிறது. இக்கணம் மீண்டும் சிறுமியாகி விட மாட்டோமா என்று மனது ஏங்குகிறது. அழுகை பீறிட்டு, கட்டுடைந்த வெள்ளம் போல் வருகிறது. மனது ஓரளவு ஆறும் வரை அழுகிறார். பின், "நான் இப்போ ஓர் வயதுக்கு வந்த பெண். என் பிரச்னையை நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்னும் முடிவுக்கு வந்தவராய் தன் அறைக்கு வந்து படுத்து தூங்கி விடுகிறார்.

மறுநாள் எழுந்தவர், இனி மேல் பிரெட் முகத்தில் முழிப்பதில்லை என முடிவெடுக்கிறார். ஆனால் அவர் பண்ணையில் இருக்கும் தன் விலங்குகளை என்ன செய்வது? எப்படியும் இன்னுமொரு இடம் பார்த்து அவைகளை மாற்றி விடவேண்டும் ஆனால் அதுவரை அவை உயிரோடு இருக்க வேண்டுமே. இதற்கு ஒரே வழி, மிருகங்களை இடம் மாற்றும் வரை, பண்ணைக்கு சென்று உணவு மட்டும் அளித்து விட்டு வருவது என முடிவெடுக்கிறார்.

எழுந்து வழமைக்கு சற்று தாமதமாகவே பண்ணையை அடைகிறார். உள்ளே நுழையுமுன் பிரெட் கண்ணில் தென்படுகிறாரா என சுற்றும் முற்றும் பார்க்கிறார். பிரெட் இல்லை என்று உறுதி செய்துகொண்டு இயன்றவரை வேகமாக உணவளித்து விட்டு ஓடி வீடு வந்து சேர்கிறார். இப்படியே இரண்டு நாட்கள் கரைந்து விடுகின்றன. இன்னும் இரண்டு நாட்கள் தான் மிருகங்களுக்கு வேறு இடம் பார்த்தாயிற்று என்று எண்ணியவாறே நான்காம் நாள் காலையில் பண்ணையை அடைகிறார். வழமை போல் பிரெட் இல்லை என்று உறுதி செய்து கொண்டு உணவெடுக்க பண்டகசாலையை நெருங்குகிறார். அங்கே கதவிலே "I'm sorry. Please look after the animals" எனும் பிரெட் கைப்பட எழுதிய துண்டு சீட்டு தொங்கி கொண்டிருக்கிறது.

எடுத்து படித்த ஜானெட்டுக்கு ஒன்றும் புரியவில்லை. பிரெட் எங்கே? ஒருவேளை வெட்கத்தால் ஊரை விட்டு ஓடி விட்டானா? இல்லை  ஒருவேளை குற்ற உணச்சியால் தற்கொலை?... தற்கொலை! திடீரென பிரெட் மீது ஒரு பரிதாப உணர்வு வர, பண்ணையில் உள்ள பிரெட் வீட்டை நோக்கி ஓடுகிறார். வீடு திறந்திருக்கிறது. கீழ் தளத்தில் தேடுகிறார் பிரெட் இல்லை. மேல் தளத்திற்கு சென்று பிரெட்டின் படுக்கை அறையில் தேடுகிறார் அங்கும் இல்லை. மீண்டும் கீழ் தளம் வருகிறார் . அங்கே பிரெட் சமையல் அறையில் ஜானெட் வருவதை பார்த்துக் கொண்டு நிற்கிறார். ஜானெட்டுக்கு மீண்டும் பயம் கவ்வுகிறது. பிரெட் சிரித்துக்கொண்டே 'நீ வருவாய் என்று எனக்கு தெரியும். எனக்கானவள் அல்லவா நீ. கவலைப்படாதே நாம் இருவரும் புதிய வாழக்கை ஆரம்பிக்கலாம். செல்வத்தை பெருக்கலாம் குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம்" என்று ஏதேதோ சொல்லிக்கொண்டே போகிறார். நடுவில் "நடந்ததை பெற்றோரிடம் கூறினாயா?" என்றும் கேட்கிறார். "ஆம், இப்போது கூட தந்தை போலீஸ் நிலையத்தில் தான் இருக்கிறார். எந்த நிமிடம் வேண்டுமானாலும் போலீஸ் இங்கு வந்து உன்னை கைது செய்யலாம்" என்று பொய் சொல்கிறார் ஜானெட். பிரெட் சற்று தடுமாறுவான், தன்னிடம் மன்னிப்பு கேட்பான், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஓடிவிடலாம் என்று எதிபார்த்த ஜானெட்டுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. பிரெட் வாய் விட்டு சிரித்துக் கொண்டே "நீ போலீசுக்கு போயிருந்தால் கடந்த இரண்டு நாட்களாக பண்ணைக்கு வந்து போய் கொண்டிருக்க மாட்டாய்" என்றவர். "சரி ஒரு தேநீர் குடித்தவாறே மீதியை தொடர்வோமா" என்று கேட்டுக் கொண்டே ஜானெட் அருகில் வருகிறார். மீண்டும் பிரெட் தன்னை களங்கப்படுத்த போகிறான் என்று ஜானெட் உள்ளுணர்வு திருப்பி திருப்பி சொல்ல தொடங்கியது. தாமதப்படுத்தும் ஒவ்வொரு கணமும் தப்பிப்பதற்கு வழியை உருவாக்கும் என்ற எண்ணம் தோன்ற :ஓ... குடிக்கலாமே" என்று பதிலளிக்கிறார் ஜானெட்.ஒரு வித திருப்தி முகத்தில் வர பிரெட் சமையலறையை நோக்கி நகர்கிறார். உதவிக்கு ஏதும் கிடைக்குமா என்று கீழ் தளத்தை சுற்றி நோக்கும் ஜானெட்டுக்கு மூலையில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் பிரெட்டின் நீளமான வேட்டை துப்பாக்கி கண்ணில் படுகிறது. 'அதை தொடாதே, அதில் குண்டு நிரப்பி ஆயுத்த நிலையிலேயே வைக்கப்படிருக்கிறது' என்று எப்போதும்  பிரெட் கூறுவது நினைவுக்கு வருகிறது. இப்போது ஜானெட்டின் எண்ணம் எல்லாம் பிரெட்டின் கவனம் தன்பால் மீண்டும் வருமுன் துப்பாக்கியை கையில் எடுத்து விட முடியுமா என்பதே. பிரெட்டை பார்க்கிறார். அவர் கேத்தலை எடுத்து குனிந்து தண்ணீர் நிரப்ப தொடங்குகிறார். இதயம் படபடக்க, மனதில் வைராக்கியத்துடன் பூனை போல் அடி மேல் அடி எடுத்து வைத்து, பிரெட்டை நோக்கியவாறே துப்பாக்கியை நெருங்குகிறார் ஜானெட். அவர் மனதில் இப்போது எந்த வித உணர்ச்சிகளும் இல்லை. அவரின் இதய துடிப்பு ஓசை தான் அவர் காதில் கேட்கிறது. கேத்தலில் நீர் பாதி கூட நிரம்பவில்லை என்பது அதன் ஓசையில் இருந்து அவருக்கு தெரிகிறது. பிரெட் இன்னும் முதுகை காட்டிய வண்ணமே தண்ணீர் பிடித்து கொண்டிருக்கிறார். ஜானெட் துப்பாக்கியை கையில் எடுக்கிறார். கைகளில் எந்த வித நடுக்கமும் இல்லை. பிரெட்டின் முதுகை குறிபார்கிறார். இயன்ற மட்டும் பலமாக விசையை அழுத்துகிறார். துப்பாக்கி வெடிக்கவில்லை.

ஒரு கணம் அதிர்ந்து போனவர் துப்பாக்கியை பார்கிறார். அப்போது தான் துப்பாக்கியின் பாதுகாப்பு பிடியை நீக்காதது தெரியவருகிறது. பிடியை நீகுகிறார் மீண்டும் விசையை அழுத்துகிறார். இம்முறை சுடுகிறது. சுருண்டு விழுகிறார் பிரெட். அதன் பின் எதுவும் தீர்க்கமாக ஜானெட்டால் நினைவு கூற முடியவில்லை. களஞ்சியத்திற்கு சென்று 'Wheel Barrow ' எனும் ஒற்றை சக்கர வண்டியை எடுப்பதாகவும், பின் 'Spade' எனும் மண்வாரியை எடுப்பதாகவும் காட்சிகள் வந்ததாக ஜானெட் சொல்கிறார். தன்னால் பிரெட்டின் உடலை அதிக தூரம் எடுத்து என்றிருக்க முடியாது; எனவே அருகில் எங்கேயோ தான் புதைத்திருக்க வேண்டும் என்றும் நம்புகிறார்.

* * *


டாக்டர் மற்றும் வக்கீலின் உதவியோடு போலீசில் சரணடைகிறார் ஜானெட். போலீஸ் ஆரம்பத்தில் நம்ப மறுத்தாலும் பின் டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் 50 ஏக்கர் பண்ணையையுமே கிண்டுகிறார்கள். ஆனால் எங்குமே பிரெட்டின் உடல் கிடைக்கவில்லை. ஆதலால் ஜானெட் கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என ஜானெட்டை வீட்டுக்கு அனுப்பி விடுகிறது போலீஸ்.ஜானெட்டொ 'நான் தான் பிரெட்டை கொன்று விட்டு பண்ணையில் புதைத்து விட்டேன் என்று தீர்க்கமாக நம்புகிறார். ஏறக்குறைய 40 வருடங்களுக்கு முன் புதைத்தது என்பதால் இன்னும் ஆழமாக கிண்டினால் உடல் கிடைக்கலாம் என்பது அவர் வாதம். ஆனால் அவ்வாறு கிண்டுவதற்கு யாரும் முன் வருவதாக தெரியவில்லை.

"நீதியின் முன் நான் தண்டிக்கப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன்" என்கிறார் ஜானெட். "அவள் ஒரு சாகசக்காரி" என்கிறார்கள் பிரெட்டின் சகோதரி தரப்பினர். "மூளை மிகவும் அபூர்வ சக்தி வாய்ந்தது. ஒரு செயல் உடலுக்கும் மனதுக்கும் தீங்கு விளைவிக்கும் என்றால் அதை நம் நினைவுகளில் இருந்து தற்காலிகமாக அழித்து விடும் வல்லமை மிக்கது" என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். உண்மையில் பண்ணையில் நடந்தது என்ன என்பது அங்கிருக்கும் விலங்குகளுக்கு தெரிந்திருக்கலாம் ஆனால் அவை நமக்கு சொல்லபோவதில்லை.    

(சில நெடுந்தூர பயணங்கள் மேற்கொள்ள இருப்பதால் மீண்டும் ஒரு மாதம் கழித்து உங்களை சந்திப்பேன். )

Monday, 24 June 2013

ஆபிரகாம் லிங்கனும் நானும்! - 5

இதற்கு முந்தைய பாகத்தை படிக்க கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்...

ஆபிரகாம் லிங்கனும் நானும்! - 4

 ஆம்... அந்த நாளும் வந்தது!

