Thursday, 4 July 2013

நடுவில 4 நாள காணோம்!

"Yesterday is but today's memory, and tomorrow is today's dream". என்பார் லெபனானிய கவிஞர் கலீல் ஜிப்ரான். ஆனால் ஒருவருக்கு நேற்றைய நினைவுகளே இன்றைய கனவுகளாகி துன்புறுத்தினால்... அதுவும் நேற்றைய நினைவு தான் அப்படி துன்புறுத்துகிறது என்ற பிரக்ஞ்சையே இல்லாது இருப்பாரேயானால்...

* * *

பொதுவாக சுயசரிதை என்பது ஒருவரின் வாழக்கை வரலாற்றின் குறிப்பேடாக கருதப்படுகிறது. இது குறிப்பிட்ட அந்த மனிதர் நேரடியாகவோ அல்லது அவரின் பதிவுகளை கொண்டு இன்னொருவராலோ எழுதப்பட்டிருக்கும். நல்ல சுயசரிதை என்பது ஒருவரின் வளர்ச்சி, சாதனைகளை மட்டுமன்றி வாழ்க்கையின் தாழ்வு நிலைகளையும் தவறான முடிவுகளையும் திரிபின்றி நேர்மையாக கூறுவதாக இருக்க வேண்டும். மேற்கூறியவாறு எழுதப்பட்ட சுயசரிதைகளே மக்களால் பெரிதும் போற்றப்படுகின்றன. கண்ணதாசனின் 'வனவாசம்' பலரால் வியந்து கொண்டாடப்படுவதற்கான மூல காரணம் இதுதான். அதே வேளை கலைஞரின் 'நெஞ்சுக்கு நீதி' பல விமர்சனங்களுக்கு உள்ளாவதும் இதனால் தான்.



வர்த்தகரீதியாக ஒரு சுயசரிதை பிரசுரிக்கப்படுவதற்கு முக்கியமான தகுதியாக பார்க்கப்படுவது ஒருவரின் பிரபல்யம் அல்லது சாதனை. இதற்கு உதாரணமாக அப்துல் கலாமின் 'அக்கினி சிறகுகளை' கூறலாம். அதேபோல் எதிர்மறையான பிரபல்யம் கூட ஒருவரின் சுயசரிதை வெளிவர உதவலாம். சார்ல்ஸ் சோப்ராஜின் 'The Life and Crime of Charles Sobhraj ' என்ற புத்தகம் இதற்கு உதாரணம். இதன் அடுத்தபடியாக ஓரளவு தான் பிரபலமாக இருந்தாலும் அவரின் வாழ்வில் நடந்த குறிப்பிடும் படியான அசாதாரண நிகழ்வை மையமாக கொண்டு ஒருவர் சுயசரிதை எழுதலாம். இதற்கு உதாரணமாக, அணியில் இளைஞர்களுக்கு இடம் அளிக்கவேண்டும் என கூறி இவரை நீக்கிவிட்டு, பின் இவரை விட வயதானவர்களை வைத்து இலங்கை அணி அறிவிக்கப்பட்ட போது, மனமுடைந்து, இந்த நிகழ்வையே மையமாக கொண்டு ரோஷன் மகாநாம எழுதிய 'Retired Hurt' எனும் சுயசரிதையை கூறலாம்.

இவைகளை எல்லாம் தாண்டி ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்வில் நடந்த அசாதாரண நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டும் சுயசரிதை எழுதலாம். ஆனால் தமிழில் இந்த வகையான சுயசரிதங்களை நான் படித்ததாக நினைவில்லை. நீங்கள் படித்திருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.

* * *
    
இங்கிலாந்து நாட்டின் மையப்பகுதியில் உள்ள விவசாயம் சார்ந்த கிராமங்கள் உள்ளடக்கிய கோட்டம் தான் டார்பிஷேர். இந்த டார்பிஷேர் கோட்டத்தில், மான்செஸ்டரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் தான் நியூ மில்ஸ். ஒரு காலத்தில் நிலக்கரி சுரங்க தொழிலை வாழ்வாதாரமாக கொண்டிருந்த கிராமம் பின்னாளில் பின்னலாடை, விவசாயம் என வாழ்வாதாரத்தை காலதிற்கேட்ப மாற்றிக் கொண்டது. இந்த கிராமத்தில் ஏறக்குறைய 65 வருடங்களுக்கு முன் பிறந்தவள் தான் ஜானெட் ஹோல்ட்.

