Monday, 29 April 2013

ஆபிரகாம் லிங்கனும் நானும்!


பிரகாம் லிங்கன்! அமெரிக்க சரித்திர நாயகர்களில் முக்கியமானவர். அமெரிக்காவின் 16 ஆவது அதிபர். 1809 இல் கென்டகியில் பிறந்து 1865 வாஷின்டன் D C இல்  துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காலமானார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவரின் வாழ்க்கை ஏற்றம், இறக்கம், வறுமை, செழுமை, சிறுமை, பெருமை, காதல், ஏமாற்றம் என ஒரு மனிதனால் சந்திக்க கூடிய அனைத்தையும் உள்ளடக்கியதாகவே அமைந்ததோடு மட்டுமல்லாது, ஒரு மனிதனின், நேர்மை, நம்பிக்கை, விடா முயற்சி போன்றவற்றுக்கு உதாரணமாகவே அமைந்தது. அடிமை தொழிலை ஒழித்தமை மற்றும் ஐக்கிய மாநிலங்களால் ஆன அமெரிக்காவை 1860 களின் மக்கள் போராட்டத்தின் (Civil War) போது உடைந்து போய்விடாமல் பாதுகாத்தமையும் அவரது சரித்திர சாதனைகளாகும்.



சரி இவருக்கும், இவர் பிறந்து 200 ஆண்டுகளுக்கு பின் வாழும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்க கூடும் என்று எண்ணுகிறீர்களா? இருக்கிறது. இந்த மகானின் பெயரினால் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அதிசய  சம்பவம் நிகழ்ந்தது.

அதற்குள் விபரமாக போகுமுன், இந்த பதிவுக்கான தூண்டுதலாக அமைந்தது சில நாட்களுக்கு முன் என் கண்ணில் பட்ட ஒரு செய்தி . அந்த செய்தியின் சாராம்சம் இதுதான்... 

USS ஆபிரகாம் லிங்கன் (CVN-72) எனும் நிமிட்ஸ் வகை (Nimitz - Class) விமான தாங்கி கப்பல், அமெரிக்க செனட்டில் ஏற்பட்ட நிதி ஒதுக்கீடு இழுபறி காரணமாக ஆறு வார தாமத்திற்கு பின், எரிபொருள் நிரப்பவும், செப்பனிடப்படவும் (Refueling and Complex Overhaul) நீயூ போர்ட் கப்பல் கட்டுமான தளத்திற்குள் இழுத்து வரப்பட்டது என்பதாகும்.


நிமிட்ஸ் வகை விமான தாங்கி கப்பல்கள் தான் உலகிலேயே மிகவும் பெரியவை. அவற்றை இயக்க பயன் படுவது சாதாரண எரிபொருள் அல்ல - இரண்டு அணு உலைகள். 85 விமானங்கள் வரை தாங்கி செல்லக் கூடிய அவை நிமிடத்துக்கு 4 விமானகளை விண்ணுக்கு அனுப்பவல்ல திறன் படைத்தவை. அவை வெறும் கப்பல்கள் அல்ல நடமாடும் விமான நிலையங்கள்.

ஆபிரகாம் லிங்கன் போன்ற நிமிட்ஸ் வகை விமானத்தாங்கி கப்பல்களின் ஆயுட் காலம் 50 வருடங்கள். கப்பல் வெள்ளோட்டம் விடப்படும் போது நிரப்பப்படும் அணு எரிபொருளின் கொள்ளளவு 25 வருடங்கள் மட்டுமே இயக்க போதுமானது. ஆகவே தான் மேற்கூறிய வகை கப்பல்கள் அவற்றின் வாழ்க்கையின் நடுப்பகுதியில் ஒருமுறை கப்பல் செப்பனிடும்  தளத்திற்கு வந்து போக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அணு எரிபொருள் மற்றும் செப்பனிட எவ்வளவு காலம் எடுக்கும் என்று எண்ணுகிறீர்கள்? ஏறக்குறைய நான்கு வருடங்கள். செலவு 2.5 பில்லியன் டாலர்கள்.