USS ஆபிரகாம் லிங்கனில் தங்கப் போவது ஓர் இரவு தான் என்பதால் சக்கரம் வைத்த சிறிய பயண பொதி ஒன்றில் சில மாற்று உடைகளையும், காலை கடன்களுக்கு தேவையான பொருட்களையும் முதல் நாள் இரவே தயார் செய்து வைத்து விட்டேன். மேலும் கப்பலில் ஏதேனும் வாங்குவதற்கு அவசியம் ஏற்படின் அங்கு அமெரிக்க டாலர்களை  மட்டுமே ஏற்று கொள்வார்கள் என்று SATCO ஏற்கனவே கூறியிருந்ததால், சில அமெரிக்க டாலர் நோட்டுக்களையும் முதல் நாளே வாங்கி வைத்து கொண்டேன். காலை 9 மணியளவில் விமான நிலையத்தின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் படைவீரர்களுக்கான சிறப்பு நுழைவாயிலில் கூடவேண்டும் என்பதே எமக்கு இடப்பட்டிருந்த கட்டளை. காலை ஆறு மணிக்கு எல்லாம் எழுந்து விட்டேன். எழுந்த சில நிமிடங்களிலேயே பரபரப்பு தொற்றிக் கொண்டது. இருந்தும் ஆழ்ந்த மூச்சுகள் விட்டு மனதை சாந்தமாக்கிக் கொள்ள முயன்றேன். எனது இருப்பிடத்தில் இருந்து விமான நிலையத்துக்கு காரில் வேக கட்டுபாடுகளை மதித்து செல்வதானால் 30 நிமிடங்களில் சென்று விடலாம். எனினும் எதிர்பாராது ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை கருத்தில் கொண்டு ஒரு மணி நேரம் முன்னதாகவே கிளம்பி விடுவதாக திட்டமிட்டுக் கொண்டேன்.  என் அலுவலகத்தில் இருந்து மேலும் 5 பேர் வருவதாக இருந்தும், அவர்களில் ஒருவரேனும் நான் வசிக்கும் பக்கம் வசிப்பதில்லை என்பதனால் நான் தனியாக காரில் விமான நிலையம் சென்று அங்கேயே வண்டியை விட்டு விட்டு மறுநாள் வரும் போது எடுத்துகொண்டு வீடு வரலாம் என்று முடிவு செய்தேன்.8 மணியளவில் சற்று படபடப்பாய் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் குடும்பத்தாரிடம் விடை பெற்று வண்டியை கிளப்பினேன். இயல்பாக வண்டியை ஓட்டுவது சற்று கடினமாகவே இருந்தது. எனவே சற்று கூடுதல் கவனத்தோடு வழமையை விட மெதுவாகவே வண்டியை செலுத்தினேன். மேற்கொண்டு எந்த அசம்பாவிதமும் நிகழாமல் 9:40 மணியளவில் விமான நிலையத்தின் சிறப்பு நுழைவாயிலை அடைந்தேன். அந்த நுழைவாயிலை காப்பவர்கள் அனைவரும் துப்பாக்கி ஏந்திய அமெரிக்க படையினர். வாயிலை அணுகி நான் வந்த நோக்கத்தை சொன்ன போது, அவர்களிடம் இருந்த ஒரு புத்தகத்தில் என்னுடைய பெயரை ஒப்பிட்டு சரி பார்த்த பின்னர் உள்ளே அழைத்து சென்று ஒரு பயணிகள் தங்கும் அறையில் உட்கார வைத்தனர். அங்கு என்னுடன் பயணம் செய்ய இருக்கும், ஏற்கனவே வந்து விட்ட ஒரு சிலரும் அமர்ந்திருந்தனர். அங்கிருந்தபடி கண்ணாடி சுவர்களின் ஊடாக தெரிந்த விமான ஓடுகளத்தை நோக்கினேன். அப்பொழுது தான் 'அது' கண்ணில் பட்டது...என்னதான் விமான தாங்கி கப்பல்கள் தன்னிறைவு உடையதாக கட்டப்பட்டாலும் அவைகளில் இருந்து தினமும் கப்பலுக்கும் தரைக்குமான விமான போக்குவரத்து நடந்து கொண்டே இருக்கும். அதற்காக இயக்கப்படும் விமானகளை ஆங்கிலத்தில் 'Logistics Aircrafts' என்பார்கள். அவ்வகை விமானங்கள் தினமும் எடுத்து செல்லும் சரக்கை 'COD' என்பார்கள். அதன் விரிவு 'Carrier Onboard Delivery'. இந்த 'COD' இல் இடம் பெறுபவை அத்தியாவசிய சரக்குகள், தபால் மற்றும் மனிதர்கள். இந்த பணியை செய்யும் சரக்கு விமானங்களின் பிரதானமானது தான் C - 2 கிரெஹவுண்ட் (Greyhound). 'அது' தான் அங்கு இறக்கைகளை மடக்கி ஒரு தாய் பறவை போல் ஓடுகளத்தில் நின்றிருந்தது.C - 2 கிரெஹவுண்ட்ஒரு விநோதமானா விமானம். அதை வடிவமைத்தவர்கள் குரூமேன் (Grumman) நிறுவனத்தினர். ஒரு விமானத்தின் விலை 39 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இது இரண்டு டர்போ ப்ராப் என்ஜின்களை கொண்டது. 26 ஆயிரம் கிலோ எடையை சுமந்து செல்ல வல்லது. 30 ஆயிரம் அடி உயரம் வரை பறக்க கூடியது. 343 நொட்ஸ் அதன் அதிக பட்ச வேகம். நீளம் 57 அடி 10 அங்குலம் ஆனால் அகலத்தில் தான் இதன் சிறப்பு இருக்கிறது. அதாவது நிறுத்தி வைக்கும் போது அகலம் 29 அடி 4 அங்குலம் ஆனால் பறக்க நினைக்கும் போது 80 அடி 7 அங்குலம். எப்படி சாத்தியம் என்கிறீர்களா? இந்த விமானத்தின் வடிவமைப்பு பறவைகளை பார்த்து அவைகளின் இறக்கை வடிவமைப்பின் உள்ளுயிர்ப்பை (inspiration) கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த விமானத்தால் இறக்கைகளை மடக்கி பின்னோக்கி திருப்பி வைத்து கொள்ள முடியும். விமான தாங்கி கப்பலில் விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும் இடத்தை சேமிப்பதற்கு ஏதுவாக  உருவாக்கப்பட்டது தான் இந்த வடிவம்.   
 

இந்த விமானத்தின் பின்புறத்தில் மிகப்பெரிய கீழ் நோக்கி இறங்கும் கதவு இருக்கிறது. இதன் மூலமாக தான் தபால், அத்தியாவசிய சரக்குகளான ஜெட் இயந்திரம் போன்றவற்றை ஏற்றுவார்கள். பயணிகளும் இதே கதவின் ஊடாக தான் சென்று அமரவேண்டும். மேலும் பயணிகள் இருக்கைகள் தேவைக்கு ஏற்ப இலகுவில் பொருத்தவோ களற்றவோ கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் இருக்கைகளை கழற்றி அவற்றுக்கு பதில் காயப்பட்டவர்களை கொண்டு செல்ல கூடிய படுக்கைகளை சில நிமிடங்களிலேயே பொருத்தி விட முடியுமாம். அவசியம் ஏற்படும் பொது 'Air drop ' என்று அழைக்கப்படும் வானத்தில் இருந்து பொருட்களை போடுவதற்கும்,  பாரசூட்டில் வீர்கள் குதிப்பதற்குமான வசதிகளும் இந்த விமானத்தில் இருக்கின்றன.


ஏற்கனவே நான் சேகரித்த தகவல்களின் படி நம்மை சுமந்து செல்ல இருக்கும் விமானம் அதுவாக தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். விமானத்தை சுற்றி சீருடையில் அமெர்க்க படை வீரர்கள் மும்முரமாக பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். இப்போது மேலும் சிலர் நாம் உட்கார்ந்திருந்த அறைக்கு வந்து விடவே பேச்சு சத்தம் அதிகரிக்க தொடங்கியது. என்னை தவிர என் அலுவலகத்தில் இருந்து வந்தவர்கள் 5 பேர். அவர்களில் இருவர் கனடா நாட்டவர். ஒருவர் அமெரிக்கர், ஒருவர் பிரித்தானியர், ஐந்தாமவர் நியூசிலாந்து நாட்டவர். எங்களுடன் இணைந்து கொண்ட இன்னொருவர் அமெரிக்க தூரகத்தை சேர்ந்த ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி. அவர் வந்தவுடன் தன்னை அறிமுகபடுத்திக் கொண்டார். இயல்பான நகைச்சுவை உணர்வு மிக்க மனிதர். அப்போது முதல் அவர் தான் எம் குழுவுக்கு தலைவர் போல் செயல்பட்டார். முதல் வேலையாக  எம் கடவுசீட்டுகளை (Passport) வாங்கி கொண்டு எம் சார்பில் குடியகழ்வு (Immigration) நடைமுறைகளை முடித்து கொண்டு வருவதாக சொல்லி சென்றார். நாம் நாட்டை விட்டு வேறொரு நாட்டின் கடல் எல்லையில் இருக்கும் கப்பலுக்கு செல்ல இருப்பதால் இந்த நடைமுறை. சென்றவர் 10 நிமிடங்களில் திரும்பி வந்து கடவுசீட்டுகளை கையளித்தார். இனி கூப்பிடும் போது போய் விமானத்தில் ஏறவேண்டியது தான் பாக்கி என்றார். என் வாழ்வில் முதன் முறையாக ஒரு விமான நிலையத்தில் VVIP போல் நடத்தபடுவதாக உணர்ந்தேன். நான் என் இருக்கையை விட்டு நகராமலேயே கடவுசீட்டில் ஸ்டாம்ப் அடித்து கொண்டுவந்து விட்டார்கள். 'இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே!" எனும் கண்ணதாசனின் பாடல் வரி இந்த சந்தர்பத்துக்கு பொருந்துமா என்று யோசித்து கொண்டிருக்கையில், படையணிகளில் உயர் பதவியில் இருக்கும் ஒருவருக்கான சீருடையில் கம்பீரமாக ஆறரை அடி உயர்ந்த மனிதர் ஒருவர் எம்மை நோக்கி வந்தார். வந்தவர் இன்னும் சில நிமிடங்களில் புறப்பட தயாராகுமாறு சொல்லிவிட்டு முதலில் இயற்கை உபாதைகளை கழிப்பதானால் அதை செய்து விடுங்கள்; விமானத்தில் அமர்ந்தால் எழுதிருக்க முடியாது என்றும் மேலும் நீங்கள் அணியவேண்டிய சில பிரத்தியேக உபகரணங்களை சில நிமிடங்களில் கொண்டுவருவார்கள்; அணிந்து கொள்ளுங்கள் என்றும் கூறி விட்டு சென்றார். எனக்கோ மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது!  

 தொடருவேன்...
 

Thursday, 13 June 2013

ரிலீசுக்கு முன்பே 901 கோடி சம்பாதித்த படம்!

படம் தாயாரிக்க ஆன செலவு 225 மில்லியன் அமெரிக்க டாலர். (1120 கோடி இந்தியன் ரூபாய்). ஆனால் இன்றும் நாளையும் உலகெங்கும் ரிலீசாக இருக்கும் இந்த திரைப்படம் முதல் டிக்கட்டை விற்பதற்கு முன்பே 170 மில்லியன் அமரிக்க டாலரை (901 கோடி ரூபாய்), அதாவது படத்தின் முக்கால் பங்கு தயாரிப்பு செலவை சம்பாதித்து விட்டது என்றால் நம்புவீர்களா?! அதுவும் வெறும் 'Product Placement' என்று அழைக்கப்படும் பொருட்களை திரைப்படத்தில் பயன் படுத்துவதற்கான விளம்பர வருமானத்தின் மூலமாக மட்டும் இந்த ஈட்டப்பட்டுள்ளது. இப்போ  படம் என்னவென்றுஉங்களுக்கு சொல்லாமலே புரிந்திருக்கும்.