ஜானெடின் சிறுவயது சாதரணமாக, கிராமத்தில் உள்ள மற்றைய அவளை ஒத்த வயதினரின் வாழ்வை போலவே நகர்கிறது. ஆனால் மற்றவர்கள் போலல்லாது அவளுக்கு மிருகங்கள் என்றால் கொள்ளை பிரியம். மிருகங்களை பராமரிப்பது என்பது அவளின் பிடித்த பொழுதுபோக்கு. ஒரு விவசாயி ஆகி சொந்தமாக பண்ணை வைத்திருக்க வேண்டும் என்பது அவள் கனவு. ஜானெட்டின் மிருகங்கள்பால் இருக்கும் ஈர்ப்பை கவனித்த பெற்றோர் அவள் பன்னிரண்டு வயதாகும் போது, அவள் வற்புறுத்தலினால், அவளை லக்கி என்னும் குதிரை குட்டிக்கு உரிமையாளர் ஆக்குகிறார்கள். அந்நாளில் ஜானெடின் வீட்டருகே பண்ணை வைத்திருப்பவர் பிரெட் ஹன்போர்ட். மணமாகி தனிக்கட்டையான நடுத்தர வயதுடையவர்; அப்போதும் குதிரைகளை வைத்தே நிலத்தை உழும் விவசாயி. தன்னுடைய குதிரை குட்டியின் நடை பயிற்சிக்காக பண்ணையின் பரந்த நிலபரப்பை பயன்படுத்த அனுமதி கேட்க பிரெட்டை அணுகுகிறாள்  ஜானெட். அனுமதியும் கிடைக்கிறது. அந்த முதல் சந்திப்பு அவர்கள் இடையே ஒரு வித நட்பு துளிர்விட அத்திவாரம் இடுகிறது.



சில வருடங்கள் உருண்டோடுகின்றன. பருவ மங்கையாகி வரும் ஜானெட், பிரெட்டின் பண்ணையிலேயே பகுதி நேர பணியாளாகிறார். ஏற்கனவே மிருகங்கள் மீதிருக்கும் அபரித அன்பால் பணிகளை விரும்பி ஆர்வத்துடன் செய்கிறார். பிரேட்டும் தன் பங்குக்கு பண்ணை மற்றும் மிருகங்களை கையாள்வதில் உள்ள நுணுக்கங்களை கற்றுத்தருகிறார். வெகு விரைவிலேயே ஜானெட், மிருகங்களை இனப்பெருக்குதல், பால் கறத்தல், பன்றிகளுக்கு உணவளித்தல் போன்ற சகல பண்ணை வேலைகளில் கைதேர்ந்தவளாகிறார். ஜானெடுக்கு இந்த வெளிப்புற பணி வாழ்க்கை பிடித்திருந்தாலும், பெற்றோர்களின் நெருக்குதலின் பேரில் கிராமத்தில் ஒரு சட்டவல்லுனரின் அலுவலகத்தில் முழுநேர பணியாளராகவும் சேர்ந்து கொள்கிறார். ஜானெட்டின் ஆர்வம், நம்பகத்தன்மை மற்றும் மிருகங்கள் மீதிருக்கும் காதல் போன்றவற்றால் ஏற்பட்ட உந்துதல் அவரை முழ நேர அலுவலக பணியாளராகவும், மற்றைய நேர பண்ணை பணியாளராகவும் வாழக்கையை நகர்த்த உதவுகிறது. அலுவலக பணியால் வரும் வருமானம் மற்றும் பண்ணை வேலைகளில் ஜானெட் காட்டும் ஆர்வம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு ஒரு குறிப்பிட்ட பண பரிவர்த்தனை மூலம் ஜானெட்டை தனது பண்ணையின் வியாபார பங்குதாரராக்கி கொள்கிறார் பிரெட். இப்பொழுது முன்னை விட ஆர்வமாக நாள் தோறும் கடினமாக உழைக்கிறார் ஜானெட்.




வருடம்: 1976, மாதம்: மார்ச், திகதி: 19.