இப்போது உங்களுக்கு ஒன்று புரிந்திருக்க கூடும், ஆபிரகாம் லிங்கனுக்கும் எனக்குமான தொடர்பு அவரின் பெயரை தாங்கி வலம் வரும் USS ஆபிரகாம் லிங்கனின் ஊடாக தான் என்பதே அது. அத்தொடர்பு எப்படி ஏற்பட்டது என்பதை பதிவின் நீளம் கருதி அடுத்த பதிவில் பகிர்கிறேன்.

அது வரை இந்த அதிசய கப்பல் நீயூபோர்ட் கட்டுதளத்திற்குள் பல மணி நேரம் எடுத்து  நளினமாக பிரவேசிப்பதை அதி வேக இயக்கத்தில் இரண்டே நிமிடத்தில் பாருங்கள்.



தொடருவேன்...








Tuesday, 23 April 2013

"நெஞ்சுக்குள்ளே..." தெரிந்த பாடல்; தெரியாத வாத்தியம்!

டந்த வருடம் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி MTV இல், கடல் படத்தில் இடம் பெற்ற "நெஞ்சுக்குள்ள..." என்ற பாடல்,  A R ரஹ்மான் பியானோ அர்காடியன் வாசிக்க அருகில் இருந்து சக்திஸ்ரீ கோபாலன் காலின் மேல் கால் போட்டபடி பாட வெளியானதும், பின் சில மணி நேரங்களிலே 'யுடியூப்'   இல் லட்சக்கணக்கான 'ஹிட்டு'களை அள்ளியதும் நாம் எல்லாம் அறிந்த சரித்திரம்.

 "இப்ப எதுக்கு பழைய கதை!" என்கிறீர்களா? சொல்கிறேன். அந்த பாடலிலே A R ரஹ்மானுக்கும் சக்திஸ்ரீக்கும் பின்னால் ஒருவர் உட்கார்ந்து 'பொட்டி' (கம்பியூட்டர் அல்ல) தட்டி கொண்டிருப்பார் கவனித்தீர்களா? இல்லையெனில் பரவாயில்லை. பாடலை கீழே மீண்டும் ஒரு முறை பாருங்கள். குறிப்பாக 3:25 நிமிடத்தில் இருந்து 3:30 வரை பெட்டி தட்டுபவர் தனியாக வருவார். பார்த்து விட்டு மேற்கொண்டு படியுங்கள்.




அவர் தட்டும் அந்த பெட்டி வாத்தியத்தை பற்றியது தான் இந்த பதிவு. இந்த பெட்டி வாத்தியத்தின் பெயர் (ஸ்பானிய மொழியில்) Cajón. அதன் சரியான உச்சரிப்பு கஹோன்; அதன் அர்த்தம் பெட்டி. இது பெரு நாட்டில் இருந்து வந்ததாக கூறப்பட்டாலும் இதன் தோற்றம் மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க நாடுகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆபிரிக்காவில் இருந்து பெரு வந்த அடிமைகள் கிடைக்கும் மர பெட்டிகளில் தாளம் போட்டு பாட, அதுவே  பின்னாளில் பெரு நாட்டில் கஹோன் ஆகி, பின் 18 ஆம் நூற்றாண்டளவில் தெற்கு அமெரிக்க நாடுகள் எங்கும் பரவியாதாக கூறப்படுகிறது.