இல்லையெனில் அது தான் Man of Steel எனும் Superman திரைப்படம்.  .ஹாலிவூட்டில் தற்போது ஆச்சரியாமாக பார்க்கப்படும் விஷயம் இது தான். அதாவது Man of Steel தான் இதுவரை வெளியான திரைப்படங்களிலேயே அதி கூடிய விளம்பர பொருட்களை பயன் படுத்திய படம். படுத்தப்பட்ட  பொருட்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 100 வரும். Nokia, Chrysler, Warby Parker glasses மற்றும் Wallmart என்பன அவற்றில் சில.பொதுவாக ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இது போன்ற விளம்பரத்துக்காக, கம்பனிகள் தமது பொருளை படத்தில் வர வைப்பதற்கு பணத்தை செலவிடும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது. Aston Martin Car, Martini குடிவகை மற்றும் Omega கை கடிகாரங்கள் இதற்கு உதாரணம். ஆனால் சுப்பர்மானோ இம்முறை ஒருபடி மேலே போய் சந்தையில் இருக்கும் அநேக  புதுவித பொருட்கள் மற்றும் கருவிகளை பயன் படுத்துகிறார். சுப்பர்மான் படங்களை பார்போருக்கு தெரிந்திருக்கும், அவர்  சாதாரன மனிதனாக இருக்கும் போது அவர் பெயர் கிளார்க் கென்ட். சாதாரன கண்ணாடி அணிந்திருப்பார். ஆனால் இம்முறை படத்திலோ அவர் அணியும் கண்ணாடியோ வார்பி பார்கர்.


உண்மையில் எல்லா படங்களுக்கும் இவ்வாறான ஸ்பான்சர்கள் கிடைப்பதில்லை. காரணம் பொருட்களின் தயாரிப்பளர்களும் தமது பொருளின் இமேஜை மேம்படுத்த கூடிய படங்கள் மற்றும் பாத்திர படைப்பு உள்ள படங்களுக்கு மட்டுமே வாரி வழங்குவார்கள். அவ்வகையில் பார்த்தால் உலகறிந்த காமிக் புத்தக ஹீரோவான சுப்பர்மானுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கம்பனிகள் வரிசையில் நிற்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.


இதில் கவனிக்க கூடிய இன்னொரு அம்சம் என்னவெனில் இது போன்ற நூற்றுக்கும் மேலான ஸ்பான்சர்கள் சுப்பர் ஹீரோ திரைப்படங்களை தெரிவு செய்ய காரணம் அமெரிக்காவின் பாக்ஸ் ஆபிசில் வெற்றி பெற்ற படங்களில் அநேகமானவை சுப்பர் ஹீரோ அல்லது புனைவு (fictional) பாத்திர கதை அமைப்பு கொண்ட படங்களே. உதாரணங்களாக ஓஹோ என்று இல்லாமல் சுமாரான கதை அமைப்பை கொண்டிருந்தாலும் வசூலில் வெற்றி பெற்ற முந்தைய 'Superman, Superman Returns' படங்கள், 'Iron Man' படங்கள், மற்றும் 'Spiderman', 'Batman' படங்களை சொல்லலாம். ஏன் இன்று வரை உலகின் முன்னணி வசூல் திலகமாக இருக்கும் 'Avatar' ம் ஒரு புனைவு திரைப்படமே.இது இப்படி இருந்தாலும், இதுவரை 'Man of Steel' படத்தை பற்றி வந்த விமர்சனங்கள், படம் தொழில்நுட்ப ரீதியிலும் காட்சிஅமைப்பு, நடிப்பிலும் நன்றாக இருப்பினும் கதை திரைகதையில் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தியாக இல்லை என்றே சொல்கின்றன. ஆனால் மேற்கூறிய விளம்பர வருமானத்தை கணக்கில் கொண்டால் படம் தயாரிப்பாளர் Warner Brothers க்கு இந்த படத்தை பொறுத்த வரையில் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. 


Sunday, 9 June 2013

IPL எனும் WWF

90 களில் தான் முதன் முதலாக பஞ்சம் பிழைக்க கடல் தாண்ட வேண்டி வந்தது. புதிய வானம் புதிய பூமி! அதுவரை கேள்வி அறிவில் மட்டுமே இருந்த காலாச்சார அதிர்ச்சி என்பதை தாண்டி விஞ்ஞான முன்னேற்றம், உணவுப் பழக்கவழக்கங்கள், சொகுசு வாகனங்கள், பொழுது போக்கு அம்சங்கள் என அனைத்திலும் நிஜமாகவே ஒரு புது உலகம் சுற்றி சுழல்வதை கண்கூடாக பார்க்க கூடியதாக இருந்தது. கியர் மாற்ற தேவையில்லாத கார், நகரும் படிக்கட்டுகள், 1.44 MB டிஸ்க், டச் ஸ்க்ரீன் என ஆச்சரியங்கள் கலந்து கட்டி அடித்தன.மாலை நேரங்களில் பொழுதுபோக்காக பார்க்கும் தொலைகாட்சியில் கூட ஆச்சரியங்களுக்கு குறைவில்லை. எடுத்துக்காட்டாக, 'Talk show ' என்று கூறப்படும் கலந்துரையாடல் நிகழ்சிகளில், குடும்பம், செண்டிமெண்ட், சாதனை என மனித வாழ்க்கையின் பல பரிமாணங்களை உள்ளடக்கிய, தற்போதைய கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் மாதாவாக்கிய "The Oprah Winfrey Show" என்பது ஒரு வகை.

இதுவும் 'டாக் ஷோ' தான், ஆனால் கூறு கேட்ட குடும்பங்களையும், மனித மனங்களின் வக்கிரங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தவர்களையும் கொண்டு வந்து உட்கார வைத்து, கலந்துரையாடல் என்ற போர்வையில் சட்டை, உள்ளாடை போன்றவற்றை கிழித்து சண்டை போட வைத்து விட்டு பின் கடைசியில் ஒருவரியில் நீதி சொல்லிவிட்டு போகும் "The Jerry Springer Show " என்பது இன்னொரு வகை. ஆனால் இவற்றிற்கும் மேலாக அந்நாளில் என்னை கவர்ந்த ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சி இருந்ததென்றால் அது தான் WWF.


நம்ம ஊர் பக்கங்களில் 'குஸ்தி' என்று தோரயமாக அழைக்கப்படும் மல்லுக் கட்டும் போட்டி நிகழ்ச்சி  தான் இந்த WWF எனும் World Wrestling Federation. இதில் 'Federation' என்ற வார்த்தை இருந்ததால், இதை அமெரிக்காவில் நடைபெறும் ஒரு அங்கீகரிக்கப் பட்ட போட்டி விளையாட்டு என்று நம்ப தோன்றியது. உண்மையில் இது போன்ற குஸ்தி போட்டியை நான் காண்பது இது முதல் தடவை அல்ல. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதன் முதலில் பயணிகள் பொழுதுபோக்கிற்காக CCTV பொருத்தப் பட்ட காலத்தில் இது போன்ற நிகழச்சியை தான் தொடர்ந்து ஒளிபரப்புவார்கள். அதில் உயரமான ஒரு மல்லன் நரைத்த முடி, நரைத்த தொங்கு மீசையுடன் பல்வேறு பட்ட எதிரிகளுடன் மோதுவார். ஆரம்பத்தில் எதிரி இந்த தொங்கு மீசையை புரட்டி எடுத்து, ஏறி குதித்து, ஒரு பதினைந்து நிமிடத்துக்கு நையபுடைத்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் எதிரி அடிக்க அடிக்க ஒரு மாதிரி விறைச்சு போய் PVC குழாய் கணக்கா எழுந்து நிற்பார் தொங்கு மீசை. அங்கே அரங்கில் கூடி இருந்து குஸ்தி பார்க்கும் மக்கள் எல்லாம் ஆர்பரிப்பார்கள். தொங்குமீசை கையை மடக்கி காதில் வைத்து சனங்கள் கத்துவதை காது குடுத்து கேட்பார். பின் தலை அசைப்பார். பின் அந்த போட்டி வளையத்தின் மறு கோடிக்கு சென்று மீண்டும் காது குடுத்து கேட்பார். இப்போது ரசிகர்கள் வாய் கிழிய கத்துவார்கள். தொங்கு மீசை மீண்டும் தலை அசைத்து ஆமோதிப்பது போல் பாவனை பண்ணுவார். இவை அனைத்தும் நடக்கும் போது எதிரி ஓய்வின்றி தொங்கு மீசையின் முதுகில் குத்திய வண்ணமே இருப்பார். இப்போது திடீர் என தொங்கு மீசை திரும்பி எதிரியை ஒரு பார்வை பார்ப்பார். எதிரி வெலவெலத்து போவான். அவன் சுதாகரிப்பதற்குள் அவன் தோளை பிடித்து தலை கிழாக தூக்கி ஒரு அடி அடிப்பார். எதிரி அசைவற்று கிடக்கும் போது, பரபரவென வளைத்தின் கயிற்றில் ஏறி எதிரி மேல் குதிப்பார் தொங்கு மீசை. அவ்வளவுதான்! அசைவற்று  கிடைக்கும் எதிரியை, இதற்கென இருப்போர் உருட்டி அள்ளி கொண்டு ஓடுவார்கள். தொங்கு மீசையோ கையை ஒருவாறு முன் நோக்கி மடித்து ஒரு மெல்லிய நடை நடந்து வெற்றியை கொண்டாடுவார். இந்த காட்சிகளை சென்ட்ரல் ரயில் நிலைய தொலைகாட்சியில் பார்த்திருந்தும், இந்த WWF ஐ பார்த்த போது தான் தெரிந்தது அவர் தான் பிரபல ஹல்க் ஹோகன் (Hulk Hogan).நான் WWF ஐ ஒரு மதமாக பின்பற்ற ஆரம்பித்த பொது ஹல்க் ஹோகன் சற்று வயதாகி குஸ்தி போட்டிகளில் இருந்து விலகி கொண்டிருந்தார். அப்போது சூப்பர் ஸ்டார்களாக நாம் கொண்டாடியவர்கள் அண்டர்டேகர் (The Undertaker), பிரிட்டிஷ் புல் டாக் (British Bull Dog), அல்டிமேட் வாரியர் (Ultimate Warrior), டீசல் (Diesel) த ராக் (The Rock), ஷான் மைக்கல்ஸ் (Shawn Michaels), பிரெட் ஹார்ட் (Bret Hart), ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டின் (Stone Cold Steve Austin) போன்றோர். அதே நேரம் தீயவர்களாக நாம் வெறுத்தது அண்டர்டேகரின் தம்பி கேன் (Kane), இரும்பிலான நடு விரலை எதிரி வாயில் வைத்து அழுத்தும்  மான்கைண்ட் (Mankind), மலை பாம்புடன் வரும் ஜேக் ஸ்நேக் ராபர்ட்ஸ்.(Jake Snake Roberts), ஓவன் ஹார்ட் (Owen Hart), சைகோ சிட் (Psycho Sid), ஒரு 'மார்க்கமாக' உடை அணிந்து வரும் கோர்ல்ட் டஸ்ட் (Gold Dust) போன்றோரை.  இந்த போட்டிகளை வாரத்தின் வெவ்வேறு நாட்களில் ரெஸ்ல் மேனியா (Wrestle Mania), ராயல் ரம்பில் (Royal Rumble), லைவ் வயர் (Live Wire), சுப்பர் ஸ்லாம் (Super Slam) எனற பெயர்களில் ஒளிபரப்புவார்கள். ஒரு வேளை அந்த நாட்களை தவறவிட்டால் வீடியோ கடையில் VHS காசெட் வாங்கி பார்த்து விடுவதுண்டு. இந்த போட்டிகளில் குறிப்பாக முன்னணி வீரர்கள் பங்கு பற்றும் போட்டிகளில் ஒரு பின்னணி கதை இருக்கும்.  கதைப்படி, ஒரு நல்லவர் ஒரு கெட்டவர் இருப்பார், இதில் நல்லவர் முறைப்படி விளையாடுவார். கேட்டவரோ என்னென்ன திருகுதாளம் பண்ண முடியுமோ அவ்வளவும் பண்ணி வெற்றி பெற முயற்சி செய்வார்; சில நேரங்களில் வெற்றியும் பெறுவார். உதாரணமாக கெட்டவர் ஒரு கவர்ச்சி பெண்ணுடன் வருவார். அந்த பெண்மணி கீழிருந்து ஏதோ எல்லாம் சொல்லி நடுவர் கவனத்தை திசை திருப்ப, நடுவர் பார்க்காத நேரம் இந்த கெட்டவர் விதி முறைகளுக்கு முரணாக நல்லவரை போட்டு அடித்து வெற்றி  பெறுவார். அரங்கில் பார்ப்போர் கடுப்பாகி கை கட்டை விரலை கீழ் நோக்கி அசைத்து 'ஊ' என்று ஊழியிடுவார்கள். தொலைகாட்சியில் பார்த்து கொண்டிருக்கும் நாமும் 'ச்சே' என்று அங்கலாய்ப்போம்.  'உன்னை அடுத்த போட்டியில் பார்த்து கொள்கிறேன் என்று சவால் விடுவார் நல்லவர். வேறு சில வேளைகளில் இந்த கெட்டவர் மைக்கை பிடித்து ஒரு உள்ளூர் வட்ட செயலாளர், ஒபாமாவை எச்சரிப்பது போல் நல்லவரை சகட்டுமேனிக்கு திட்டி எச்சரிப்பார். திடீரென இசை முழங்க, மின் விளக்குகள் மின்ன எங்கிருந்தோ நல்லவர் தோன்றுவார். உடனே அலறி அடித்து கெட்டவர் மக்களிடையே பாய்ந்து ஓடுவார். நல்லவர் ஒரு மடித்த இரும்பு நாற்காலியை தூக்கி கொண்டு மக்களிடையே புகுந்து அவரை தாக்குவார். தலையில் இருந்து இரத்தம் கூட கொட்டும் அளவுக்கு அடிபடுவார்கள். சில நேரங்களில் பெரிய சுத்தியலை தூக்கி கொண்டு கார்களில் கூட ஒருவரை ஒருவர் துரத்துவார்கள்; கண்ணாடிகளை உடைப்பார்கள். இதற்கும் மேலே ஒரு படி போய் ஒருவரின் விலை உயர்ந்த காரை இன்னொருவர் உடைப்பது, ஒருவர் காதலியை இன்னொருவர் அறைவது என பகைமை வாரா வாரம் வளர்ந்து, கடைசியில்  'என் கிட்ட மாட்டினே,,. உனக்கு கருமாதிதான்டா' என்று ஒருவரை பார்த்து ஒருவர் தொலைக்காட்சி கமிரா முன் அறைகூவல் விடுக்கும் அளவுக்கு போகும். நாமும் அவற்றை பார்த்து உச்சு கொட்டி, உணர்ச்சி வசப்பட்டு 'ஆமாண்டா அவனுக்கு ஒரு பாடம் கற்பிச்சா தாண்டா சரி' எனும் அளவுக்கு வந்து விடுவோம். வேறு சில நண்பர்கள் 'டேய் இது எல்லாம் செட்டப்புடா' என்றாலும் நாம் கேட்கமாட்டோம். "அது எப்படிடா இரண்டு வாரத்துக்கு முன்னால பவர் ஸ்லாம் ல அவன் நார்காலியால அடிச்சு மண்டையில இருந்து ரத்தம் எல்லாம் கொட்டிச்சு! அது எப்படிடா செட்டப் ஆகும்" என்று வாதம் செய்வோம்.