அப்போது ஜானெட்டுக்கு வயது 26. காலையில் விழித்தெழுகிறார். சற்று அசாதாரணமாக உணருகிறார். உடம்பு அசதியாய் இருக்கிறது. அவரின் அழுக்கு வெலிங்டன் பூட்ஸ் கட்டிலருகில் சேறும் சகதியுமாய் இருக்கிறது. இதுவரை ஒருநாளும் அழுக்கு பூட்சை கட்டில் வரை கொண்டுவந்ததில்லையே என்று துணுக்குறுகிறார். குழப்பமாக பண்ணைக்கு போய் பிரட்டை தேடுகிறார். ஆனால் வழமையைவிட எல்லாமே அமைதியாக இருப்பது போல் ஜானெட்டுக்கு தோன்றுகிறது. பிரெட் ஒருவேளை தன் பணிகளை முடித்துக்கொண்டு, காலை உணவுக்கு, அவர் இருப்பிடத்துக்கு சென்று விட்டாரோ என எண்ணியவாரே குதிரை சேணம் வைத்திருக்கும் அறையை திறக்கிறார். அங்கு அவரது நாய் உள்ளிருந்து குதித்து வெளியே ஓடுகிறது. அங்கு ஆணியில் பிரெட்டின் தொப்பி தொங்குகிறது. பிரெட் தொப்பியும் நாயும் இல்லாமல் எங்குமே சென்றது கிடையாது.  மேலும் இப்படி ஒருநாளும் பிரட் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேயும் போனதில்லை. பரபரப்பாகி அம்மாவை அழைத்துக்கொண்டு பிரெட் பேரை அழைத்தவாறே பண்ணையை சுற்றி தேடுகிறார். பிரெட் இல்லை. பிரெட் எப்போதாவது வெளியே செல்வது அவர் சகோதரி ஒருவரை பார்க்க மட்டுமே என்பது ஜானெட் நினைவுக்கு வருகிறது. உடனடியாக சகோதரியை தொலைபேசியில் அழைத்து விசாரிக்கிறார் அங்கும் பிரெட் வரவில்லை என்ற செய்தியே கிடைக்கிறது. பிரெட் ஒருவேளை வரலாம் என்று மேலும் சில மணிநேரம் பொறுத்திருந்து பார்கிறார்கள். பிரெட் வருவதாக தெரியவில்லை. மிகவும் வருத்தத்துடன் போலீசை கூப்பிடுகிறார்கள்.


போலீஸ் வந்து பண்ணையை சலடையாக சலித்து பார்க்கிறது. பிரெட் கிடைக்கவில்லை, ஜானெட்டை அழைத்து சென்று விசாரிக்கிறார்கள். அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. ஜானெட்டுக்கு கடைசி நான்கு நாட்களில் நடந்த எதுவுமே ஞாபகம் இல்லை. எவ்வளவும் முயன்றும் கடந்த நான்கு நாட்களை ஜானெட்டால் நினைவுக்கு கொண்டு வரமுடியவில்லை . அதே வேளை போலீசும் பிரெடை கண்டுபிடிக்க மிக பெரிய தேடுதல் வேட்டை ஒன்றை மேற்கொள்கிறார்கள். அந்த வேட்டை தோல்வியில் முடிகிறது. மேற்கொண்டு பிரெட்டுக்கு நெருக்கமானவர்களோடான விசாரணையில் பிரெட்டுக்கு பண நெருக்கடி இருந்தது தெரிய வருக்கிறது. அதைவிட பிரெடுக்கு வேறு பிரச்சனைகள், எதிரிகள் இருந்ததாக தெரியவில்லை. ஆதலால் பிரெட் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று  போலீஸ் முடிவெடுக்கிறது.  இறுதியில் பிரெடை பற்றி எந்த துப்பும் கிடைக்காததால் பிரெட் அதிகாரபூர்வமான 'காணாமல் போனவர்கள்' பட்டியலில் சேர்க்கப் பட்டு ஜானெட் விடுதலை செய்யப்படுகிறார்.



பிரெட் ஏன் திடீரென சொல்லாமல் கொள்ளாமல் மறைந்தார் என்பதற்கான விடை எவ்வளவு யோசித்தும் ஜானெட்டுக்கு கிடைக்கவில்லை. தன்னுடைய உயர்வில் ஒரு காரணியாகிய, வியாபார பங்காளி மறைந்தது ஜானெட்டுக்கு மிகுந்த துயரத்தை கொடுத்தது. எப்படியும் பிரெட் ஒரு நாள் திரும்பி வருவார் அது வரையாவது பண்ணையை தொடர்ந்து நடத்துவது என்று முடிவெடுக்கிறார்.  எனவே  தொடர்ந்து தனியாகவே பண்ணையையும் கவனித்து, சட்ட வல்லுனரின் அலுவலக வேலையையும் செய்து வருகிறார். நாளடைவில் அவருக்கு வித்தியாசமான கனவுகள் வரத்தொடங்கின. அவை ஒன்றும் சாதாரண கனவுகள்  இல்லை. அலறி துடித்து எழுந்திருக்க வைக்கும் அதி பயங்கர கனவுகள். அதாவது ஜானெட் ஒரு கதவை திறந்து வெளியே தப்பிப்பதற்கு கடுமையான பிரயத்தனத்துடன் வாழ்வா சாவா என்பது போல் ஓடுவது போன்றும் அது யாரிடம் இருந்து தப்புவது என்று பார்த்தால் தன்னிடம் இருந்து தானே தப்புவது போன்றும் கனவுகள் வர தொடங்கின. வாரத்துக்கு மூன்று நான்கு முறை வரும் இந்த கனவுகள், உடலின் முழு சக்தியையும் உறிஞ்சி காலையில் ஜானெட், இரவு முழுதும் உறங்காது இருந்தால் எப்படி அசதியாய் இருக்குமோ அந்த நிலையில் அவரை கொண்டு வந்து வைத்துவிடும்.  இக்கனவுகள் சிறிது சிறிதாக ஜானெட் வாழ்க்கையில்  பெரிய தாக்கத்தை உருவாக்கி நிம்மதி இழக்க செய்கின்றன..