  கஹோன் ஆரம்பத்தில் மிக சாதாரண பெட்டியாக இருந்தாலும் பின் நாளில் பல வித தொழில் நுட்ப வளர்ச்சியின் பாதிப்புகளால் கூர்ப்படைந்து இன்று  டிரம்ஸ் இசை கருவிக்கு இணையாக வளர்ந்திருக்கிறது. இந்த கஹோன் plywood எனும் ஒட்டப்பட்ட மர தகடுகளாலோ அல்லது MDF (Medium-density fibreboard ) எனும் செயற்கை மரத்தினாலோ செய்யப்படுகிறது. ஆனால் இதன் சிறப்பு snare வகை டிரம்ஸ் ஒலி எழுப்புவதற்காக பெட்டியின் உள்ளே பொருத்தப்படும் கம்பிகளும் தகடுகளும் தான். 

கஹோன் கருவியை அதன் மேல் உட்கார்ந்து வாசிக்க வேண்டும். கருவியின் நான்கு கால்கள் நிலத்தில் படும் வண்ணமும் உட்கார்ந்தோ இல்லை அதை சற்று பின்புறமாக சாய்த்து பின் இரண்டு கால்கள் மட்டும் தரையில் படும் வண்ணம் அமர்ந்தோ இக்கருவியை இசைக்கலாம். மேலும் ஒலியின் அதிர்வுகளை கட்டுபடுத்த, கஹோனின் முன் பக்கத்தை வாசிப்பவர் தன் காலால் மேலும் கீழும் தேய்த்து நெறிப்படுத்திக் கொள்ளலாம். இந்த கருவியை வாசிப்பதற்கு பிரத்தியேகமாக பயிற்சி தேவை எனினும் ஏற்கனவே ஒரு தாள வாத்தியத்தில் பயிற்சி உள்ளவர்கள் இலகுவாக கஹோனை வாசிக்க முடியும். இசைக்கருவிகளை கடவுளாக பார்க்கும் நம் கலாச்சாரத்துக்கு, ஒரு இசை கருவி மீது உட்காருவதும், பின் அதை காலால் தேய்ப்பதும் பண்பாட்டில் ஊறியவர்களுக்கு சற்று நெருடலாக தான் இருக்கும். ஆனால் 'புதியன புகுதலை' நம்மால் தடுக்கவா முடியும்.

கீழே கஹோன் ஒலியன் நீள அகலங்களை காண்பிக்கும் ஒரு சிறிய கஹோன் கச்சேரி...

  

இது போன்ற பல வீடியோக்களும், கஹோன் எப்படி வாசிப்பது போன்ற வீடியோக்களும் யுடியூபில் நிறைந்து கிடக்கின்றன. ஆர்வமிருந்தால் தேடிப்பார்த்து ரசியுங்கள். 

Friday, 19 April 2013

த குரூட்ஸ் (The Croods) - 3D

நிமேஷன் படம் என்றாலே குழந்தைகள் ரசிப்பதற்காக நாம் செய்யும் தியாகம் போன்ற மனநிலையுடம் தான் அவர்களை தியேட்டருக்கு அழைத்து செல்கிறோம். சோகம், நகைச்சுவை  போன்ற கட்டங்களில் அவர்களின் எதிர்விளைவு என்ன என்று கடை கண்ணால் பார்த்து கொள்கிறோம்.  படம் முடிந்து வெளியில் வரும் போது அவர்கள் ரசித்து பார்த்தார்களா என்று ஒரு முறைக்கு மூன்று முறை கேட்டு கொள்கிறோம். அவர்கள் 'ஆம்' என்றால் நமக்கு பரம திருப்தி. ஆனால் சில வேளைகளில் குழந்தைகளையும்  மீறி நாமும் படத்திற்குள் ஈர்க்கப்பட்டு, அவர்களை போலவே சிரித்து மகிழ்ந்து நிறைவாக வெளியேறும் அற்புத தருணங்களும் உண்டு. அது போன்ற ஒரு உணர்வை தந்த படம் தான் 'த குரூட்ஸ்' - 3D