 

இப்படியாக நாளொரு குஸ்தியும், பொழுதொரு மல்லனுக்கு விசிறியாகவும் போய் கொண்டு இருக்கையில் ஒரு விளம்பரத்தின் மூலாமாக ஒரு திருப்பு முனை வந்தது. அதாகப்பட்டது, இந்த WWF நட்சத்திரங்கள் போடும் குஸ்தி நாமிருக்கும் நகருக்கும் வருகிறது என்பது தான் அந்த முனை.

அப்ப திருப்பு?

அதுக்கு  முதல் இன்னொரு விஷயமும் சொல்லியாகனும்.

இந்த WWF இல் பல ஹீரோக்கள் இருந்தாலும் நம்முடைய தலைவர் அண்டர்டேகர் தான். மனிதர் நீள சுருள் முடியால் முகத்தை மூடி நடந்து  வரும் அழகே அழகு தான். அவர் கூட பால் பேரர் (Paul Bearer) என்பவரும் வருவார். இந்த பால் பேரர் ஒரு முன்னாள் மல்யுத்த வீரர், அப்போது அண்டர்டேகரின் மனேஜர். கையில் எப்போதும் ஒரு குடுவை வைத்திருப்பார். கூடவே ஒரு அம்மானுஷ்ய தன்மை நிறைந்தவர் போல நடந்து கொள்வார். அந்த குடுவையில் பிணத்தின் சாம்பல் இருப்பதாகவும் அதில் இருந்து தான் அண்டர்டேகர் அபரிதமான சக்திகளை பெறுவதாகவும் போட்டி வர்ணனையாளர்கள் கூறுவர்.


ஆரம்ப ஐந்து வருடத்தில் தகப்பன் பிள்ளை போல் இருந்த அண்டர்டேகர் - பால் பேரர் உறவு திடீரென முறிந்து அண்டர்டேகரை விழுத்துவதே குறியாக பால் பேரர், அண்டர்டேகரின் பரம வைரியான மான்கைண்டுடன் கை கோர்த்து ஒரு எதிர்பார்ப்பை உருவாகுகிறார். இப்படி சில மாதங்கள் உருண்டோடியபின் திடீரென பால் பேரர் தன்னிடம் அண்டர்டேகர் பற்றிய ஒரு ரகசியம் இருப்பதாகவும் அதை வெளியிட்டால் அண்டர்டேகர் தாங்கமாட்டார் என்றும் அறிவிக்கிறார். இந்த அறிவிப்பினால் வெலவெலத்து போகும் அண்டர்டேகர் மீண்டும் பால் பேரர்ருடன் இணைகிறார். இப்போது பால் பேரர் அண்டர்டேகரை ஒரு அடிமை போல் நடத்துகிறார். இப்படி சில மாதங்களுக்கு பால் பேரரின் வசவுகளையும், சித்திரவதைகளையும் தாங்கி கொல்லும் அண்டர்டேகர் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து பால் பேரரின் தலையில் இரண்டு தட்டு தட்டுகிறார். அடிவாங்கிய பால் பேரர் வெகுண்டு எழுந்து அண்டர்டேகர் பற்றிய இரகசியத்தை வெளியிடுகிறார்.
  
"அண்டர்டேகர் குடும்பம் ஒரு பிணங்களை பாதுகாத்து, பதனிட்டு பொது மக்கள் பார்வைக்கு வைத்து பின் அடக்கம் செய்யும் (funeral parlour) வியாபாரம் நடத்தி வந்ததாகவும், அப்போது அண்டர்டேகர் அம்மாவுக்கும் பால்பேரருக்கும் தொடர்பு ஏற்பட்டு அதனால் அண்டர்டேகருக்கு ஒரு தம்பி பிறந்ததாகவும், அண்டர்டேகர் பதின்ம வயதில் இருக்கும் போது தங்கள் குடும்ப வியாபரத்துக்கு தீ மூட்டி, தனது குடும்பத்தினரை கொன்று அதை விபத்தாக மாற்றிவிட்டதாகவும், ஆனால் அந்த விபத்தில் சகலரும் இறக்கவில்லை என்றும், அண்டர்டேகரின் அரைதம்பி (half-brother) இன்னும் உயிரோடு தனது பாதுகாப்பில்    தான் இருக்கிறார்" என்பதே பால் பேரர் வெளியிட்ட இரகசியம்.

பால் பேரர் அத்துடன் நின்றுவிடவில்லை. நிலைகுலைந்து போயிருக்கும் அண்டர்டேகரிடம் "தீ விபத்து காரணமாக முகத்தில் காயங்களுடன் வாழும் உன் தம்பி கேன் உன்னை பழிவாங்க துடித்து கொண்டிருக்கிறான். அவன் உன்னுடன் மோதி உன்னை ஒரு வழி பண்ணுவான்" என்று கூறி அடுத்த ஒரு போட்டியில் முகம் மறைக்கப்பட்ட கேன் எனும் ஒரு மல்லனை கொண்டு வந்து நிறுத்துகிறார். சகோதர்கள் மோதுகிறார்கள்.

அதன் பின் கேன், அண்டர்டேகர், பால் பேரர் என கதை எப்படி எப்படியோ, எங்கெல்லாமோ போகிறது ஆனால் நம் இந்த பதிவுக்கு அது அவ்வளவாக அவசியமில்லை.   


இப்போ மீண்டும் நமது கதைக்கு...

அறிவிப்பு பார்த்தவுடன் ஒரு சில நண்பர்களுடன் போட்டியில் ஒருளவு அருகில் இருந்து பார்க்க கூடிய பகுதிக்கான டிக்கெட்டை வாங்கி விட்டோம். எதிர்பார்ப்போ நாள் நெருங்க நெருங்க எகிறிக்கொண்டே போக தொடங்கியது. இந்நிலையில் நமது நண்பரொருவர் இந்த மல்யுத்த வீரர்கள் வரும் விமான நேர விபரத்தை மோப்பம் பிடித்து அறிவித்ததினால் நாம் சிலர் விமான நிலையத்தில் அவர்களை நெருங்கி பார்க்கலாம் என்ற நோக்கில் கூடி விட்டோம். அதுவரை ஒருவரை ஒருவர் அடித்து தும்சம் செய்யும் வீரர்கள் நேரில் பார்க்க இருக்கும் ஆவலுடன் நின்றோம். அப்போது தான் அந்த அதிர்ச்சி நிகழ்ந்தது.

அண்டர்டேகர் மற்றும் அவர் எதிரிகளான கேன், மான்கைண்ட் எல்லாரும் ஒருவர் பின் ஒருவராக ஒரு சில உதவியாளர்கள் சூழ, சில மீட்டர் இடைவெளி விட்டு வந்தார்கள். அடப்பாவிகளா... ஒருவனை ஒருவன் பார்த்தால் கொலை கூட செய்யும் அளவுக்கு பகை கொண்ட நீங்களா இப்படி ஒரு பத்து இருபது மீட்டர் தூரத்தில் நடந்து வருகிறீர்கள்! அப்போ உங்கள் பகை வெறும் நடிப்பா? நாம் எல்லாம் பார்த்து இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டது விழலுக்கு இறைத்த நீரா?

இது கூட பரவாயில்லை. அங்கு வெளியே நிறுத்த பட்டிருந்த கருப்பு கண்ணாடியால் ஆன ஓர் பெரிய சொகுசு பஸ் ஒன்றில் அனைவருமே ஏறி ஒன்றாக ஒரே ஹோட்டலுக்கு தான் தங்க சென்றார்கள். மனம் வெறுத்து விட்டது. குடும்பம், கொலை, தம்பி, கள்ள தொடர்பு என்று நம்மை இந்த பாவிகள் எப்படி எல்லாம் நம்ப வைத்து விட்டார்கள். உருப்படுவார்களா இவர்கள்! நாம் எல்லாம் இவ்வளவு லூசா?!