இவை இவ்வாறு இருக்கையில் ஜானெட்டுக்கும் அவர் பணிபுரியும் அலுவலகத்து சட்ட வல்லுனருக்கும் காதல் மலர்கிறது. ஒரு புரிந்துணர்வோடு அது 20 ஆண்டுகளை கடந்து விடுகின்றது.  ஜானெடுக்கு வயது நாற்பதின் மத்தியை தாண்டுகிறது. அப்போது அவருக்கு தான் காதலின் பேரில் இதுவரை  ஏமாற்றப்பட்டதை போல் உணர்வு ஏற்படுகிறது. தனது காதலர் தனக்கு எந்த விதமான அங்கீகாரமும் அளிக்க விரும்பவில்லை என்ற உண்மை அவரை இடி போல் தாக்குகிறது. அப்படியானால் இதுவரை காலமும் தான் ஒரு வைப்பாட்டியாக வாழ்க்கையை வீணடித்தது அவரை மிகவும் பாதிக்கிறது. சட்ட வல்லுனரை பழி வாங்கவேண்டும் என எண்ணுகிறார். ஒரு ஆணுக்கு எங்கு அடித்தால் அதிகம் வலிக்கும் என்று எண்ணுகிறார். எண்ணியவர் ஒரு முடிவுக்கு வந்து சட்ட வல்லுனரின் அலுவலகத்தில்  கையாடல் செய்கிறார். விளைவு சில காலம் வாழக்கையை சிறையில் கழிக்க நேர்கிறது. இப்படி இக்கட்டான மன அழுத்தங்களுக்கு மத்தியில் கனவுகளின் தொல்லையும்  நினைவில் இல்லாத அந்த நான்கு நாட்கள் பற்றி மனதில் எழும் கேள்விகளும் விஸ்வரூபமெடுக்கின்றன. சிறையில் இருந்து வெளியே வந்ததும் இதற்கு ஒரு முடிவு காணவேண்டும் என்று எண்ணுகிறார்.

சிறையில் இருந்து வெளிவந்தவுடன் நெருங்கிய நண்பர் ஒருவருடன் தனது அதி பயங்கர கனவுகளுக்கு முடிவு காணும் முயற்சியில் இறங்குகிறார். குறிப்பாக தனது வாழ்வில் காணாமல் போன நான்கு நாட்களில் தான் அதற்கு விடை இருப்பதாக எண்ணுகிறார். பல விசாரிப்பு, ஆராய்சிகளுக்கு பின் EMDR எனும் சிகிச்சை முறை பற்றி கேள்விப்படுகிறார். EMDR என்பது குறிப்பாக விபத்து, பயங்கர நிகழ்வை பார்த்தல், போர், வன்புணர்வு போன்றவற்றால் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் புதுவகை உளவியல் வைத்திய முறை. EMDR என்பதன் விரிவு Eye Movement Desensitization and Reprocessing. இது அமெரிக்க உளவியலாளரான பிரான்சின் ஷாபிரோ என்பவரால் 1989 இல் வடிவமைக்கப்பட்ட சிகிச்சை முறை. நோயாளியின் கண்களை வைத்தியரின் கை அசைவுகேட்ப வலமிருந்து இடமாகவும் பின் இடமிருந்து வலமாகவும் வேகமாக அசைப்பதன் மூலம் நடந்து முடிந்த நிகழ்வுகளை மீள் கொண்டுவந்து அதன் மூலம் நோயாளியின் அதிர்ச்சி புண்களை ஆற்றும் ஹிப்னோசிஸ் வகை சிகிச்சை முறை தான் இது.ஜானெட் இந்த வைத்திய முறை தெரிந்த  உளவியல் மருத்துவர் பெலிண்டா பிரவுன்-தாமஸ் மூலம் தனது வாழ்வில் காணாமல் போன நான்கு நாட்களை தேட முற்படுகிறார்.  சிறிது சிறிதாக அவருக்கு ஒவ்வொரு நாளாக ஞாபகம் வருகிறது. வருவதோடு நின்றுவிடாமல் ஒரு படம் போல் காட்சிகள் விரிகின்றன. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைகிறார் ஜானெட். அங்கு கனவில் வரும் தப்பி ஓடும் போராட்டத்திற்கும் விடை கிடைகிறது.