படத்தின் கதை சுருக்கத்தை 'the world's first family road trip ' என்று பட போஸ்டரிலேயே போட்டு விளம்பர படுத்தி விடுகிறார்கள். 'ஒ அவ்வளவு தானே' என்று போய் உட்கார்ந்தால் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாவீர்கள். காரணம் கற்பனைக்கு எட்டாத நிறங்களில், முற்று முழுதாக கற்பனையில் உருவான உயிரினகள், தாவரங்கள், பூகோள அமைப்புகளுடன், அழிகிய ஆனால் அதிரவைகாத 3D யில் தருகிறார்கள். மேற்கூறிய அனைத்தும் ஏற்கனவே பார்த்த 'Avtaar', 'Ice Age: Continental Drift ' போன்ற திரைப்படங்களை ஞாபக படுத்தினாலும் பல வழிகளில் தனித்து ரசிக்க கூடியவையாகவே இருக்கின்றன.

கதை, கற்காலத்தில் வாழும் ஒரு குகை மனிதனின்  குடும்பத்தை பற்றியது. அந்த குடும்பத்தில் கண்டிப்பான குடும்ப தலைவன் (Grug - Nicholas Cage), கணவனின் கட்டுபாடுகளை சகித்து வாழும் தலைவி (Ugga - Catherine Keener), தந்தையின் கொள்கைகளுக்கு போராளியாக 'டீன்' வயது மகள் (Eep - Emma Store), அவளைவிட சில வருடங்கள் குறைவான அப்பாவி மகன் (Thunk - Clark Duke), ஆக்ரோஷமாக வழியில் வருவதை எல்லாம் கடித்து குதற முற்படும் தவழும் பருவத்து பெண் குழந்தை (Sandy - Randy Thom) மற்றும் "இன்றாவது சாகமாட்டாளா?!" என தலைவன் ஏங்கும் வயதான மாமியார் (grandma - Cloris Leachman)என கூட்டாக ஒரு குகையில் முண்டியடித்து வாழ்கிறார்கள். 


க்ரக், தனது குருட்ஸ் குடும்பத்தை கண் போல் காப்பவன். சுற்றியள்ள ஆபத்தான விலங்குகள், மேலிருந்து விழும் பாறைகள், கும்மிருட்டு  போன்றவற்றில் இருந்து பாதுகாக்க கண்டிப்பான விதிமுறைகளை விதித்து அவற்றை வேதமாக பின்பற்றுபவன், இரை தேட அதுவும் சூரியனிருக்கும் நேரத்தில் அதுவும் குறிப்பிட்ட எல்லைக்குள் அதுவும் குடும்பமாக மட்டுமே குகையை விட்டு வெளியே வர வேண்டும் என்பது தான் அவன் பின்பற்றும் விதி. இரை தேடுவதும், பின் குகைக்குள் அடைந்து கிடப்பதும் மட்டுமே வாழ்க்கை அல்ல. சுதந்திரமாக, எல்லைகளுக்கப்பால் சென்று புதியவைகளை அறிந்து கொள்ள முற்படும் மகள் ஈப், தந்தையின் கட்டுபாடுகளை மீறி ஒரு இரவில் குகையை விட்டு வெளியேறுகிறாள். அன்று உலக ஞானம்  ஓரளவு உடைய, பெற்றோர்களை இழந்த ஒரு நாடோடி இளைஞனை (Guy - Ryan Reynolds) சந்திக்கிறாள். அவன் மூலமாக அவள் குடும்பம் வசிக்கும் இடம் எரிமலைகளால் அழிந்து போக போகிறது என்று அறிகிறாள். அதை எடுத்து சொல்லும் போது நம்ப மறுக்கும் தந்தை, நில அதிர்வுகளால் தன் கண் முன்னே தன் குடும்பம் வாழும் குகை அழிந்து போவதை பார்த்து வேறு வழியின்றி அந்த இளைஞன் கூறும் உயரமான இடத்தை நோக்கி தன் குடும்பத்துடன் பயண படுகிறான்.