அடுத்த நாள் டிக்கெட் வாங்கி விட்டோமே என்பதுக்காக போட்டியை பார்க்க போனேனே தவிர மனம் ஒன்றும் போட்டியில் லயிக்கவில்லை. அங்கு மீண்டும் அண்டர்டேகரும், கேனும் பால்பேரரால் உசுப்பி விடப்பட்டு மோதிக் கொண்டார்கள். 'அட போங்கப்பா' என்று அன்றுடன் இந்த போட்டிகள் பார்பதையே நிறுத்தும் முடிவுக்கு வந்தேன்  

அப்படி நிறுத்துவதற்கு முன், அவர்கள் நிகழ்ச்சியை ஒரு முறை மிகவும் கவனமாக முதல் எழுத்து போட்டதில் இருந்து முடிவு எழுத்தோட்டம் வரும் வரை தொலைக்காட்சி திரையில் தோன்றியது, பேசப்பட்டது எல்லாவற்றையும் ஒன்று விடாமல் படித்தேன்; கேட்டேன். அவர்கள் நிகழ்ச்சியில் எங்குமே இந்த போட்டியை 'Sport' என்று அழைப்பதில்லை. மாறாக 'sport entertainment' என்று அழைக்கிறார்கள். ஆக மொத்தத்தில் இது விளையாட்டை அடிப்படையாக கொண்டு வரும் பொழுது போக்கு நிகழ்ச்சி என்பதை சொல்லி விடுகிறார்கள். ஆனால் நாம் தான் புரிந்து கொள்வதில்லை என்பது தெளிவாகியது.எவனோ உட்கார்ந்து எழுதும் கதை, திரைகதை, வசனத்திற்கு இந்த மல்லன்கள் தங்கள் மல்யுத்த திறமையை வைத்து நடித்து கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது. ஒரு புறம் கோபமாகவும், மறுபுறம் அவமானமாகவும் இருந்தது.

மேற்கூறிய ஏமாற்றத்தை ஒருவாறு 90 களில் கடந்து வந்து விட்டாலும் மீண்டும் ஒரு முறை அதே கோபத்திற்கும் ஏமாற்றதிற்கும் தள்ளியது அண்மையில் முடிந்த IPL. இரண்டுக்கும் என்னவொரு ஒற்றுமை. யாரோ ஒருவரின் கதை, திரைக்கதைகேற்ப மைதானத்தில் நடிக்கும் நடிகர்கள் ஆகிவிட்டார்கள் நம் 'விளையாட்டு' வீரர்கள். ஆனால் அவர்கள் அதை 'பொழுபோக்கு' என்று உண்மையை சொல்லி விடுகிறார்கள். ஆனால் இவர்களோ இன்னும் 'விளையாட்டு' என்று சொல்லி நம்மை நம்ப வைத்து கேவல படுத்துகிறார்கள்.

90 களில் கடந்து போனதை போல் இதுவும் என்னை கடந்து போகும் ஆனால் இவர்கள் கேவலப்படுத்தும் ரசிகர் கூடத்தில் இனி  நான் இருக்க மாட்டேன்.  

குறிப்பு: 2000 ஆண்டளவில் ஐரோப்பாவில் 'WWF' எனும் பெயரை குஸ்தி போட்டிகளுக்கு பயன் படுத்துவதற்கு எதிராக மற்றொரு 'WWF' ஆன 'World Wide Fund for nature' வழக்கு தொடுத்தது. அதை தொடர்ந்து 'WWF', 'WWE' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு தற்போதும் வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Monday, 27 May 2013

ஆபிரகாம் லிங்கனும் நானும்! - 4

இதற்கு முந்தைய பாகத்தை படிக்க கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்...

ஆபிரகாம் லிங்கனும் நானும்! - 3

Catapult assisted Take off - இதை எனக்கு தெரிந்த தமிழில் "கவண் மூலம் விண் மேவுதல்" என்று எழுதலாம் என்று எண்ணுகிறேன். பொதுவாக ஒரு விமானத்தை விண்ணில் செலுத்த தேவையான உந்து சக்தியை அதனுடைய இயந்திரங்கள் வழங்குகின்றன. அந்த உந்து சக்தியை அடையும் வரை விமானத்தை விண்ணில் கிளப்ப முடியாது. அந்த உந்து சக்தியை அடைய விமானங்கள் தரையில் குறிப்பிட்ட வேகத்தை அடையவேண்டும். அதற்காக அவை சில ஆயிரம் மீட்டர் தூரம் ஓடுகின்றன. இது சாதாரண நடைமுறை. பல விமானங்கள் அவ்வாறு ஓடி விண் மேவினாலும், உலகின் மிகப்பெரிய சோவியத் தயாரிப்பு விமானமான Antonov 225 விண் மேவும் அழகே அழகு. அதன் படக் காட்சி கீழே ... Antonov 225 பற்றி இங்கு ஒன்று சொல்லியே ஆகவேண்டும். சில வருடங்களுக்கும் முன் எதிர் பாராத விதமாக, இந்த விமானத்தை மிக மிக அருகில் இருந்து பார்க்கும் சந்தர்ப்பமும், பின் அது விண்ணில் பறந்து செல்வதை ஓடு பாதை அருகே இருந்து பார்க்கும் சந்தர்பமும் கிடைத்தது. அந்த ஆச்சரியத்தில் இருந்து இன்று வரை என்னால் விலக முடியவில்லை. பிரமாண்டம் என்றால் அப்படி ஒரு பிரமாண்டம். விமானத்தை தாங்கி நிற்க 32 சக்கரங்கள். முன் இறக்கையின் ஒரு முனையில் இருந்து மறு முனை 88.4 மீட்டர். 6 லட்சத்து 40 ஆயிரம் கிலோ எடையை சுமந்து செல்ல கூடிய திறன். அது விண்ணில் எழும் போது ஒரு பெரிய கட்டிட தொகுதியே விண்ணில் எழும்பியது போல் இருந்தது..மனிதனின் படைப்பாற்றல் தான் எத்தனை வலிமையானது என்று எண்ணி வியப்படையாமல் இருக்க முடியவில்லை.


இனி நம் கதைக்கு வருவோம். மேல் கூறியவாறு ஓடு பாதை மூலமாக விமானகள் விண் மேவினாலும், கீழ் வரும் மூன்று தருணங்களை சாமளிக்க கவண் (Catapult) கருவி பயன் படுத்த படுகிறது.

1. ஒவ்வொரு விமானத்திற்கும் 'Maximum take off weight ' எனும் ஒரு அளவுகோல் உண்டு. விதிவிலக்காக சில சமயங்களில் அந்த குறிப்பிட்ட எடையை விட அதிகம் எடை சுமந்து செல்ல வேண்டுமானால் கவண் உபயோகிக்கப் படுகிறது.

2. ஜெட், புரொபல்லர் இயந்திரங்களுக்கு போதிய திறன் அற்று போகும் நேரங்களிலும் கவண் பயன் படுத்தப் படுகிறது.

3. ஓடு பாதை சிறியதாக இருக்கும் போது முக்கியமாக கவண் பயன் படுத்த படுகிறது. குறிப்பாக இராணுவ தளங்களிலும், விமான தாங்கி கப்பல்களிலும் ஓடு பாதை மிக குறுகியது, விமானம் அந்த குறகிய பாதையில் ஓடி விண்ணில் எழுவதற்கான உந்துதலை பெற முடியாது. அதனால் தான் கவண் மூலம் விமானத்திற்கு அதிகபடியான வேகத்தை செலுத்தி விண்ணில் பறக்க வைக்கிறார்கள்.

 
  
Arrestor wire Landing  - இதை 'கம்பிகள் மூலம் சிறைபிடித்து தரையிறக்கள்' என்று தமிழ் படுத்தினால் குறை இல்லை என்று நம்புகிறேன். ஒரு விமானம் தரை தட்டும் போது அதன் வேகத்தை குறைத்து முற்றாக ஓய்வுக்கு கொண்டு வர குறிப்பிட அளவு ஓடு பாதை தூரம் தேவை. ஆனால் விமான தாங்கி கப்பல் போன்றவற்றில் குறுகிய ஓடு பாதையே இருப்பதால், விமானத்தின் வேகத்தை சில நொடிகளிலேயே கட்டு படுத்தி ஓய்வுக்கு கொண்டு வரவேண்டும். அவ்வாறு சில நொடிகளில் கட்டுப்படுத்த விமானத்தில் பொருத்தியிருக்கும் சாதனங்களால் முடியாது. எனவே தான் புறச்சாதனங்களை கொண்டு விமானத்தை ஓய்வுக்கு கொண்டு வருகிறார்கள்.


மேலே படத்தில் உள்ளது நிமிட்ஸ் வகை விமானத்தாங்கி கப்பலின் ஓடு தளம். குறிப்பாக தரை இறங்குவதற்கு ஒரு பிரத்தியேக ஓடு பாதையும், விண்ணில் ஏவுவதற்கு இரண்டு ஓடு பாதைகளும் பயன் படுத்துவார்கள்.

விமானத்தாங்கி கப்பல்களில் விமானத்தை உடனடியாக நிறுத்த பயன் படுத்தும் ஒரு முறை தான் கம்பிகள் மூலம் சிறை படுத்தல். இதற்கு ஓடு பாதையின் குறுக்கே கம்பிகளை பொருத்தி விடுகிறார்கள். அந்த கம்பிகள் நீராவி அழுத்தத்தில் இயங்கும் உருளைகளுடன் (cylinder ) இரு புறமும் இணைக்கப்பட்டுள்ளன. விமானம் தரை இறங்கும் போது குறுக்கே இருக்கும் கம்பிகளுடன் கொக்கியை மாட்டி விமானத்தை இழுத்து நிறுத்துகிறார்கள். முதலில் எனக்கு "இப்படி கூட செய்வார்களா?" என்று தான் தோன்றியது. நம்புவதற்கு கடினமாயினும் அது தான் உண்மை. அதற்க்கான படம் இதோ...


சில நேரங்களில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டு, விமானியினால் முற்றாக விமானத்தை கட்டு படுத்த முடியாத போது, இரும்பினால் ஆனா ஒரு வகை வலையை பயன் படுத்தி விமானத்தை நிறுத்துகிறார்கள் இப்படி...இப்போது சொல்லுங்கள், நாம் USS ஏபிரகாம் லிங்கனுக்கு விமானம் மூலன் தான் செல்கிறோம் என்று தெரிந்தவுடன் கிலி கொள்ளாமல் வேறு என்னதான் செய்யும். விண்ணில் ஏவப்படும் போது கவண் மூலம் தேவையான வேகம் கிடைக்காவிடில் விமானம் அப்படியே கடலினுள் சென்றுவிடும். அதே போல் தரை இறங்கும் போது கொக்கியில் இரும்பு வடம் மாட்டாமல் போனால் ஓடு பாதையின் முடிவில் இருக்கும் ஆழ கடலில் விமானத்துடன் மூழ்க வேண்டி வரும். இருப்பினும் வாழ்க்கையில் கிடைத்த ஒரே சந்தர்பத்தை நழுவ விட மனம் இல்லாமலும், அமெரிக்க கடற்படையின் விமானம் மற்றும் விமானிகள் மேல் உள்ள நம்பிக்கையின் அடிப்படையிலும் விமான பயணத்துக்கு சம்மதம் தெரிவித்தேன். ஆனால் வீட்டில் உள்ளோருக்கு இந்த ஏறுதல், தரை இறங்குதல் பற்றி எதுவும் சொல்லாமல் தயாரானேன். அந்த நாளும் வந்தது!

.தொடருவேன்...

Monday, 20 May 2013

☠ - 3 பேர் 3 கடத்தல்!!! (கடைசி பாகம்)


இடுக்கையின் முதல் பகுதியை படிக்க கீழே சொடுக்கவும்...

☠ - 3 பேர் 3 கடத்தல்!!!