* * *

இது வரை நீங்கள் படித்தது தற்போது 64 வயதுடைய ஜானெட் ஹோல்ட் எழுதிய 'The Stranger in my Life' (எனது வாழ்வின் அந்நியன்) எனும் அவருடைய சுயசரிதையின் ஒரு பகுதி. சிறிய அளவிலான 50 அத்தியாயங்களை கொண்ட இந்த புத்தகம் தொடக்கம் முதல் இறுதி வரை ஒரு விறுவிறுப்பான க்ரைம் நாவலுக்கு ஒப்பான வேகத்துடன் எளிய ஆங்கிலத்தில் நகர்கிறது. இந்த சுயசரிதை முழுவதும் வரும் வர்ணிப்புகள், நுணக்கமான உணர்வு வெளிப்பாடுகள் புத்தகத்தின் நம்பகத் தன்மையை உறுதி படுத்துகின்றன.  ஒரு கல்யாணமானவருடன் காதல், சிறை வாழக்கை என வாழ்வின் எதிர்மறை நிகழ்வுகளையும் வெளிப்படையாக விபரித்திருப்பது சுயசரிதையை முற்று முழுதாக்குகின்றது. மேற்கொண்டு புத்தக விபரங்களை கீழ்காணும் சுட்டியில் அறியலாம். : The Stranger in My Life - Janet Holt
                    
"நான் ஒரு புத்தக பிரியர் இப்புத்தகத்தை எப்படியும் படித்து விடுவேன்" என்று நினைபீர்களேயானால் இத்துடன் இந்த பதிவை படிப்பதை நிறுத்திக்கொண்டு விடை பெறுவது நலம். இல்லை எனக்கு அதுவரை காத்திருக்க முடியாது; EMDR மூலம் ஜானெட் வாழ்வில் காணாமல் போன நான்கு நாட்களில் நடந்தது என்ன?  அதன் பின் விளைவு எவ்வாறு அமைந்தது? என்பதை அறிய ஆர்வம் உந்தி தள்ளினால் தொடர்ந்து கிழே படியுங்கள்.  

* * *
அந்த 4 நாட்கள்

அன்றும் வழமை போல் பணிகளுக்காக பண்ணைக்கு செல்கிறார் ஜானெட். சென்று குதிரைக்கு வைக்கோல் அள்ளிக் கொண்டு இருக்கையில் அவர் பின்னால் ஒரு பொதி விழும் சத்தம் கேட்கிறது. திடுக்குற்று திரும்பிப் பார்த்தால் வைக்கோல் போர் மேலிருந்து பிரெட் குதித்து கிழே விழுந்து எழுந்து கொண்டிருந்தார். அந்நிலையில் அவரை பார்த்ததும் ஜானெடுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்துக்கொண்டே 'ஒன்றும் ஆகவில்லையே?' என்று கேட்கிறார்.கேட்டு வாய் மூடும் போது ஏதோ ஆபத்து என்று உள்ளுணர்வு எச்சரிக்கிறது. சிரிப்பு சட்டென அடங்குகிறது. பிரெட்டை உற்று நோக்குகிறார். பிரேட்டோ நிலைகுத்திய பார்வையுடன் ஜானெட்டை நெருங்கி வந்து கொண்டிருக்கிறார். அவரிடம் இருந்து விஸ்கி வாடை குப் என்று ஜானெட்டை தாக்குகிறது. பிரெட் என்ன செய்கிறீர்கள்..? என்று தடுமாறியவாறு கேட்கிறார். பிரேட்டோ "எனக்கு முன்பே தெரியும், நீ எனக்கானவள்" என்று சொல்லிக்கொண்டே ஜானெட்டை தழுவ முயற்சிக்கிறார். ஜானெட்டொ இயன்றளவு விடுபட போராடுகிறார். பிரெட் இப்போது மூர்க்கத்தனமாக ஜானெட் கழுத்தில் கையை வைத்து அழுத்தியவாறே முத்தமிட முயற்சிக்கிறார். கழுத்தின் மேல் உள்ள அழுத்தத்தினால் ஜானெட் சக்தியற்று சோர்ந்து அரை மயக்க நிலைக்கு போய் பிரெட்டிடம் பெண்மையை இழக்கிறார். பின் ஓரளவு நினைவு திரும்பியபோது பிரெட் அவரை  பண்ணையில் உள்ள தனது வீட்டுக்கு இழுத்துச் சென்று செயலற்று இருக்கும் ஜானெட்டை மீண்டும் சூறையாடுகிறார்.  .



