Monday, 29 April 2013

ஆபிரகாம் லிங்கனும் நானும்!


பிரகாம் லிங்கன்! அமெரிக்க சரித்திர நாயகர்களில் முக்கியமானவர். அமெரிக்காவின் 16 ஆவது அதிபர். 1809 இல் கென்டகியில் பிறந்து 1865 வாஷின்டன் D C இல்  துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காலமானார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவரின் வாழ்க்கை ஏற்றம், இறக்கம், வறுமை, செழுமை, சிறுமை, பெருமை, காதல், ஏமாற்றம் என ஒரு மனிதனால் சந்திக்க கூடிய அனைத்தையும் உள்ளடக்கியதாகவே அமைந்ததோடு மட்டுமல்லாது, ஒரு மனிதனின், நேர்மை, நம்பிக்கை, விடா முயற்சி போன்றவற்றுக்கு உதாரணமாகவே அமைந்தது. அடிமை தொழிலை ஒழித்தமை மற்றும் ஐக்கிய மாநிலங்களால் ஆன அமெரிக்காவை 1860 களின் மக்கள் போராட்டத்தின் (Civil War) போது உடைந்து போய்விடாமல் பாதுகாத்தமையும் அவரது சரித்திர சாதனைகளாகும்.



சரி இவருக்கும், இவர் பிறந்து 200 ஆண்டுகளுக்கு பின் வாழும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்க கூடும் என்று எண்ணுகிறீர்களா? இருக்கிறது. இந்த மகானின் பெயரினால் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அதிசய  சம்பவம் நிகழ்ந்தது.

அதற்குள் விபரமாக போகுமுன், இந்த பதிவுக்கான தூண்டுதலாக அமைந்தது சில நாட்களுக்கு முன் என் கண்ணில் பட்ட ஒரு செய்தி . அந்த செய்தியின் சாராம்சம் இதுதான்... 

USS ஆபிரகாம் லிங்கன் (CVN-72) எனும் நிமிட்ஸ் வகை (Nimitz - Class) விமான தாங்கி கப்பல், அமெரிக்க செனட்டில் ஏற்பட்ட நிதி ஒதுக்கீடு இழுபறி காரணமாக ஆறு வார தாமத்திற்கு பின், எரிபொருள் நிரப்பவும், செப்பனிடப்படவும் (Refueling and Complex Overhaul) நீயூ போர்ட் கப்பல் கட்டுமான தளத்திற்குள் இழுத்து வரப்பட்டது என்பதாகும்.


நிமிட்ஸ் வகை விமான தாங்கி கப்பல்கள் தான் உலகிலேயே மிகவும் பெரியவை. அவற்றை இயக்க பயன் படுவது சாதாரண எரிபொருள் அல்ல - இரண்டு அணு உலைகள். 85 விமானங்கள் வரை தாங்கி செல்லக் கூடிய அவை நிமிடத்துக்கு 4 விமானகளை விண்ணுக்கு அனுப்பவல்ல திறன் படைத்தவை. அவை வெறும் கப்பல்கள் அல்ல நடமாடும் விமான நிலையங்கள்.

ஆபிரகாம் லிங்கன் போன்ற நிமிட்ஸ் வகை விமானத்தாங்கி கப்பல்களின் ஆயுட் காலம் 50 வருடங்கள். கப்பல் வெள்ளோட்டம் விடப்படும் போது நிரப்பப்படும் அணு எரிபொருளின் கொள்ளளவு 25 வருடங்கள் மட்டுமே இயக்க போதுமானது. ஆகவே தான் மேற்கூறிய வகை கப்பல்கள் அவற்றின் வாழ்க்கையின் நடுப்பகுதியில் ஒருமுறை கப்பல் செப்பனிடும்  தளத்திற்கு வந்து போக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அணு எரிபொருள் மற்றும் செப்பனிட எவ்வளவு காலம் எடுக்கும் என்று எண்ணுகிறீர்கள்? ஏறக்குறைய நான்கு வருடங்கள். செலவு 2.5 பில்லியன் டாலர்கள்.

இப்போது உங்களுக்கு ஒன்று புரிந்திருக்க கூடும், ஆபிரகாம் லிங்கனுக்கும் எனக்குமான தொடர்பு அவரின் பெயரை தாங்கி வலம் வரும் USS ஆபிரகாம் லிங்கனின் ஊடாக தான் என்பதே அது. அத்தொடர்பு எப்படி ஏற்பட்டது என்பதை பதிவின் நீளம் கருதி அடுத்த பதிவில் பகிர்கிறேன்.

அது வரை இந்த அதிசய கப்பல் நீயூபோர்ட் கட்டுதளத்திற்குள் பல மணி நேரம் எடுத்து  நளினமாக பிரவேசிப்பதை அதி வேக இயக்கத்தில் இரண்டே நிமிடத்தில் பாருங்கள்.



தொடருவேன்...








6 comments:

  1. தொடர்பை விரிவாக அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்...

    என்னா வேகம்...!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி. அந்த தொடர்பு வெளிவரும் போது உங்களுக்கு எமாற்றமளிக்காது என்று நம்புகிறேன்.

      Delete
  2. அருமையான பதிவு!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் உங்கள் ஊக்குவிப்புக்கும் நன்றி.

      Delete
  3. அதிவேக இயக்கம் மிக ஆச்சரியம் அளித்தது ....!

    ReplyDelete

உங்கள் கருத்து...