2013 மே 6 ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில், செமோர் அவென்யூவில் அமைந்துள்ள தனது வீட்டில் சார்ல்ஸ் ராம்சே, மக்டோனல்ட் உணவை சுவைக்க ஆயுத்தமாகும் போது, அருகாமையில் உள்ள வீட்டில் இருந்து ஒரு பெண்ணின் கூக்குரல் சத்தம் வருவதை கேட்டிருக்கிறார். 'பிக் மாக்' உணவை கையில் பிடித்து கொண்டே என்ன, ஏது என்று பார்க்க சத்தம் வந்த திசையை நோக்கி ஓடுகிறார். அது ஏரியல் காஸ்ட்ரோவின் 2207 ஆம் இலக்க வீடு.

 அந்த வீட்டின் பாரிய முன் கதவின் இடுக்கின் வழியாக ஒரு பெண் வெறித் தனமாக வெளியே வர உதவுமாறு கத்துவதை  பார்க்கிறார். கதவை தள்ளி பார்க்கிறார் அது திறக்கவில்லை. பெண்ணோ "தயவு செய்து காப்பாற்றுங்கள்; நான் நெடுங்காலம் உள்ளே அடைந்து கிடக்கிறேன்" என்று கதறுகிறார். கதவை திறக்க முடியாததால் அதன் அடிப்பகுதியை உடைத்து பெண்ணை வெளியே எடுக்கிறார்கள் ராம்செயும், சத்தம் கேட்டு அங்கு கூடி விட்டவர்களும். கூடவே ஒரு சிறுமியும் வெளியே வருகிறாள். வெளியே வந்த பெண் "தயவு செய்து 911 (போலீஸ்)ஐ கூப்பிடுங்கள் நான் தான் அமெண்டா பெரி என்கிறாள்". கூடியிருந்தவர்கள் ராம்சே உட்பட ஒரு கணம் திகைத்து போகிறார்கள்.


தொடர்ந்து ராம்சே கைபேசியில் காவல் துறை கட்டுபாடகத்துக்கு அழைப்பு விடுத்து பேசுகிறார். அதன் பதிவின் எழுத்து வடிவம் கீழே...


 இதனை தொடர்ந்து அமெண்டா பெரி காவல் துறையுடன்   பேசிய பதிவின் எழுத்து வடிவமும் கீழே....


 இதனை தொடர்ந்து காவல் துறையினர் வந்து அமெண்டா மற்றும் சிறுமியை மீட்பதோடு அல்லாமல் அந்த வீட்டின் நிலவறைகளில் (basement) இருந்து மேலும் இரண்டும் பெண்களையும் மீட்கிறார்கள். சில நிமிடங்களில்  மிஷெல், அமெண்டா, ஜினா ஆகியோர் காணாமல் போய் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு பின் ஒரு 6 வயது மதிக்க தக்க  சிறுமியுடன் மீட்கப்பட்டதாக  செய்திகள் உலகெங்கும் பரவுகின்றன.

 *   *   *

அதுவரை க்ளீவ்லேண்டில், ஹட்ஜெஸ் எனும் உணவகத்தில் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த சார்ல்ஸ் ராமசேவை, இந்த மீட்பு நடவடிக்கைக்கு பின், அமெரிக்க ஊடகங்கள் ஹீரோவாக கொண்டாட தொடங்கி விட்டன. அவரின் பேசும் லாவகமும், உதிர்த்த சில தத்துவ முத்துக்களும் அவரை இன்டநெட்டிலும் பிரபல படுத்தி விட்டன. அப்படி ஒரு முத்து தான் மேலே பதிவின் முதல் படமாக உள்ளது. ஏரியல் காஸ்ட்ரோவை பற்றி கேட்ட போது ராம்சே கூறியது...

'I've been here a year. I barbeque with this dude, we eat ribs and what not and listen to salsa music. He's somebody you look and then you look away because he's just doing normal stuff. You got some big testicles to pull this one off."

பலர் உங்களை ஹீரோவாக கொண்டாடுகிறார்களே என்று கேட்ட போது அவர் கூறியது...
  
'Bro, I’m a Christian, an American, and just like you. We bleed the same blood, put our pants on the same way."

இப்போது அவர் வாழ்க்கையை பற்றி கேட்ட போது...

'Up until yesterday, the only thing that kept me from losing sleep was lack of money. You know what I'm saying? But now that that's going on and I think I could have done this last year...'.

மேலும் இது சம்பந்தமாக தனக்கு எந்த பரிசும் வேண்டாம் என்றும் அப்படி யாரும் தர முன் வருபவர்கள் அந்த பெண்களுக்கே அனைத்தையும் கொடுக்கவும் என்றும் சொல்கிறார் ராம்சே.  


ராம்சேயின் வீர தீரத்தை மெச்சி அவர் வேலை செய்த ஹட்ஜெஸ் உணவகம் அவர் பெயரில் பர்கர்  ஒன்றை அறிமுக படுத்தியுள்ளது. 


இருப்பினும், ராம்சேயின் மற்றும் ஒரு அயலவரான ஆங்கிலம் தெரியாத ஸ்பானிய மொழி மட்டுமே பேசும் எஞ்சல் கொர்டேரோ என்பவர், அவர் தான் முதலில் வந்து கதவை உடைத்ததாகவும், அதன் பின்பு தான் ராம்சே அங்கு வந்ததாகவும் பேட்டி கொடுத்திருகிறார். ஆனால் ராம்சே பிரபலமானதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும், அந்த பெண்களை காப்பாற்றிய செய்கை ஒன்றே தனக்கு ஆத்மா திருப்தி அளிப்பதாகவும் கூறியிருக்கிறார். 

இன்னும் ஒரு செய்தியோ ராம்சே 1997, 1998, 2003 ஆம் ஆண்டுகளில் மனைவியை துன்புறுத்தியதற்காக ராம்சே கைது செய்யப் பட்டிருந்தார் என்றும் கூறிகிறது.

*   *   *

மீட்கப்பட்ட பெண்களையும் சிறுமியையும் காவல் துறையினர் வைத்திய சாலையில் அனுமத்தித்து, விசாரிக்கிறார்கள். அதில் அந்த சிறுமி 6 வயதுடைய ஜோஸ்லீன், அமேண்டாவுக்கும், ஏரியல் காஸ்ட்ரோவுக்கும் பிறந்தது என்று அறிகிறார்கள். ஜோஸ்லீனை மாத்திரம் காஸ்ட்ரோ சில நேரங்களில் வெளியில் அழைத்து சென்று வருவதாகவும் கூறி இருக்கிறார் அமெண்டா. ஆறு வருடங்களுக்கு முன் ஒரு கிறிஸ்மஸ் நாளில், குளியல் தொட்டியில் ஜோஸ்லீனை பெற்றதாகவும், அதற்க்கு மற்றைய பெண்கள், குறிப்பாக மிஷெல் உதவியதாகவும் சொல்லி இருக்கிறார். அதன் பின் ஜோஸ்லீன்க்கு தானே வீட்டில் பாடம் சொல்லி கொடுத்து வந்ததாகவும் சொல்கிறார்.

அமேண்டாவும், ஜோஸ்லீனும் பலகீனமாக காணப்பட்டாலும், உடல் ரீதியாக நல்ல நிலையிலேயே இருந்திருக்கிறார்கள். அதனால் தான் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே வீடு செல்ல அனுமதிக்கப் பட்டார்கள். கூடவே அவர்கள் புகைப்படமும் வெளியிடப்பட்டது. சகோதரியுடன் அமெண்டாவும் (நடுவில்), சிறுமி ஜோஸ்லீனும் கீழே... சிறுமி ஜோஸ்லீன் தனது குழந்தை என்பதாலும், அமெண்டா அவர் தாய் என்பதாலும் காஸ்ட்ரோ அவர்கள் இருவரிடமும் சற்று கருணையுடனும், அன்புடனும் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மிஷெலினதும், ஜினாவினதும் நிலையோ மிகவும் பரிதாபத்துக்குரியது. அவர்கள் இருவரினது புகைப்படங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை. காரணம் இருவரையும், பட்டினி போட்டும் , மாதக்கணக்கில் சங்கிலியால் பிணைத்தும் கொடுமை படுத்தி இருக்கிறான் காஸ்ட்ரோ. இவர்களில் யாராவது அவனால் கர்ப்பமடைந்தால் அவர்களுக்கு உணவு கொடுக்காமல் வருத்தியும், வயிற்று பகுதியில் கண் மூடித்தனமாக அடித்தும் அவர்களுக்கு கருச்சிதைவு செய்து விடுவானாம். அவர்களில் ஒருவருக்கு கேட்கும் திறன் அற்றுப் போயிருப்பதாகவும், இன்னொருவருக்கு கழுத்தை திருப்ப முடியாது இருப்பதாகவும் உறதி படுத்தாத செய்தகள் கூறுகின்றன. இவர்களுடைய உருவங்கள் சற்று விகாரமடைந்து இருப்பதாகவும், அவர்களுக்கு நீண்ட நாள் மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும், அது வரை அவர்களை பொது மக்களின் கண்ணில் இருந்து மறைத்து வைக்கவே காவல் துறை அறிவுறுத்தி இருப்பதாக தெரிகிறது. 

அதனால் தானோ என்னவோ ஜினா உடலை முற்றாக மூடிய நிலையிலான அங்கி அணிந்து வீடு திரும்பியிருக்கிறார். அந்த படக்காட்சி கீழே...
மூவரில்  மிஷெல் தான் அதிகப் படியான சித்திரவதைக்கு உள்ளானதாக தெரிகிறது. மேலும் அவர் குடும்பத்திற்கும் அவருக்கும் 10 வருடங்களுக்கும் முன்பே நல்ல உறவு இல்லை. தற்போது சக்கர நாற்காலில் இருக்கும் அவர் பேத்தி ஒருவர் தான் மிஷேலின் உறவினராக அறியப்படுகிறார். அவர் அம்மாவும் வேறு திருமணம் செய்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. எனவே மிஷெல் விருப்பப்படி, அரசே அவரை ஒரு காப்பகத்தில் வைத்து பராமரிப்பதாக செய்திகள் கூறுகின்றன.

*   *   *

காஸ்ட்ரோ சகோதரர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு விசார்க்கப்பட்டனர். இவர்களில் ஏரியல் காஸ்ட்ரோவை தவிர மற்றைய இருவரும் விடுவிக்கப் பட்டு விட்டனர். இந்த கடத்தல்களில் ஏரியல் காஸ்ட்ரோ மட்டுமே தனியாக செயல் பட்டதாக காவல் துறை நம்புகிறது.


யாரிந்த ஏரியல் காஸ்ட்ரோ? போட்டோ ரிக்கோ நாட்டில் இருந்து குடி பெயர்ந்து வந்தவர்கள் தான் இவன் குடும்பம். தற்போது 52 வயதான காஸ்ட்ரோ முன்னாள் பள்ளி பஸ் ஓட்டுனர். ஓட்டுனராக இருந்த போது கவன குறைவாக நடந்து கொண்டமைக்காக முதலில் எச்சரிக்கை செய்யப்பட்டு பின் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளான். உள்ளூர் பப்பில் கிட்டார் வாசிப்பாளராக இருந்திருக்கிறான். அவனை அறிந்தவர்கள், ராம்சே உட்பட,  'இவனா அவன்!' என்று ஆச்சரியப்பட்டு போகிறார்கள். மே 2 ஆம் திகதி என்ன காரணத்தினாலோ தனது 'பேஸ்புக்'கில்  'Miracles really do happen, God is good :) '  என்று எழுதியிருக்கிறான்.