மறுபடியும் ஜானெட்டுக்கு சுய நினைவு வந்த போது பிரட்டின் வீட்டின் முன் அறையில் தரையில் கிடப்பதை உணருகிறார். சுற்றும் முற்றும் பார்க்கையில் பிரெட் தூரத்தில் உட்கார்ந்திருப்பது தெரிகிறது. தன் பலத்தை எல்லாம் சேர்த்து பிரெட்டை வாய்க்கு வந்த படி ஏசுகிறார். பிரெட் சலனமற்று உட்கார்ந்து ஜானெட்டை பார்த்துக் கொண்டே இருக்கிறார். பின் எழுந்தவர் 'நீ இப்போ போவதானால் போகலாம்" என்று கூறி கொண்டே தனது அறைக்குள் சென்று விடுகிறார். ஜானெட்டுக்கு ஒன்றும் புரியவில்லை. மனதுள் ஆயிரம் கேள்விகள். நான் இறந்து கொண்டிருக்கிறேனா? பிரெட் என்னை கொலை செய்யப் போகிறானா? இல்லை நான் தப்பி ஓட முயற்சி செய்வேனா என்று சோதிக்கிறானா? என்று சிந்தித்தவாறே வெளிக்கதவை பார்க்கிறார். அது அவள் கிடக்கும் இடத்தில் இருந்து சில அடிகள் தூரத்திலேயே இருக்கிறது. உள்பக்கமாக தாளிடப்பட்டிருக்கிறது. சிறிது நேரம் பொறுத்திருந்து பார்கிறார் பிரெட் அறையில் இருந்து வெளிவருவதாக தெரியவில்லை. வருவது வரட்டும் என்று எண்ணியவாறு மெதுவாக எழுந்திருக்கிறார். உடைகளை சரி செய்து கொண்டு ஓசை படாமல் வெளிக்கதவை நெருங்குகிறார். தாழ்பாளை இயன்றவரை மெதுவாக நீக்க முற்படுகிறார். ஆனால் தாழ்பாள் ஓசை எழுப்புகிறது. இனி தாமதிக்க ஒரு கணமும் இல்லை என முடிந்தவரை வேகமாக சத்தத்தோடு தாழ்பாளை நீக்கி, கதவை திறந்து, வீடு நோக்கி ஓடுகிறார். பயத்தினால் திரும்பி பார்க்க கூட பார்க்காமல் வேகமாக ஓடி வீட்டை அடைகிறார்.

வீட்டில் அப்பா மரண படுக்கையில் இருக்கிறார். அம்மாவோ அப்பாவின் நினைவில் மன அழுத்தத்தில் இருக்கிறார். வீட்டில் நுழைந்தவுடன் ஜானெட்டின் அலங்கோல நிலையை பார்த்து தாயார் என்ன நிகழ்ந்தது என வினவுகிறார். நடந்ததை சொல்லி கட்டி கொண்டு கதறி அழவேண்டும் என்று தோன்றினாலும் வீட்டின் அப்போதைய நிலையை உண்டர்ந்து குதிரையில் இருந்து தவறி  விழுந்து விட்டேன் என்று சொல்லியவாறே அவர் அறைக்கு சென்று தாழிட்டு அழுகிறார். பின் பல மணிநேரம் அதிகம் எடுத்து குளித்து விட்டு நோய்வாய்பட்டு கட்டிலில் படுத்திருக்கும் தகப்பனார் அருகில் அமர்கிறார். நினைவுகள் பின் நோக்கி ஓடுகின்றன. தன் சிறு வயதில் அடிபட்டு வரும் போதெல்லாம் இறுக்கி அனைத்து ஆறுதல் சொல்லும் அப்பா நினைவுக்கு வருகிறார். 'எல்லாம் சரியாகி விடும் அப்படி ஆகவில்லை என்றால் நான் பார்த்து கொள்கிறேன். நீ எதுக்கும் கவலை படாதே" என்று அவர் கூறுவது காதில் எதிரொலிக்கிறது. இக்கணம் மீண்டும் சிறுமியாகி விட மாட்டோமா என்று மனது ஏங்குகிறது. அழுகை பீறிட்டு, கட்டுடைந்த வெள்ளம் போல் வருகிறது. மனது ஓரளவு ஆறும் வரை அழுகிறார். பின், "நான் இப்போ ஓர் வயதுக்கு வந்த பெண். என் பிரச்னையை நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்னும் முடிவுக்கு வந்தவராய் தன் அறைக்கு வந்து படுத்து தூங்கி விடுகிறார்.

மறுநாள் எழுந்தவர், இனி மேல் பிரெட் முகத்தில் முழிப்பதில்லை என முடிவெடுக்கிறார். ஆனால் அவர் பண்ணையில் இருக்கும் தன் விலங்குகளை என்ன செய்வது? எப்படியும் இன்னுமொரு இடம் பார்த்து அவைகளை மாற்றி விடவேண்டும் ஆனால் அதுவரை அவை உயிரோடு இருக்க வேண்டுமே. இதற்கு ஒரே வழி, மிருகங்களை இடம் மாற்றும் வரை, பண்ணைக்கு சென்று உணவு மட்டும் அளித்து விட்டு வருவது என முடிவெடுக்கிறார்.