பலசாலியான ஆனால் உலக அறிவற்ற தந்தை, புத்திசாலியான நோஞ்சான் இளைஞன். தந்தையை விட்டு மெல்ல மெல்ல விலகி இளைஞனின் வார்த்தைகளுக்கு கட்டுப்படும் மகள். அதனால் ஏற்படும் விரிசல்கள். அனைவரும் எதிர் கொள்ளும் வித்தியாசமான் உயிரனங்கள், ஆபத்துக்கள். இவைகளை மீறி குரூட்ஸ் குடும்பம் எரிமலையில் இருந்து மொத்தமாக தப்பித்ததா என்பதை சுவாரசியமாகவும், கண்ணுக்கு விருந்தாகவும் மட்டுமல்லாது பாடமாகவும் சொல்லியிருக்கிறார்கள்.


மேலோட்டமாக பார்க்கும் போது அது சிறந்த தொழில் நுட்பத்துடன் கூடிய சகல வயதினரும் விரும்பும் படம் என்றாலும் அதையும் தாண்டி குறியீடுகள் மூலமாக காட்சியமைப்பும், கதையமைப்பும் சேர்ந்து வேறொரு அறிவு சார்ந்த தளத்தில் படம் பயணிப்பதை பார்த்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. இங்கு தான் படத்தை எழுதி இயக்கியிருக்கும் டி மிக்கோ மற்றும் (How to Train Your Dragon புகழ்) கிரிஸ் சாண்டர்ஸ் ஆகிய இருவரின் ஆளுமை  தனித்து நிற்கிறது. உதாரணமாக Croods என்பதே crude (செப்பமற்ற) என்ற பொருளை அடிப்படையாக வைத்தே உருவானதாக தோன்றுகிறது. குகை வாழ் மனிதர்களாக உருவகப்படுத்தப் பட்டிருப்பது இன்றும் எண்ணக் குகைகளில் வாழ்பவர்களியே குறிப்பிடுவது போல் உள்ளது. வாழ்க்கை என்பது என்றுமே ஒருவரின் சந்தோஷ எல்லைக்குள் (comfort  zone ) வாழ்ந்து முடிவதில்லை எனும் பாடத்தை மட்டுமல்லாது ஒரு தந்தையின் பொறுப்புகளையும், குடும்பத்தை காக்க படும் அவஸ்தைகளையும். வளர்ந்த பெண் பிள்ளைகள் தங்களை விட்டு விலகி போகும் நிதர்சனங்களையும்,  குடும்பமே குடும்ப தலைவனை நம்பி இருந்தாலும் குடும்ப தலைவன் என்பவன் ஒரு தனி போராளி என்று பொருள் படும் கடைசி காட்சிகளையும்   அமைத்திருக்கிறார்கள். கூடவே முதல் நெருப்பு, முதல் பாதணி, மாமியாரை பொறுக்க மாட்டாத குடும்ப தலைவன் என கேலி கிண்டல்களை அள்ளி தெளித்திருக்கிறார்கள். அநிமேஷன் தோற்றங்களை பொறுத்த வரையில் குறிப்பாக கதாநாயகியாக வரும் மகளின் உருவத்தை தங்க பதுமை போல் காட்டாது பல்கேரியா நாட்டு பழு தூக்கும் பெண்ணை போல வடிவமைத்திருப்பது மிக பெரிய ஆறுதல் என்பதை விட இயக்குனர்களின் தனித்தன்மை என்றே கூற வேண்டும்.

கண்டிப்பாக குடும்பத்துடன் படத்தை பாருங்கள். படம் முடிந்து வரும் போது குழந்தைகளுடன் படத்தை பற்றி உரையாடுங்கள். படத்துடன் வரும் காட்சி அமைப்புக்களுடன் மனித வாழக்கையை தொடர்பு படுத்தி காட்டுங்கள். நிச்சயம் அது அவர்கள் மனதில் பசு மரத்து ஆணி போல் பதியும்.