அந்த வீட்டில் அவன் தனியாகவே வாழ்ந்து வந்திருக்கிறான். எப்போதுமே அவன் தன் மோட்டார் சைகிளையோ, அல்லது 'பிக் அப்' வண்டியையோ  வீட்டின் பின் புறமாக நிறுத்திவிட்டு, பின் கதவு வழியாகவே வீட்டினுள் செல்வதாக அயலவர் கூறியுள்ளனர். வீடு எப்போதும் இருள் சூழ்ந்து காணப்பட்டதாகவும் , எப்போதாவது முன் புறம் ஒரு சிறிய  மின் விளக்கு எரிவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காஸ்ட்ரோ தற்கொலைக்கு முயற்சி செய்யலாம் எனபதால் 24 மணி நேர கண்காணிப்பிலேயே இருக்கிறான். நீதி மன்றத்தில் வழக்கு வரும் வரை, அவன் செய்த கடத்தல்களின் பின்னணி வெளியுலகுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதே போல் பாதிக்கப்பட்ட பெண்களும் சாட்சியம் சொல்லும் வரை அவர்களை 10 வருடமாக இன்னும் எவ்விதமான சித்திரவதைகளை காஸ்ட்ரோ செய்தான் என்பதும் அறிய முடியாது.

இது இவ்வாறாக இருப்பினும் காஸ்ட்ரோ போன்ற மனபிறழ்வு உள்ளவர்கள் வாழும் இதே பூமியில் தான் நாம் குழந்தைகளை வளர்த்து எடுக்க வேண்டும் என்று எண்ணும் போது, பயம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை!
Friday, 17 May 2013

☠ - 3 பேர் 3 கடத்தல்!!!

இது ஏற்கனவே நீங்கள் படித்த செய்தியாக இருக்கலாம். இருப்பினும் பெண் குழந்தையின் பெற்றோராகவும், உறவினர், நண்பர்கள், பழகியோர் என அனைவருக்கும் அழகிய பெண் குழந்தைகள் இருப்பதாலும், நம் அயலவர்களுடன் நல் உறவுகளை பேணாது தீவு போல வாழ கற்று கொள்ளும் நிலை பெருகி வருவதாலும், நம்மிடையே எவ்வாறான மனித மிருகங்கள் உலாவி கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவும்  இதை எழுதுவது அவசியம் என்று தோன்றியது. 

*  *  *

2002 ஆகஸ்ட் 22 : 21 வயதான பெண் மிஷெல் நைட் ஐ கடைசியாக அவரை அறிந்தவர்கள் பார்த்திருக்கிறார்கள். அடுத்த நாள், மிஷெலை காணவில்லை என க்லீவ்லண்ட்  காவல் துறையினருக்கு புகார் போகிறது. ஏற்கனவே மிஷலுக்கும் அவர் குடும்பத்துக்கும் முறையான புரிந்துணர்வு இல்லாததால், அவரை 'runaway ' எனும் 'வீட்டை விட்டு வெளியேறுதல்' ஆக இருக்கலாம் எனும் அடிப்படையில் காவல் துறையினர் விசாரித்து விட்டு, புகாரை கிடப்பில் போட்டு விடுகிறார்கள்.
 

2003 ஏப்ரல் 21: பர்கர் கிங் உணவகத்தில் தனது பண்டியை முடித்த அமெண்டா பெரி, தனது சகோதரியை தொலை பேசியில் அழைத்து வீடு நோக்கி வர தயாராவதாக சொல்கிறார். அடுத்த நாள் அவரின் 17 ஆவது பிறந்த நாள். ஆனால் அன்றைய தினம் அமெண்டா பேசியது தான் அவரின் குடும்பத்தினருடன் ஆன கடைசி தொடர்பு. அதன் பின் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. 


2004 ஏப்ரல் 2 : 14 வயதேயான ஜியோஜினா டிஜீசஸ் பள்ளி முடித்து ஒரு சிநேகிதியுடன் வீடு திரும்பும் வழியில், ஒரு கட்டண தொலைபேசியில் இருந்து சிநேகிதியின் தாயாரை அழைக்கிறார். அழைத்து தன்னுடன், தனது வீட்டில் இன்றிரவு சிநேகிதி தங்கலாமா என்று கேட்கிறார். இல்லை என்று பதில் வருகிறது. அன்று ஜினா வீடு வந்து சேரவில்லை.இந்த மூவரும் வெவ்வேறு கால காட்டத்தில் காணாமல் போயிருந்தாலும் மூவரும் காணாமல் போனதாக கூறப்படும் இடம் ஒன்றுக்கொன்று  மிக அருகாமையில் தான் இருந்திருக்கிறது .


*  *  *

2004 ஏப்ரல் : இந்த மாதம் ஒளிபரப்பான "America's Most Wanted" என்ற எனும் அமெரிக்காவின் பழமை வாய்ந்த காணமல் போனோர் பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடரில் அமெண்டா, ஜினா காணாமல் போன செய்தி இடம் பெறுகிறது. அதில் இருவரும் காணாமல் போன இடம் 'லொரெயின் அவென்யூ' என்றும் குறிப்பிட படுகிறது.*   *   *
2004 நவம்பர் : அமெண்டாவின் தாயார் லூவானா மில்லர் மற்றொரு புகழ் பெற்ற தொலைக்காட்சி தொடரான "The Montel Williams Show " இல் தோன்றுகிறார். அங்கே 'Psychic' என்று மேலை நாடுகளில் கூறப்படும் ஒருவகை குறி சொல்பவரிடம் தனது மகள் குறித்து கேக்கிறார். அதற்கு அமெண்டா உயிருடன் இல்லை என்று பதில் வருகிறது. அந்த குறி சொல்பவர் சொன்ன வாக்கியம் "She's not alive, honey.".

 *   *   *

2006 மார்ச் : அமெண்டாவின் தாயார் லூவானா தனது 44 ஆவது வயதில் தன் மகளுக்கு என்ன ஆனது என்று தெரியாமலேயே   மாரடைப்பினால் உயிரிழக்கிறார். அவரின் உற்றாரும் நண்பர்களும் மகளை இழந்த சோகமே அவர் இறப்புக்கு காரணம் என்று அடித்து கூறுகிறார்கள். 

*   *   *

2006 செப்டம்பர் : காவல் துறையினர் ரகசிய தகவலின் அடிப்படையில் க்லீவ்லண்ட்டில் உள்ள ஒரு வீட்டின் வாகனம் நிறுத்தும் இடத்தின் தளத்தை தோண்டுகிறார்கள்.அந்த வீடு 35 வயதான மத்தியூ ஹுரியத் எனும் பாலியல் வன்முறை குற்றவாளிக்கு சொந்தமானது.  காவல் துறை எதிர்பார்த்தது ஜினாவின் உடலை. ஆனால் வெறும் கையோடு திரும்புகிறார்கள்.

*   *   *
2009 :  அமெண்டா மற்றும் ஜினாவின் குடும்பத்தினர் உலக புகழ் பெற்ற "Oprah Winfrey's show " வில் தோன்றி தமது அருமை மகள்கள் பிரிந்ததை விபரிக்கிறார்கள். அவர்கள் உடல் கிடைக்கும் வரை அவர்கள் உயிருடன் தான் இருப்பதாக நம்புவதாகவும் இன்னும் தேடுவதை கைவிடவில்லை  என்றும் கண்ணீருடன் கூறுகிறார்கள்.

*   *   *

2011 நவம்பர் : க்லீவ்லண்ட்  நகருக்கு அருகே உள்ள, 2207 செமோர் அவென்யூ எனும் தெருவில் அமைந்துள்ள ஏரியல் காஸ்ட்ரோ என்பவரின் வீட்டில் இருந்து கூக்குரல் சத்தம் கேட்பதாக அயல் வீட்டவர் ஒருவர் காவல் துறைக்கு தொலைபேசி மூலம் புகார் அளிக்கிறார். காவல் துறையினர் வந்து வீட்டின் அழைப்பு மணியை அடித்து பார்கிறார்கள். யாரும் திறக்கவில்லை. திரும்பி சென்று விடுகிறார்கள்.

*   *   *

2012 மே/ஜூன் :  காஸ்ட்ரோவின் வீட்டின் அருகில் வசிக்கும் நினா சமொய்ளிக்ஸ் எனும் பெண், காஸ்ட்ரோவின் வீட்டின் பின்புறத்தில் ஒரு பெண்ணை நிவாணமாக பார்த்ததாக காவல் துறைக்கு தெரிவிக்கிறார். ஆனால் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

*   *   *

2013 மே 5 : காஸ்ட்ரோவின் மற்றொரு அயலவர் இஸ்ரயில் லுகோ, காஸ்ட்ரோ ஒரு சிறுமியுடன் அருகில் உள்ள மைதானத்தில் நடந்து கொண்டிருப்பதை பார்க்கிறார். அருகில் சென்று யார் இந்த குழந்தை என்று கேட்க 'எனது பெண் நண்பியின் குழந்தை' என்று பதிலளிக்கிறார் காஸ்ட்ரோ.

*   *   *

 2013 மே 6 : மாலை க்லீவ்லண்ட் மட்டுமல்ல முழு அமெரிக்காவும் ஏன் உலக தொலைகாட்சிகள் முதலாக ஊடகங்கள் அனைத்தும் பரபரப்பாகின்றன. மிஷெல், அமெண்டா, ஜினா ஆகியோர் காணாமல் போய் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு பின் ஒரு 6 வயது மதிக்க தக்க  சிறுமியுடன் மீட்கப்பட்டதாக  செய்திகள் பரவுகின்றன. க்லீவ்லண்ட் செமோர் அவென்யூவில் மக்கள் கூடி விடுகிறார்கள். பலருக்கு அதிர்ச்சியில் இருந்து விலக முடியவில்லை. சிலர்  ஆனந்த கண்ணீர் மல்க ஒருவரை ஒருவர் கட்டி தழுவிக் கொள்கிறார்கள். அமெண்டா மற்றும் ஜினாவின் குடும்பத்தினர், உறவினர்கள் தமது பிரார்த்தனைக்கு கடவுள் மனம் இரங்கி விட்டதாக குதூகலிக்கிறார்கள். காவல் துறையினர் மூன்று பெண்களையும் குழந்தையையும் பாதுகாப்பாக வைத்திய சாலையில் அனுமதிக்கிறார்கள். மிஷெல், அமெண்டா, ஜினா ஆகியோர் மீட்கப்பட்ட 2207 செமோர் அவென்யூ வீட்டின் சொந்தக்காரனான ஏரியல் காஸ்ட்ரோ மற்றும் அவர் சகோதரர்கள் இருவரை சந்தேகத்தின் பேரில் தேடுவதாக காவல் துறை அறிவிக்கிறது.


 *   *   *

ஏரியல் காஸ்ட்ரோ யார்? எதற்காக மிஷெல், அமெண்டா, ஜினா ஆகியோர் கடத்தப்பட்டனர்? கடந்த 10 ஆண்டுகளில் அவர்களுக்கு நடந்தது என்ன? 6 வயது சிறுமி யார்? இவர்கள் எவ்வாறு மீட்கப்பட்டனர்? போன்றவற்றை இந்த பதிவின் நீளம் அதிகரித்து விட்டதனால் அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

 (...அடுத்த பதிவில் முடியும்)
 

Tuesday, 14 May 2013

ஆபிரகாம் லிங்கனும் நானும்! - 3

இதற்கு முந்தைய பாகத்தை படிக்க கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்...

 ஆபிரகாம் லிங்கனும் நானும்! - 2

  னதில் ஒரு சிறு கணக்கு ஓடியது. SATCO சொன்னது போல நாம் ஆறு பேர் மற்றும் அமெரிக்க தூதரகத்தில் இருந்து ஒரு சிலர் வரலாம் என கணக்கிட்டால் ஒரு உலங்கு வானூர்தியில் (Helicopter) செல்வதற்கான சாத்திய கூறுகள் இல்லை. மேலும் இவ்வாறான விமானங்கள் செல்வதற்கான தூரத்துக்கப்பால் கூட 'ஆபிரகாம் லிங்கன்' இருக்கலாம். அப்படியாயின் நிலையான இறக்கைகளை உடைய விமானத்தின் மூலம் தான் செல்ல வேண்டும். திடீர் என கார்ல் சொன்னது நினைவுக்கு வந்தது.