எழுந்து வழமைக்கு சற்று தாமதமாகவே பண்ணையை அடைகிறார். உள்ளே நுழையுமுன் பிரெட் கண்ணில் தென்படுகிறாரா என சுற்றும் முற்றும் பார்க்கிறார். பிரெட் இல்லை என்று உறுதி செய்துகொண்டு இயன்றவரை வேகமாக உணவளித்து விட்டு ஓடி வீடு வந்து சேர்கிறார். இப்படியே இரண்டு நாட்கள் கரைந்து விடுகின்றன. இன்னும் இரண்டு நாட்கள் தான் மிருகங்களுக்கு வேறு இடம் பார்த்தாயிற்று என்று எண்ணியவாறே நான்காம் நாள் காலையில் பண்ணையை அடைகிறார். வழமை போல் பிரெட் இல்லை என்று உறுதி செய்து கொண்டு உணவெடுக்க பண்டகசாலையை நெருங்குகிறார். அங்கே கதவிலே "I'm sorry. Please look after the animals" எனும் பிரெட் கைப்பட எழுதிய துண்டு சீட்டு தொங்கி கொண்டிருக்கிறது.

எடுத்து படித்த ஜானெட்டுக்கு ஒன்றும் புரியவில்லை. பிரெட் எங்கே? ஒருவேளை வெட்கத்தால் ஊரை விட்டு ஓடி விட்டானா? இல்லை  ஒருவேளை குற்ற உணச்சியால் தற்கொலை?... தற்கொலை! திடீரென பிரெட் மீது ஒரு பரிதாப உணர்வு வர, பண்ணையில் உள்ள பிரெட் வீட்டை நோக்கி ஓடுகிறார். வீடு திறந்திருக்கிறது. கீழ் தளத்தில் தேடுகிறார் பிரெட் இல்லை. மேல் தளத்திற்கு சென்று பிரெட்டின் படுக்கை அறையில் தேடுகிறார் அங்கும் இல்லை. மீண்டும் கீழ் தளம் வருகிறார் . அங்கே பிரெட் சமையல் அறையில் ஜானெட் வருவதை பார்த்துக் கொண்டு நிற்கிறார். ஜானெட்டுக்கு மீண்டும் பயம் கவ்வுகிறது. பிரெட் சிரித்துக்கொண்டே 'நீ வருவாய் என்று எனக்கு தெரியும். எனக்கானவள் அல்லவா நீ. கவலைப்படாதே நாம் இருவரும் புதிய வாழக்கை ஆரம்பிக்கலாம். செல்வத்தை பெருக்கலாம் குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம்" என்று ஏதேதோ சொல்லிக்கொண்டே போகிறார். நடுவில் "நடந்ததை பெற்றோரிடம் கூறினாயா?" என்றும் கேட்கிறார். "ஆம், இப்போது கூட தந்தை போலீஸ் நிலையத்தில் தான் இருக்கிறார். எந்த நிமிடம் வேண்டுமானாலும் போலீஸ் இங்கு வந்து உன்னை கைது செய்யலாம்" என்று பொய் சொல்கிறார் ஜானெட். பிரெட் சற்று தடுமாறுவான், தன்னிடம் மன்னிப்பு கேட்பான், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஓடிவிடலாம் என்று எதிபார்த்த ஜானெட்டுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. பிரெட் வாய் விட்டு சிரித்துக் கொண்டே "நீ போலீசுக்கு போயிருந்தால் கடந்த இரண்டு நாட்களாக பண்ணைக்கு வந்து போய் கொண்டிருக்க மாட்டாய்" என்றவர். "சரி ஒரு தேநீர் குடித்தவாறே மீதியை தொடர்வோமா" என்று கேட்டுக் கொண்டே ஜானெட் அருகில் வருகிறார். மீண்டும் பிரெட் தன்னை களங்கப்படுத்த போகிறான் என்று ஜானெட் உள்ளுணர்வு திருப்பி திருப்பி சொல்ல தொடங்கியது. தாமதப்படுத்தும் ஒவ்வொரு கணமும் தப்பிப்பதற்கு வழியை உருவாக்கும் என்ற எண்ணம் தோன்ற :ஓ... குடிக்கலாமே" என்று பதிலளிக்கிறார் ஜானெட்.



