"இப்ப எதுக்கு பழைய கதை!" என்கிறீர்களா? சொல்கிறேன். அந்த பாடலிலே A R ரஹ்மானுக்கும் சக்திஸ்ரீக்கும் பின்னால் ஒருவர் உட்கார்ந்து 'பொட்டி' (கம்பியூட்டர் அல்ல) தட்டி கொண்டிருப்பார் கவனித்தீர்களா? இல்லையெனில் பரவாயில்லை. பாடலை கீழே மீண்டும் ஒரு முறை பாருங்கள். குறிப்பாக 3:25 நிமிடத்தில் இருந்து 3:30 வரை பெட்டி தட்டுபவர் தனியாக வருவார். பார்த்து விட்டு மேற்கொண்டு படியுங்கள்.
அவர் தட்டும் அந்த பெட்டி வாத்தியத்தை பற்றியது தான் இந்த பதிவு. இந்த பெட்டி வாத்தியத்தின் பெயர் (ஸ்பானிய மொழியில்) Cajón. அதன் சரியான உச்சரிப்பு கஹோன்; அதன் அர்த்தம் பெட்டி. இது பெரு நாட்டில் இருந்து வந்ததாக கூறப்பட்டாலும் இதன் தோற்றம் மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க நாடுகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆபிரிக்காவில் இருந்து பெரு வந்த அடிமைகள் கிடைக்கும் மர பெட்டிகளில் தாளம் போட்டு பாட, அதுவே பின்னாளில் பெரு நாட்டில் கஹோன் ஆகி, பின் 18 ஆம் நூற்றாண்டளவில் தெற்கு அமெரிக்க நாடுகள் எங்கும் பரவியாதாக கூறப்படுகிறது.
கஹோன் ஆரம்பத்தில் மிக சாதாரண பெட்டியாக இருந்தாலும் பின் நாளில் பல வித தொழில் நுட்ப வளர்ச்சியின் பாதிப்புகளால் கூர்ப்படைந்து இன்று டிரம்ஸ் இசை கருவிக்கு இணையாக வளர்ந்திருக்கிறது. இந்த கஹோன் plywood எனும் ஒட்டப்பட்ட மர தகடுகளாலோ அல்லது MDF (Medium-density fibreboard ) எனும் செயற்கை மரத்தினாலோ செய்யப்படுகிறது. ஆனால் இதன் சிறப்பு snare வகை டிரம்ஸ் ஒலி எழுப்புவதற்காக பெட்டியின் உள்ளே பொருத்தப்படும் கம்பிகளும் தகடுகளும் தான்.
கஹோன் கருவியை அதன் மேல் உட்கார்ந்து வாசிக்க வேண்டும். கருவியின் நான்கு கால்கள் நிலத்தில் படும் வண்ணமும் உட்கார்ந்தோ இல்லை அதை சற்று பின்புறமாக சாய்த்து பின் இரண்டு கால்கள் மட்டும் தரையில் படும் வண்ணம் அமர்ந்தோ இக்கருவியை இசைக்கலாம். மேலும் ஒலியின் அதிர்வுகளை கட்டுபடுத்த, கஹோனின் முன் பக்கத்தை வாசிப்பவர் தன் காலால் மேலும் கீழும் தேய்த்து நெறிப்படுத்திக் கொள்ளலாம். இந்த கருவியை வாசிப்பதற்கு பிரத்தியேகமாக பயிற்சி தேவை எனினும் ஏற்கனவே ஒரு தாள வாத்தியத்தில் பயிற்சி உள்ளவர்கள் இலகுவாக கஹோனை வாசிக்க முடியும். இசைக்கருவிகளை கடவுளாக பார்க்கும் நம் கலாச்சாரத்துக்கு, ஒரு இசை கருவி மீது உட்காருவதும், பின் அதை காலால் தேய்ப்பதும் பண்பாட்டில் ஊறியவர்களுக்கு சற்று நெருடலாக தான் இருக்கும். ஆனால் 'புதியன புகுதலை' நம்மால் தடுக்கவா முடியும்.
கீழே கஹோன் ஒலியன் நீள அகலங்களை காண்பிக்கும் ஒரு சிறிய கஹோன் கச்சேரி...
இது போன்ற பல வீடியோக்களும், கஹோன் எப்படி வாசிப்பது போன்ற வீடியோக்களும் யுடியூபில் நிறைந்து கிடக்கின்றன. ஆர்வமிருந்தால் தேடிப்பார்த்து ரசியுங்கள்.
நெஞ்சுக்குள்ளே இருப்பது தான் தெரிவதில்லை... பெட்டிக்குள்ளே இவ்வளவு இருக்கிறதா...? நன்றி...
ReplyDeleteசாதாரண பெட்டியல்ல... சரக்குள்ள பெட்டி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Deleteஇந்த வாத்தியத்தைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். அவ்வளவாகத் தெரியாது. தெரியாத ஒரு சங்கதியை அழகாகச் சொன்னதற்காக நன்றி. தமிழ் இசையில் முறையாக இந்த கஹோன் இந்தப் பாடலில்தான் உபயோகப்பட்டிருப்பதாக நினைக்கிறேன்.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்கள் எண்ணம் சரியென்றே தோன்றுகிறது. உலகமெல்லாம் சுற்றுவதால் A R ரஹ்மானுக்கு இந்த வாத்தியத்தின் பால் பரிச்சியம் ஏற்பட்டு அதை தனது இசை அமைப்பில் பயன் படுத்தியிருக்கலாம்.
Delete