*   *   *

 கார்ல் - நோர்வேயில் 'வானிலை' குறித்து மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின் சொந்தக்காரன். அமெரிக்க குடியுரிமையும் பெற்றவன். உலகில் எங்கெல்லாம் வானிலை அவதானிப்பு நிலையம் இருக்கிறதோ அங்கெல்லாம் தன் மென்பொருள் இருக்க வேண்டும் என விரும்புபவன். அவனது 'weather graphics ' மென்பொருள் இப்போது ஐரோப்பாவின் பல முன்னானி தொலைக்காட்சி நிலையங்களில், செய்தியின் முடிவில் வானிலை பற்றி கூறும் போது பின்னணியில் பயன் படுத்துகிறார்கள். இப்போ இதற்கும் நமது கதைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா...சொல்கிறேன்.கார்லின் பொழுதுபோக்கு பறத்தல். இதற்கு ஏதுவாக தனியார் விமானஒட்டி உரிமை பத்திரம் எடுத்து வைத்திருக்கிறான். இந்த உரிமை பத்திரத்தில் அனுமதிக்கப்படும் அத்தனை விமானங்களையும் ஒட்டி பார்த்துவிட வேண்டும் என்பது அவன் கனவு. அவனுடைய மென்பொருளை, குறிப்பாக இராணுவ, விமானபடை தளங்கள், பயணிகள் விமான நிலையங்கள் உபயோகிப்பாதால் அவனுக்குண்டான தொடர்புகளை பயன் படுத்தி அவனது கனவை முடிந்தளவு நனவாக்கிக் கொண்டே இருக்கிறான். 'F - 15' ரக யுத்த விமானங்களின் இரண்டு இருக்கை இருக்கும் பயிற்சி விமானத்தில் கூட பறக்கும் பாக்கியம் பெற்றவன் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.சில வருடங்களுக்கு முன் அவனுடன் ஒரு முறை பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னான், அவனது வாழ்நாளில் ஒரு முறையேனும் ஒரு விமானத்தில் சென்று இயக்கத்தில் இருக்கும் கப்பலின் தளத்தில் இறங்க வேண்டும். அது கிட்டாத பட்சத்தில்  அப்படி கப்பலின் மேல் தரையிறங்கும் விமானத்தில் ஒரு பயணியாகவேனும்  போகவேண்டும். 'அதில் என்ன அப்படி ஒரு சிறப்பு?' என்று அப்பாவியாக நான் கேட்ட போது ஒரு கணம் 'உன் அறிவு இவ்வளவுதானா?' என்பது போல் உற்று நோக்கியவன் சொன்னான். அதை சொல்வதை விட அனுபவித்தல் தான் தெரியும் என்றவன் அவனால் முடிந்தவரை சுருக்கமாக விபரித்தான். நான் வியப்பில் ஆழ்ந்தேன்.

*   *   *

 ப்போது ரோலர் கோஸ்டர் போன்ற கேளிக்கை சாதனங்களில் செல்லும் போது எப்படி பயமும், மகிழ்வும் மாறி மாறி வருமோ அது போன்ற நிலையில் இருந்தேன். இது வாழ்நாளில் யாருக்கும் கிடைக்காத ஒரு சந்தர்ப்பம். ஆனால் கார்ல் கூறியதில் இருந்து அது கரணம் தப்பினால் மரணம் போன்ற சாத்தியகூறும் உண்டு. சரி என்ன ஆனாலும் போவது என்று முடிவு எடுத்து விட்டேன். ஆனால், வீட்டில் 'எப்படி போகிறோம்' போன்ற விபரங்கள் சொல்லாமல், வேலையில் இருந்து ஆறு பேர் கப்பலுக்கு போகிறோம்; வருவதற்கு ஒரு நாள் ஆகும் என்று மட்டும் கூறுவதாக முடிவு எடுத்து கொண்டேன்.

கார்ல் அப்படி என்ன தான் சொல்லியிருந்தான் என்கிறீர்களா? அவன் சொன்னதன் சுருக்கம் இரண்டு வாக்கியங்கள் தான்.1. Catapults assisted Take off
    


2. Arrestor wire Landing 

   
 


இதன் விளக்கம் அடுத்த பாகத்தில்... ...தொடருவேன். 

Monday, 6 May 2013

ஆபிரகாம் லிங்கனும் நானும்! - 2

 இதன் முதல் பாகத்தை படிக்க கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்...

ஆபிரகாம் லிங்கனும் நானும்!


து 2010ஆம் ஆண்டு. ஒரு அழகிய நவம்பர் மாதம். நான் வாழும் பூகோள பகுதியில் கடும் வெப்பம் குறைந்து கடும் குளிர் ஆரம்பிக்குமுன் வரும் இதமான காலநிலையை கொண்டது தான் நவம்பர் மாதம்.ஆதலால் இங்கு நவம்பர் என்றுமே அழகிய மாதம் தான். இந்த மாதத்தில் தான் 'வியர்க்கும்', 'குளிரும்' போன்ற முறைப்படுகளின்றி அனைவரும் குடும்பத்துடன் மாலைவேளைகளை மகிழ்ச்சியுடன் 'What a beautiful weather!' என்று கொண்டாடி  புளங்காகிதப் பட்டுக்கொள்ளும் மாதம். இன்னும் சிலரோ 'A wonderful weather to walk...' என்று நடப்பதற்கான உடைகளையும் பாதணிகளையும் அணிந்து கொண்டு போகிற வழியில் உள்ள நொறுக்கு தீனிகளை எல்லாம் கொறித்து, நடப்பதால் எரித்த கலோரிகளை விட அதிகமான கலோரிகளை ஏற்றி கொள்ளும் மாதம். ஒரு வேளை நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவராய் இருந்து, கூடவே ஒரு நண்பர்கள் குளாம் இருப்பின் ஒரு BBQ Grill வாங்கி அதில் நிலக்கரியை கொட்டி, நடப்பன, பறப்பன முதல் தக்காளி, சோளம், குட மிளாகாய், cottage cheese என கையில் கிடைத்தவைகளை, அரை கால்சட்டை, பனியன், ஒரு பேஸ்பால் தொப்பி அணிந்தவாறே சுட்டு, 'This is healthy eating you know...' என்றவாறே  வெந்ததையும், வேகாததையும் கடித்து குதறி, தொண்டையில் சிக்கியவற்றை ஒரு சில பைண்ட் பீரை உள்ளே விட்டு வயிறு வரை தள்ளிக்கொள்ளும் மாதம்.   

 
அப்படியான ஒரு மாதத்தின் காலையில், என் அலுவலகத்தில் வழமை போல பணியில் ஈடு பட்டிருந்த போது இன்டர்காம் ஒலித்தது. மறுமுனையில் SATCO. விமான கட்டுப்பாட்டு தளத்தை அறிந்தோருக்கு  SATCO எனும் வார்த்தை மிக பழகியதொன்று. Senior Air Traffic COntroller ஐ தான் சுருக்கமாக SATCO என்று அழைப்பார்கள். அவரின் பணி இடம் எனது பணியிடத்தில் இருந்து இரண்டு அறைகள் தள்ளி தான் இருக்கிறது. அவர் என்னுடைய மேல் அதிகார படி நிலையில் (Reporting hierarchy)  இல்லையாயினும், பல திட்டபணிகளில் அவரின் கீழ் பணி புரிந்திருக்கிறேன். எந்த சிக்கலான பிரச்சனைகளையும் எளிதான சிறிய கூறுகளாய் பிரித்து பின் ஒவ்வொன்றாய் தீர்ப்பது அவரிடம் நான் கற்றுக்கொண்ட பாடம்.  
'Are you busy at the moment?"

என்னுடைய பல ஆண்டு கால அலுவலக அனுபவம்  இவ்வாறான கேள்விகளை சற்று எச்சரிக்கையுடனேயே அணுகவேண்டும் என்று போதித்திருந்தது. காரணம் 'No' என்று பதிலளித்தால், இவன் என்ன வேலை வெட்டி இல்லாமல் உடகார்ந்திருக்கிறான் என்று பொருள் படலாம். அதே வேளை 'Yes' என்று கூறி அவர் சொல்லவருவதை முளையிலேயே கிள்ளி விட நேரிடலாம். எனவே...

'Certainly not for you!' என்றேன்.

'I'll be there in a tick' என்று இணைப்பை துண்டித்தார்.

சில நொடிகளில் என் முன்னாள் உள்ள இருக்கையில் அவர்.

'Are you free this weekend?"

என்னடா இது... மனிதர் இன்று காலை முதல் எடக்கு முடக்காவே கேள்வி கேட்டு கொண்டிருக்கிறாரே என்று எண்ணியவாறே...

'Nothing planned yet.' என்றேன்.

'Thats good...'  என்றவர், தொடர்ந்து கூறியதன் சாராம்சம் இது தான்.இன்று காலை அமெரிக்காவின் தூதரகத்தில் இருந்து, தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், நமது நிறுவனம் அமெரிக்க அரசுக்கும் ஆயுதப்படைக்கும் செய்து வரும் சேவையை பாராட்டும் பொருட்டு, அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்றை பார்வையிட நம்மில் ஆறு பேருக்கு VIP நுழைவுரிமை வழங்குவதாகவும் கூறப்பட்டதாம். ஏற்கனவே நான்கு பேரை தெரிவு செய்து விட்டதாகவும், ஐந்தாவதாக என்னை கேட்பதாகவும் சொன்னார் SATCO.
 
சிறு வயதில் எல்லோரையும் போலவே எனக்கும் ஆகாய விமானங்கள், கப்பல்கள், தொடர் வண்டிகள் மீது மிகுந்த ஈர்ப்பு இருந்தது. வீட்டில் என்ன செய்து கொண்டிருந்தாலும், ஆகாயத்தில் விமான சத்தம் கேட்டால், அனைத்தையும் போட்டுவிட்டு ஓடி வந்து வானத்தை அண்ணாந்து பார்த்த பருவம் இன்னமும் நினைவிருக்கிறது. வயது ஏற ஏற தொடர் வண்டி ஈர்ப்பு முதல் காணாமல் போனது. பின்பு கப்பல். ஆனால் விமானங்கள் மீது இருந்த ஈர்ப்பு மட்டும் குறையவே இல்லை. அதனால் தானோ என்னவோ, வேறு துறையில் படித்தாலும், ஒரு சில ஆண்டுகளை தவிர்த்து வேலை பார்க்கும் மீதி  அத்தனை ஆண்டுகளும் விமானங்களோடு கழிகின்றது.

இபோது திடீரென கப்பல் அதுவும் போர்க்கப்பல். அதுவும் அமெரிக்க போர்கப்பல் என்றவுடன் என் நல்ஊழை நினைத்து பொங்கி வந்த மகிழ்ச்சி வெள்ளத்தை கட்டுப்  படுத்திகொண்டு "எந்த கப்பல்?' தற்போது அப்படி ஒரு கப்பலும் நமது துறைமுகங்களில் நங்கூரமிட்டு இருக்கவில்லையே" என்றேன்.

SATCO சொன்னார்,"நீங்கள் போகவிருப்பது தற்போது வளைகுடா பகுதியில் கடமையில் இருக்கும் USS Abraham Lincoln எனும் விமான தாங்கி கப்பலுக்கு".எனக்கு தூக்கி வாரிப்போட்டது!  


தொடருவேன்...