ஒரு வித திருப்தி முகத்தில் வர பிரெட் சமையலறையை நோக்கி நகர்கிறார். உதவிக்கு ஏதும் கிடைக்குமா என்று கீழ் தளத்தை சுற்றி நோக்கும் ஜானெட்டுக்கு மூலையில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் பிரெட்டின் நீளமான வேட்டை துப்பாக்கி கண்ணில் படுகிறது. 'அதை தொடாதே, அதில் குண்டு நிரப்பி ஆயுத்த நிலையிலேயே வைக்கப்படிருக்கிறது' என்று எப்போதும்  பிரெட் கூறுவது நினைவுக்கு வருகிறது. இப்போது ஜானெட்டின் எண்ணம் எல்லாம் பிரெட்டின் கவனம் தன்பால் மீண்டும் வருமுன் துப்பாக்கியை கையில் எடுத்து விட முடியுமா என்பதே. பிரெட்டை பார்க்கிறார். அவர் கேத்தலை எடுத்து குனிந்து தண்ணீர் நிரப்ப தொடங்குகிறார். இதயம் படபடக்க, மனதில் வைராக்கியத்துடன் பூனை போல் அடி மேல் அடி எடுத்து வைத்து, பிரெட்டை நோக்கியவாறே துப்பாக்கியை நெருங்குகிறார் ஜானெட். அவர் மனதில் இப்போது எந்த வித உணர்ச்சிகளும் இல்லை. அவரின் இதய துடிப்பு ஓசை தான் அவர் காதில் கேட்கிறது. கேத்தலில் நீர் பாதி கூட நிரம்பவில்லை என்பது அதன் ஓசையில் இருந்து அவருக்கு தெரிகிறது. பிரெட் இன்னும் முதுகை காட்டிய வண்ணமே தண்ணீர் பிடித்து கொண்டிருக்கிறார். ஜானெட் துப்பாக்கியை கையில் எடுக்கிறார். கைகளில் எந்த வித நடுக்கமும் இல்லை. பிரெட்டின் முதுகை குறிபார்கிறார். இயன்ற மட்டும் பலமாக விசையை அழுத்துகிறார். துப்பாக்கி வெடிக்கவில்லை.

ஒரு கணம் அதிர்ந்து போனவர் துப்பாக்கியை பார்கிறார். அப்போது தான் துப்பாக்கியின் பாதுகாப்பு பிடியை நீக்காதது தெரியவருகிறது. பிடியை நீகுகிறார் மீண்டும் விசையை அழுத்துகிறார். இம்முறை சுடுகிறது. சுருண்டு விழுகிறார் பிரெட். அதன் பின் எதுவும் தீர்க்கமாக ஜானெட்டால் நினைவு கூற முடியவில்லை. களஞ்சியத்திற்கு சென்று 'Wheel Barrow ' எனும் ஒற்றை சக்கர வண்டியை எடுப்பதாகவும், பின் 'Spade' எனும் மண்வாரியை எடுப்பதாகவும் காட்சிகள் வந்ததாக ஜானெட் சொல்கிறார். தன்னால் பிரெட்டின் உடலை அதிக தூரம் எடுத்து என்றிருக்க முடியாது; எனவே அருகில் எங்கேயோ தான் புதைத்திருக்க வேண்டும் என்றும் நம்புகிறார்.

* * *


டாக்டர் மற்றும் வக்கீலின் உதவியோடு போலீசில் சரணடைகிறார் ஜானெட். போலீஸ் ஆரம்பத்தில் நம்ப மறுத்தாலும் பின் டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் 50 ஏக்கர் பண்ணையையுமே கிண்டுகிறார்கள். ஆனால் எங்குமே பிரெட்டின் உடல் கிடைக்கவில்லை. ஆதலால் ஜானெட் கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என ஜானெட்டை வீட்டுக்கு அனுப்பி விடுகிறது போலீஸ்.



ஜானெட்டொ 'நான் தான் பிரெட்டை கொன்று விட்டு பண்ணையில் புதைத்து விட்டேன் என்று தீர்க்கமாக நம்புகிறார். ஏறக்குறைய 40 வருடங்களுக்கு முன் புதைத்தது என்பதால் இன்னும் ஆழமாக கிண்டினால் உடல் கிடைக்கலாம் என்பது அவர் வாதம். ஆனால் அவ்வாறு கிண்டுவதற்கு யாரும் முன் வருவதாக தெரியவில்லை.

"நீதியின் முன் நான் தண்டிக்கப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன்" என்கிறார் ஜானெட். "அவள் ஒரு சாகசக்காரி" என்கிறார்கள் பிரெட்டின் சகோதரி தரப்பினர். "மூளை மிகவும் அபூர்வ சக்தி வாய்ந்தது. ஒரு செயல் உடலுக்கும் மனதுக்கும் தீங்கு விளைவிக்கும் என்றால் அதை நம் நினைவுகளில் இருந்து தற்காலிகமாக அழித்து விடும் வல்லமை மிக்கது" என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். உண்மையில் பண்ணையில் நடந்தது என்ன என்பது அங்கிருக்கும் விலங்குகளுக்கு தெரிந்திருக்கலாம் ஆனால் அவை நமக்கு சொல்லபோவதில்லை.    

(சில நெடுந்தூர பயணங்கள் மேற்கொள்ள இருப்பதால் மீண்டும் ஒரு மாதம் கழித்து உங்களை சந்திப்பேன். )

2 comments:

  1. Replies
    1. மிக்க நன்றி! பதிவின் நீளம் கூடிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

      Delete

உங்கள் கருத்து...